பங்குனியில் அருள்கொடுக்கும் தங்க ரத முருகன்


பங்குனியில் அருள்கொடுக்கும் தங்க ரத முருகன்
x
தினத்தந்தி 15 March 2017 7:50 AM GMT (Updated: 15 March 2017 7:50 AM GMT)

வாழ்க்கை வளமாக இருக்க, எதையேனும் ஒன்றை நாம் நம்புகின்றோம். அந்த நம்பிக்கையை பங்குனி மாதத்தில் முருகன் மீது வைக்கவேண்டும்.

‘நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு’ என்பது முன்னோர் வாக்கு.
கந்தனின் கருணையை நாம் அளவிட்டுச் சொல்ல முடியாது. அழுது தொழுதவருக்கு அருள் கொடுக்கவும், பொருள் கொடுக்கவும் காத்திருப்பவர் முருகப்பெருமான். சண்முகக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த குமரகுருபர சுவாமிகள் ஒரு பிறவி ஊமை. இதனால் அவரது பெற்றோர் மனம் வாடினர்.

ஐந்து வயதாகியும் தங்கள் பிள்ளைக்கு பேச்சு வரவில்லையே என்று பரிதவித்தனர். திருச்செந்தூருக்கு மகனை அழைத்துச் சென்று, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் தங்கி விரதமிருந்து செந்தில் ஆண்டவரை வழிபட்டனர்.

திடீரென ஒருநாள் உறக்கத்தில் இருந்த பெற்றோரை ‘அம்மா’ என்று வாய் திறந்து அழைத்தான் சிறுவன் குமரகுருபரன். ஊமைக் குழந்தை பேசியதைக் கண்டு பெற்றோர் வியந்தனர். திருச்செந்தூர் வேலவனே, வேலால் நாவில் எழுத, அந்த நேரத்தில் குமரகுருபரர் பாடியதே ‘கந்தர் கலிவெண்பா’.

சண்முகக் கவிராயர்- சிவகாமசுந்தரியின் நம்பிக்கை வீண் போகவில்லை. அங்ஙனம் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் கந்தனை பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றங்கள் வந்து சேரும்.

முருகனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. எனவேதான் அவனை ‘ஆறுமுகம்’ என்று அழைக்கிறோம்.

அப்படிப்பட்ட ஆறுமுகத்திற்கும், 12 காதுகள் உண்டல்லவா? அந்த 12 காதுகளும் எவை எவற்றையெல்லாம் கேட்க காத்திருக்கின்றது என்று முத்துக் குமாரசாமி திருவருட்பாவில் சிவஞானதேசிகர் அழகாக விளக்கியுள்ளார்.

* தாயின் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது
* தந்தையின் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது
* மாமனாகிய திருமால் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது
* ஆனைமுகன் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது
* நவ வீரர்களின் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது
* பிரம்மனின் துதி கேட்க ஒரு காது
* விண்ணவருக்கு அரசனான இந்திரன் சொல் கேட்பதற்கு ஒரு காது
* தெய்வானை சொல் கேட்பதற்கு ஒரு காது
* வள்ளி சொல் கேட்பதற்கு ஒரு காது
* அசுரர்கள் சொல் கேட்க ஒரு காது
* மறை துதிக்கு ஒரு காது
* அடியவர்கள் சொல் கேட்க ஒரு காது

‘இப்படி உனது 12 செவிகளையும் வைத்துக் கொண்டு எனது சொல்லைக் கேளாமல் இருக்கலாமா?. எனது குறைகளை எவரிடம் நான் முறையிடுவேன் பாலமுத்துக் குமரா?’ என்று அழகாக எடுத்துரைப்பார்.

அப்படிப்பட்ட முருகப்பெருமானிடம் நம்முடைய மனக்குறை களைச் சொன்னால், மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதக்க வைப்பார். பன்னிரு கரங்களாலும் வரங்களை அள்ளித்தரும் முருகப்பெருமானை, பங்குனி 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 9.4.2017 அன்று பங்குனி உத்திரப் பெருநாளில் வழிபடுவது நல்லது.

முருகன்-தெய்வானை திருமணம் நடைபெற்ற நாள் பங்குனி உத்ரம் என்பர். அதைப் போல ராமர்-சீதை திருமணம் நடைபெற்றதும், சுந்தரேஸ்வரரை மீனாட்சி மணந்து கொண்டதும் இதே நாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ரதிக்காக மன்மதனை சிவபெருமான் உயிர்ப்பித்துத் தந்ததும் இந்நாளே. தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற இந்த நாளில் திருமணத் தடை ஏற்பட்டவர்கள் விரதமிருந்து மாங்கனி படைத்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. பங்குனி உத்திர விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்றும் அழைப்பர்.

அன்றைய தினம் இல்லத்துப் பூஜையறையில் வள்ளி-தெய்வானையுடன் இணைந்த படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பங் களும், நைவேத்தியங்களும் வைத்து, கவச பாராயணங்களை படிப்பது நல்லது. குத்துவிளக்கின் கீழே இடும் கோலம் பின்னல் கோலமாக அல்லாமல், சதுரம், முக்கோணம், அறுங்கோணத்தில் அமைந்த கோலங்களாக இடம் பெற வேண்டும். கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான், ‘புள்ளி’ எனப்படும் வாரிசு பெருகும் என்பது முன்னோர் வாக்கு.
மாங்கனி கிடைத்தால் மாங்கனி வைக்கலாம். இல்லையேல், தேன் கதலியோடு, தேனும், திணை மாவும் நைவேத்தியமாக வைக்கலாம். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.

அன்றைய தினம் முருகனுக்கு சர்க்கரை அபிஷேகம் செய்தால், அவன் அக்கறையோடு நமக்கு அருள்வான். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் அஞ்சாத வாழ்வை அளிப்பான். பாலாலும், பன்னீராலும் அபிஷேகம் செய்தால் வாழ்நாளை நீடித்துக் கொடுப்பான். பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களுக்கு அருகில் தண்ணீர் பந்தல் வைத்து, பக்தர் களுக்கு நீர்மோர் அளித்தால் எண்ணிய பலன் கைகூடும்.

Next Story