திருஷ்டி தோஷத்தை விலக்கும் தெய்வ வழிபாடுகள்


திருஷ்டி தோஷத்தை விலக்கும் தெய்வ வழிபாடுகள்
x
தினத்தந்தி 15 March 2017 6:27 AM GMT (Updated: 15 March 2017 6:26 AM GMT)

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது முன்னோர் வாக்கு. சிலரது பார்வைகள் பட்டாலே உடனடியாக அதன் பலன் தெரியும்.

பொதுவாகவே குழந்தைகள் அழகாக இருந்தால் பார்ப்பவர்கள் அந்தக் குழந்தையைத் தூக்கி கொஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தைகளின் மீது பதியும் சிலரது பார்வையின் பலத்தால் அந்தக் குழந்தைகள் இரவில் அழத் தொடங்கும். சாப்பாட்டைக் கூடத் தவிர்த்து விடும். எனவேதான் அழகான குழந்தைகளுக்கு அலங்காரம் செய்பவர்கள் குழந்தையின் கன்னத்தில் பொட்டு வைத்துவிடுவர். அதுவும் கருப்பு பொட்டு வைப்பதுதான் முக்கியத்துவம்.

கைகளில் கருப்பு வண்ணக் காசிக்கயிறு கட்டிவிடுவர். அதே போல தலைமுடியைக் கூடக் கலைத்து விடுவர். இதன் மூலம் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது நம்பிக்கை. சிலருடைய பார்வையின் வலிமையில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது வழிபாடாகும்.

ஒருசிலர் பிரம்மாண்டமான வீடு களைச் சிலர் கட்டிப் புதுமனை புகுவிழா நடத்துவர். அப்பொழுது அந்த நிகழ்ச்சிக்கு நூற்றுக்கணக்கானவர்கள் வருவர். ஒருவர் பார்வையைப் போல மற்றொருவர் பார்வை இருக்காது. அதற்காகத்தான் திருஷ்டிப் பூசணிக் காயைத் தொங்கவிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் அடுக்கு மாடியாக இருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே கட்டிடம் ஆஹா இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்று வியப்பில் ஆழ்வர். மனதில் நம்மால் முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பும் ஒருசிலருக்கு இருக்கும். இந்த ஏக்கப் பெருமூச்சுகளைத் தவிர்ப்பவை தான் யோகங்களை வழங்கும் யாகங்கள்.
ஒரு மனிதன் கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து யோகமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் ஹோமங்கள் தான் கைகொடுக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை முழுமையாக ஆராய்ந்து அவர்களது ராசி, நட்சத்திர அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில் வீட்டில் உள்ள மையமான இடத்தைத் தேர்ந்தெடுத்து எந்த அமைப்பில் ஹோமம் வைத்தால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், நவக்கிரக ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், வித்யார்த்த ஹோமம் என எத்தனையோ ஹோமங்கள் இருக்கின்றன. இவற்றில் எந்த ஹோமம் நமக்குப் பொருத்தமான ஹோமம் என்பதை ஆராய்ந்து வீட்டில் செய்வதா, கோவிலில் செய்வதா என்பதை முடிவு செய்து செய்தால் நற்பலன்கள் கிடைக்கும். இல்லையெனில் அதுபோல ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொண்டும் நற்பலன் பெறலாம். கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்ற ஹோமங்களை வீட்டில் வைக்கலாம், இல்லையென்றால் கோவிலில் கூட யோகம் தரும் நாளில் தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். அதனால் நற்பலன்களை நாம் உடனடியாகப் பெற முடியும். தடைகள் அக லும். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

ஹோமங்களை வீட்டில் நடத்துபவர்கள் அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்வது நல்லது.

பொதுவாகவே நல்ல திறமையிருந்தும் முன்னேற முடியவில்லையே என்று நினைப்பவர்கள், நாள் கடந்தும் கல்யாணம் ஆகவில்லையே என்று நினைப்பவர்கள், எந்தக் காரியத்தையும் செய்யத் தொடங்கும் போதே தடை ஏற்படுகின்றதே என்று நினைப்பவர்களும், நல்ல நிலையில் இருந்து சாதாரண நிலையை அடைந்தவர்களும் சகல யோகங் களைப் பெறவும், சக்கரவர்த்தியைப் போல வாழவும் துர்க்கை, வராஹி போன்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது.

மற்றவர்களின் பார்வை பலன் நம் மீது பதிவதால் தேக ஆரோக்கியங்களில் கூடச் சிலருக்கு சீர்குலைவுகள் ஏற்படு கின்றது. அவைகள் எல்லாம் மாறி தேகநலம் சீராக வேண்டுமானால் தெய்வ வழிபாடுகள் கைகொடுக்கும். திருஷ்டி தோஷங்களைப்போக்கும் தெய்வ வழிபாடுகளை முறையாக அறிந்து செய்தால் வாழ்வில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கி வளர்ச்சி கூடும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.
-எஸ்.அலமுஸ்ரீனிவாஸ்

இல்லறம் இனிமையாக அமைய..

ஒருவருக்கு சுக்ர பலம் இருந்தால் இல்லறம் நல்லறமாக அமையும். கணவன் - மனைவி உறவு பலப்படும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். சுக்ரனுக்கு பொருத்தமான நட்சத்திரமும், நாளும் சேரும் வேளையில், மொச்சை தானம் கொடுத்து முறையாக வழிபாடு செய்தால் இச்சைகள் அனைத்தும் நிறைவேறும். இனிய இல்லறம் உருவாகும். சுக்ர பலம் வக்ரமடைந்தால் வாழ்க்கைப் பாதை திசை மாறும். அப்படி இருப்பவர்கள் சுக்ர ஸ்தலம் சென்று வழிபட்டு வரலாம். நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனை வெள்ளிக்கிழமையன்று வழிபடலாம்.

Next Story