வேண்டுதலை நிறைவேற்றும் தாந்தோன்றியம்மன்


வேண்டுதலை நிறைவேற்றும் தாந்தோன்றியம்மன்
x
தினத்தந்தி 22 March 2017 9:47 AM GMT (Updated: 22 March 2017 9:46 AM GMT)

வருடந்தோறும் காணும் பொங்கல் அன்று, இத்தல அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள். அன்றைய தினம் தாந்தோணி அம்மன் சிறப்பான அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே ஆக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த தாந்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள அம்மனை வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பையில் ரத்தம் படர்ந்து வழிந்தது. இதனைக் கண்ட அந்த விவசாயி, அலறியபடி அங்கிருந்து ஊருக்குள் ஓடினார். பின்னர் ஊர் மக்களிடம் நடந்ததைக் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஓரிடத்தில் இருந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. ரத்தம் வர என்னக் காரணம்? என்று நினைத்த மக்கள் அந்த இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்தனர்.

அந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கு ஒரு அம்மன் கல் சிலை இருந்தது. அதில் இருந்து தான் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அப்போது ஒரு பெண் அருள்வாக்கு கூறினாள். அவர், ‘இது சாதாரண கல் சிலை இல்லை. தெய்வ சக்தி படைத்த சிலை. நான் மக்களுக்காகவே, அவர்களின் குறைகளை தீர்ப்பதற்காகவே இங்கு தோன்றியிருக்கிறேன். என்னை வழிபடும் அனைவருக்கும் நான் நினைத்த காரியங்களை முடித்துக் கொடுப்பேன்’ என்றார்.

இதையடுத்து அந்த அம்மன் சிலையை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தனர். பக்தர்களின் குறை தீர்ப்பதற்காக தானாகவே தோன்றியதால், அந்த அம்மனுக்கு ‘தான்தோன்றி அம்மன்’ என்று பெயர் வைத்து வழிபட்டனர். முதலில் சிறிய ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் மண்டபம், கோபுரம், மதில் சுவர் அமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆக்கூரில் தானாக தோன்றிய தாந்தோணி அம்மன், தோன்றிய நாள் முதல் மக்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார். அம்மனிடம் வந்து பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், பக்தர்களின் குறைகள் தீர்வதுடன், அவர்களின் வாழ்க்கையில் சுகம், வசதி, மகிழ்ச்சி போன்றவை வந்தமைவதாக பக்தர்கள் பலரும் கூறுகின்றனர். இதனால் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பக்தர்கள் பலரும் தங்கள் வேண்டுதல் நிறைவேறிவிட்டால், இத்தல அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மக்கள் பலருக்கு இந்த அம்மன் குல தெய்வமாக உள்ளது. இதனால் பலரும் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை இந்த ஆலயத்தில் வைத்தே நடத்துகின்றனர். குறிப்பாக திருமண நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஆரம்ப காலத்தில் தான்தோன்றி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த அம்மன், இப்போது தாந்தோணி அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

தற்போது இத்தல அம்மனுக்கு கோவில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் காணும் பொங்கல் அன்று, இத்தல அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள். அன்றைய தினம் தாந்தோணி அம்மன் சிறப்பான அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், செய்யாறில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

Next Story