நினைத்ததை நிறைவேற்றும் பிரம்மதேசம் கயிலாசநாதர்


நினைத்ததை நிறைவேற்றும் பிரம்மதேசம் கயிலாசநாதர்
x
தினத்தந்தி 22 March 2017 9:50 AM GMT (Updated: 22 March 2017 9:50 AM GMT)

பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர், இலந்தையடிநாதர் எனும் சிவ சுயம்புலிங்கத்தை இங்கு கண்டுபிடித்து முதன் முதலில் பூஜை செய்து வழிபட்டார்.

நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலைச்சாரலை அடுத்துள்ள அம்பாசமுத்திரத்தில் இருந்து வடமேற்கில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பிரம்மதேசம் என்ற ஊர். இந்த ஊரின் நடுவில் அமைந்துள்ள கயிலாசநாத சுவாமி கோவில், சிற்பக்கலைகளை உலகிற்கு பறைசாற்றும் விதமாக திகழ்கிறது.

பெயர்க் காரணம்

பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர், இலந்தையடிநாதர் எனும் சிவ சுயம்புலிங்கத்தை இங்கு கண்டுபிடித்து முதன் முதலில் பூஜை செய்து வழிபட்டார். இதனால் பிரம்மனின் நினைவாக இந்த ஊருக்கு பிரம்மதேசம் என்ற பெயர் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மற்றொன்று தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது அவன் இந்த பகுதிகளை கைப்பற்றி சோழ நாட்டோடு இணைய வைத்தான். இவ்வூர் அருகில் உள்ள திருவாலிநாதர் சுவாமி கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு இந்த ஊரில் கொலுவீற்றிருக்கும் கயிலாசநாதர், பிரஹந்நாயகி ஆகியோரின் அருளால் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்தது. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன், இந்த ஊரை அந்தணர்களுக்கு காணிக்கையாக கொடுத்தான். நான்மறைகள் ஓதிய அந்தணர்களுக்கு மன்னர், மானியமாக வழங்கியதால் ‘ராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ அல்லது ‘பிரம்மதாயம்’ என பெயர் கொண்டு பின்னர் பிரம்மதாயம் என்பது ‘பிரம்மதேசம்’ என்று திரிவடைந்ததாக கூறப்படுகிறது.

ஆலய அமைப்பு

ஏழு நிலை ராஜ கோபுரத்துடன் கயிலாயநாதர் கோவில் கம்பீரமாக நிற் கிறது. ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் வசந்த மண்டபம், நெல் குத்தும் பிறை என்ற ஒரு மிகப்பெரிய அறை ஆகியவற்றை காணலாம். அக்காலத்தில் ஊரில் உள்ள வயல்களில் விளையும் நெல் மூட்டைகள் அனைத்தும் கோவிலுக்கு சேகரிக்கப்படுமாம். கோவிலின் தினசரி நிவேதனங்களுக்கும், விழாக்காலங்களுக்கும், பஞ்ச காலத்திற்கும், போர்க் காலங்களிலும் மக்களுக்கு உணவளிக்க தேவைப்படும் அரிசி இந்த நெல்குத்தும் பிறையிலேயே கைக்குத்தலாக குத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவிலின் உள்ளே நுழைந்ததும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிலை அனைவரையும் கவர்வதாக உள்ளது. இதனை அடுத்துள்ளது முகப்பு மண்டபம். மரத்தினால் செய்யப்பட்ட இந்த மண்டபத்தின் மேற்கூரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து சில அடி தூரத்தில் திருவாதிரை மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒரு தூணில் ராமர் அம்போடு மறைந்திருக்கும் காட்சியும், மற்றொரு தூணில் வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சியும் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான வி‌ஷயம் என்னவென்றால், ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ள தூணில் இருந்து பார்த்தால் வாலி–சுக்ரீவன் செதுக்கப்பட்ட தூணும், அவர்களது உருவமும் நன்கு புலப்படும். அதே நேரம் வாலி–சுக்ரீவன் உருவம் பொறித்த தூணில் இருந்து பார்த்தால் ராமர் இருக்கும் தூண் தெரியாது.

திருவாதிரை மண்டபத்தை அடுத்து புணுகு நடராஜர் சன்னிதி உள்ளது. வழக்கமாக நடராஜர் சிலை ஒரு சக்கர வட்டத்துக்குள்தான் செதுக்கப்படும். ஆனால் இங்கு ‘ஓம்’ என்ற பிரணவத்துக்குள் நடராஜர் வீற்றிருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை அன்று மட்டும்தான் இவருக்கு அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் இவருக்கு வெறும் புணுகு காப்புதான்.

