அறிவோம் இஸ்லாம் : பூமியின் அடுக்குகள்


அறிவோம் இஸ்லாம் : பூமியின் அடுக்குகள்
x
தினத்தந்தி 7 March 2017 9:10 AM GMT (Updated: 7 March 2017 9:10 AM GMT)

பூமியில் பல அடுக்குகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞான உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.

‘‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’’ (திருக்குர்ஆன்–65:12).

ஏழு வானங்களையும், பூமியில் அவற்றைப் போலவும் படைத்ததாகத் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

நாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல, பிரபஞ்சத்தில் மேலும் ஆறு பூமிகள் இருப்பதாக இந்த வசனத்திற்குப் பொருள் கொள்ளக்கூடாது.

எவ்வாறு விண்ணில் ஏழு வானங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே பூமியும் அதுபோன்று படைக்கப்பட்டுள்ளது என்றே பொருள் கொள்ள வேண்டும். இதனால் நாம் வாழும் பூமி ஒன்றின் மேல் ஒன்றாகப் பல அடுக்குகளைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘பூமி முழுவதும் ஒரே திடப்பொருளால் ஆனது’ என்றே மனிதர்களும் அறிவியல் அறிஞர்களும் கருதி வந்தனர். இப்போதுதான் பூமியில் பல அடுக்குகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞான உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி பூமியின் கட்டமைப்பு மூன்று முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவை மேல் அடுக்கான பூமித்தட்டு, அதற்குக் கீழே அமைந்துள்ள ‘மேன்டில்’ எனப்படும் இரண்டாம் அடுக்கு, உட்கரு எனப்படும் மைய அடுக்கு ஆகும்.

இந்த மூன்று அடுக்குகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

உட்கரு எனப்படும் மைய அடுக்கு (கோர்):–

இந்த அடுக்கு கனம் வாய்ந்த இரும்பு, நிக்கல் ஆகிய உலோகப் பொருட்களால் நிரம்பியுள்ளது. பூமி தோன்றி ஆரம்ப காலத்தில் இது ஒரு நெருப்புக் கோளத்தைப் போல் அதிக வெப்ப நிலையில் இருந்தது. இந்த வெப்ப ஆற்றலின் காரணமாக பூமியின் உள்புறத்தில் இருந்த கனிம, உலோகப் பொருட்கள் உருகிக் குழம்பாகிப் போய் இருந்தன. பூமியின் மையத்தில் நிலவும் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக கனமான உலோகப் பொருட்கள் மையப்பகுதியை நோக்கி ஈர்க்கப்பட்டன. மற்ற மூலக்கூறுகள், பாறைகள் ஆகியவை தத்தம் கனத்திற்கு ஏற்றபடி முறையே மேல் அடுக்குகளில் வெவ்வேறு ஆழத்தில் படிந்து விட்டன. ‘உட்கரு’ எனப்படும் மைய அடுக்கு, உள்மையம், வெளி மையம் என மேலும் இரண்டு கிளை அடுக்குகளாகப் பிரிந்துள்ளது. இரும்பு, நிக்கல் ஆகிய உலோகப் பொருட்கள் உள் மையத்தில் திடத்தன்மையிலும், வெளி மையத்தில் திரவத் தன்மையிலும் அமைந்துள்ளன.

‘மேன்டில்’ எனப்படும் இரண்டாம் அடுக்கு:–

இது பூமியின் மேல் அடுக்கு, மைய அடுக்கு இரண்டிற்கும் இடையே உள்ள அடுக்கு ஆகும். இந்த அடுக்கில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இங்குள்ள உலோகக் கனிமப்பொருட்களும் உருகிக் குழம்பு போன்ற நிலையில் உள்ளன. எரிமலைச் சீற்றத்தின்போது இந்த அடுக்கில் உள்ள பாறைக் குழம்புகளே மேல் அடுக்கைப் பிளந்து கொண்டு சீற்றத்துடன் வெளியேறுகின்றன.

பூமித்தட்டு எனப்படும் பூமியின் மேல் அடுக்கு (கிரஸ்ட்):–

இது பூமி கோளத்தைப் போர்வை போல் மூடியுள்ள மேல் ஓடு ஆகும். இது பூமித்தட்டு என்றும் அழைக்கப்படும். பூமி தோன்றிய பிறகு, குளிர்வடைந்து கெட்டியானதால் இதன் மேற்பரப்பு திடத்தன்மை பெற்றுள்ளது. பூமியின் மேற்பகுதி சுமார் 70 சதவீத (கடல்) நீராலும், 30 சதவீதம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.

வானத்தைப் போலவே பூமியிலும் பல அடுக்குகள் இருப்ப தாகக் கூறிய இறை வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வும் அமைந்துள்ளது.

‘‘நாம் பூமியைப் பல்வேறு திசைகளில் இருந்தும் குறைத்துக் கொண்டே வருகிறோம் என்பது இவர்களுக்குத் தென்படவில்லையா?’’ (திருக்குர்ஆன்–21:44) என்ற வசனம் பூமியின் ஓரங்கள் குறைந்து வருவதைக் கூறுகிறது.

பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளின் பனிக்கட்டிகள், உயர்ந்த மலைச் சிகரங்களின் பனிப்பாறைகள் ஆகியவை அளவுக்கதிகமாக உருகிக் கடலில் கலந்து விடுகின்றன. இதனால் கடலின் நீர் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை அண்மைக் காலத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குர்ஆனின் குரலை வழிமொழிவதாக அமைந்துள்ளது.

‘‘பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?’’ (திருக்குர்ஆன்–78:6).

‘‘அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான்’’ (திருக்குர்ஆன்–43:10).

மேற்கண்ட வசனங்களில் நாம் வாழும் பூமியைத் தொட்டிலாக ஆக்கி இருப்பதாக இறைவன் கூறுகின்றான்.

இந்தப் பிரபஞ்சம் ஒரு நியதிக்குட்பட்டு காலங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சூரியன் காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கில் மறைவது; இதன் காரணமாக இரவு–பகல் ஏற்படுவது; கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை வானில் வலம் வந்து கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் இந்த இயக்கங்களின் வெளிப்பாடு ஆகும்.

இந்தச் சீரான இயக்கத்திற்கு ஈர்ப்பு ஆற்றலே காரணமாகும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஈர்ப்பு ஆற்றலைப் பெற்றுள்ளன.

நாம் ஒரு கயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டு அதன் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு சுழற்றினால் என்ன நிகழும்? கயிற்றில் கட்டப்பட்டுள்ள கல் வட்ட வடிவத்தில் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் அல்லவா? கயிற்றின் வழியே இது நம்முடன் ஒரு ஆற்றலால் பிணைக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஈர்ப்பு ஆற்றல்’ என்று அழைக்கிறோம்.

மேலே குறிப்பிட்டதைப் போல பூமியின் மையத்தில் செயல்படும் ஈர்ப்பு ஆற்றலே, பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் பிடித்து வைத்துள்ளது. இந்த ஈர்ப்பு ஆற்றல் இல்லாது போனால் நாம் விண்ணிற்கு வீசி எறியப்பட்டிருப்போம்.

பூமி, சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல், ரங்கராட்டினம் போல சுற்றி வருகிறது.

மேற்கண்ட வசனத்தில் இந்தப் பூமியைத் தொட்டிலாக அமைத்திருப்பதாக இறைவன் கூறுவதன் மூலம், புவி ஈர்ப்பு விசை பற்றிய கருத்து இங்கே மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.

Next Story