‘நீ தேடும் சமாதானம் கர்த்தரிடத்தில் உண்டு’


‘நீ தேடும் சமாதானம் கர்த்தரிடத்தில் உண்டு’
x
தினத்தந்தி 23 Feb 2017 8:30 PM GMT (Updated: 23 Feb 2017 7:41 AM GMT)

கர்த்தருடைய வார்த்தையை தியானிக்கும் போது உண்டாகும் சமாதானம், உள்ளத்தை சுத்தமாக்குகிறது.

‘‘இதோ நான் அவர்களுக்குச் சவுக்கியமும், ஆரோக்கியமும் வரப்பண்ணி அவர்களை குணமாக்கி அவர்களுக்கு பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்’’ (எரே.33:6).

இயேசு கிறிஸ்து சமாதானப்  பிரபுவாக இருப்பதால் சமாதானத்தின் பூரணராகிய இயேசுவிடத்திலிருந்து மனு‌ஷருக்குச் சமாதானம் உண்டாகிறது. அவருடைய காயங்களிலிருந்து வழிந்த ரத்தம் நமக்கு சமாதானத்தை உண்டாக்குகிறது. பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சமாதானத்தை அனுபவிக்கும் வாசலை இயேசுவின் திருக்காயங்கள் திறந்து வைத்துள்ளன. அவர் சிலுவையில் சிந்திய விலைமதிப்பில்லாத ரத்தம் நம்மை சமாதானத்திலும், ஆரோக்கியத்திலும் நிலைக்க செய்து தீயவரின் பிடியிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது. 

‘‘உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு’’ (சங்.119:165)

கர்த்தருடைய வார்த்தையை தியானிக்கும் போது உண்டாகும் சமாதானம், உள்ளத்தை சுத்த மாக்குகிறது. வசனத்தால் உண்டாகும் ஆறுதலும், மனமாறுதலும் நம்முள் ஒளிந்திருக்கும் நல்ல எண்ணங்களை தட்டி எழுப்புகின்றன. கர்த்தருடைய வசனத்தைத் தியானித்து அதன்படி ஜீவித்தால் தேவன் நமக்கு நதியைப் போன்ற சமாதானத்தை தருவார். 

தேவனுடைய ராஜ்ஜியம் நீதியும், சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோ‌ஷமாக இருக்கிறது. அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். என்ன அற்புதமான சமாதானம் என்று பாருங்கள்.

‘‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்’’ (பிலி.4:7)

தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது. சமாதானத்தை இழந்து போகின்றோம். மறைவாக இருதயத்துக்குள் இருந்து எழும்பும் வீண் சிந்தனைகள் தேவன் அருளும் சமாதானத்தை குலைக்கக்கூடியவை. வீண் சிந்தனைகளினால் உண்டாகும் தீமை எவ்வளவு கொடியது. 

‘‘வீண் சிந்தனைகளை வெறுத்து, வேதத்தில் பிரியப்படுகிறேன்’’ என்று தாவீது கூறுகின்றான். 

நம்முடைய சமாதானத்தைக் குலைக்கக்கூடிய சிந்தனைகளை விட்டு விலகி, சமாதானத்தைக் கெடுக்கும் காரியங்களை வெறுக்க வேண்டும். தேவ சமாதானம் உடையவர்களாய் வாழ வேண்டும். தேவ சமாதானமே எல்லாப் புத்திக்கும் மேலானது.

‘‘தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்’’ (கொலோ.3:5) 

சண்டை, பொறாமை, வைராக்கியம், பகை உணர்வு, விரோதம், கோபம், அசுத்தம், கொலை, வெறி... போன்றவை மனிதனை அசுத்தமாக்கி... தேவனிடமிருந்து விலக்கி வைக்கிறது. மேலும் தேவன் அருளிய சமாதானத்தையும் குலைத்து விடுகிறது. 

பயங்கரமான சிங்கங்களின் குகையில் தானியேலை தள்ளிவிட்டபோதும், உன்னத தேவனின் அருளால் வெளியே வந்தார். மனதில் இருந்த பயத்தை ஸ்தோத்திரங்களாலும், புகழ் பாக்களாலும் மறக்கடித்து இறைவனை துதித்து தப்பித்தார். அன்னாள், தனக்குப்பிள்ளை இல்லாதிருந்தப்போதும், மனம் கலங்கியவளாய் ஆலயத்தில் சென்று உன்னத தேவனை தேடினாள். 

அன்னாளின் விண்ணப்பம் இறைவனால் ஏற்கப்பட்டு... ஆண் குழந்தை பிறக்கவே... சந்தோ‌ஷமாய் வீடு திரும்பினாள். 

‘‘நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோ‌ஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக’’ (ரோம.15:13)

கடல் அலைகளை போல அலை அலையாய் துன்பங்கள் வந்தாலும், இறைவன் கொடுத்த சமாதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் துன்பம் என்ற அலை இறை நம்பிக்கை என்ற கற்பாறையில் மோதும்போது சிதறிப்போகின்றன. எத்தகைய அலை அடித்தாலும் பாறை அசைவதில்லை. பிரச்சினைகளை உடைத்தெறிந்துக்கொண்டே இருக்கிறது. 

யூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு அறிந்திருந்தபோதும் ‘சிநேகிதனே’ என்று அழைத்து சமாதானம் செய்தார். பேதுரு இயேசுவை மறுதலித்து சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். இயேசு அவனை சத்துருவாக எண்ணாது அன்புடன் பார்த்தார். இத்தகைய செயல்பாடுகள் தான் அவர்களை யோசிக்க வைத்தது.

‘உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’. 

பூரண சமாதானத்தைப் பெற்றுக்கொண்ட பவுல் இதுமுதல் ‘நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது’ என்றார். தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி ஆசீர்வதிக்கின்றார். நீ பரலோக தேவனை தேடும்போது சமாதானம் உன் வாழ்க்கையில் உண்டாகும். கர்த்தருடைய வருகையில் பூரண சமாதானத்தோடே அவரை சந்திப்போம். ஆமென்.

அயரின் பூமணி, ஆசீர்வாத சுவிசே‌ஷ ஊழியம், சென்னை–50.

Next Story