தொடர்ந்து கருவறையில் மூலவரான கயிலாசநாதர் சன்னிதி இருக்கிறது. அதையடுத்து பிரஹந்நாயகி அம்பாள் சன்னிதி உள்ளது. இந்த அம்மனுக்கு புடவை சாத்துவதாக வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு விரைவில் நோய் நீங்கி விடுவதாக நம்பிக்கை. நோய் நீங்கி இந்த அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக சாத்திய புடவைகள் மலைபோல் குவிந்து கிடப்பதை காணலாம்.

இது தவிர முருகனுக்கு, சப்தமாதர்களுக்கு, வல்லப கணபதிக்கு என தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி சற்றே வித்தியாசமானவராக காணப்படுகிறார். மற்ற கோவில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, சின்முத்திரை காட்டியபடி அருள்பாலிப்பார். இங்குள்ள தட்சிணாமூர்த்தியோ, ஆத்ம வியாக்யமூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

பத்ரவனேஸ்வரர் என்று அழைக்கப்படும் இலந்தையடிநாதருக்கு தனிச்சன்னிதி உள்ளது. இவர், பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகள் வணங்கும் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார். இத்தலம் நவக்கிரகங்களில் சூரியனுக்கு உரிய தலமாகவும் விளங்குகிறது. இதில் ஆச்சரியமான வி‌ஷயம் என்னவென்றால், இக்கோவிலில் நவக்கிரக சன்னிதியே கிடையாது என்பது தான்.

சூரியன் வழிபடும் தலம்

தட்சிணாயனம், உத்தராயணம் என சூரியனின் பாதையை வைத்து இரு காலங்களாக பிரித்தார்கள். அதாவது உத்தராயணத்தில் வடமேற்கு திசையிலும், தட்சிணாயனத்தில் தென் மேற்கு திசையிலும் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். இரு வேறு எதிர், எதிரான பாதைகள். ஆனால் இக்கோவிலில் இரு காலங்களிலும்(தட்சிணாயனம், உத்தராயணம்) சூரியன், கயிலாசநாதர் கருவறை வந்து தனது வெம்மையான கரங்களால் இறைவனை தழுவுகிறார். அந்த நேரத்தில் இத்தல இறைவனை வழிபட்டால் வேண்டியது அனைத்தும் நினைத்தபடி கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

இத்தலத்தில் சரஸ்வதிக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இங்கு தாமிரபரணி உத்தரவாகினியாக ஓடுகிறாள். அதாவது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கோவிலை வலம் வந்து வணங்குகிறாள். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் தங்களது கால்களை நனைத்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதியினர், இந்த ஆற்றில் குளித்த பின்னரே இலந்தையடிநாதரை தரிசிக்கச் செல்கிறார்கள்.

ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாகவும், தென்மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இக்கோவில். பிரம்ம தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கயிலாசநாதரை வலம் வருவதால் காசிக்கு சென்று சிவதரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் இங்கும் கிடைக்கும்.

திருவிழாக்கள்

இக்கோவிலில் பங்குனி உத்திர திரு விழாவும், ஐப்பசி திருக்கல்யாண விழாவும், பவித்ரோத்சவம், வசந்த திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோ‌ஷம், சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி போன்ற விழாக்களும், தினசரி பூஜைகளும் நடந்து வருகிறது.

இக்கோவிலில் மார்ச் மாதம் 25–ந் தேதி (சனிக்கிழமை) லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், 2017–ம் ஆண்டின் முதல் மகாபிரதோ‌ஷ வழிபாடும் நடக்கிறது. அன்று 1008 செவ்விள நீரால் சுவாமி, அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகமும், ஆயிரக்கணக்கான தாமரை, செண்பகம், மனோரஞ்சித மலர்களால் மட்டும் அலங்காரமும் செய்யப்பட உள்ளது. இந்த நாளில் அனைவரும் இவ்வாலயத்திற்கு சென்று பிரஹந்நாயகி அம்பாள் சமேத கயிலாச நாதரை வழிபட்டு அவர்களின் அருளை பெறுவோமாக!

திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வந்து அங்கிருந்து மினி பஸ் மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

–நெல்லை வேலவன்.

நாலாயிரத்தம்மன்

சோழர்கள் காலத்தில் இந்த ஊர் மிகப்புகழ் பெற்று விளங்கியது. மிகவும் வளமான ஊர் என்பதால் அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்களின் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இதனால் இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்கென ராஜராஜ சோழன் தன்னுடைய படைவீரர்கள் நாலாயிரம் பேரை, இங்கு காவல் வைத்திருந்தான். இந்த காவல் வீரர்கள் வழிபட்ட துர்க்கைக்கு, நாலாயிரத்தம்மன் என்று பெயர். இன்றும்கூட நாலாயிரத்தம்மன் கோவில் கயிலாசநாதர் கோவிலை ஒட்டியே காணப்படுகிறது. ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் நாலாயிரத்தம்மன், பஞ்சம், நோய், திருடர் பயம் போன்றவற்றில் இருந்து தங்களைக் காப்பதாக இந்த ஊர் மக்கள்  நம்புகின்றனர்.

Next Story