புனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா?


புனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா?
x
தினத்தந்தி 23 March 2017 11:15 PM GMT (Updated: 23 March 2017 8:20 AM GMT)

மனம் தூய்மைபட நல்ல சிந்தனைகள் நம்முள் எழ வேண்டும். அப்போது தான் இறைவன் நம் மனதை விரும்புவான்.

ருமுறை கோரா கும்பாரர் என்ற ஞானியிடம், அவரது அன்பர்கள் சிலர் தீர்த்த யாத்திரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் அந்த ஞானி, ‘நான் வருவதற்கு சரியான விதி விதிக்கப்படவில்லை. ஆதலால் நீங்கள் போய் வாருங்கள்’ என்று கூறினார்.

இதை கேட்ட அன்பர்கள், கோரா குரும்பாரரிடம், ‘தீர்த்த யாத்திரை சென்று வந்தால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும். ஆதலால் வாருங்கள். நம்முடைய பாவத்தை இறைவன் தீர்த்து வைப்பார்’ என்று கூறி வற்புறுத்தினர்.

இதைக் கேட்டதும் கோராகும்பாரர், ‘அன்பர்களே! சில சூழ்நிலைகளால் என்னால் தீர்த்த யாத்திரை வர இயலவில்லை. ஆகவே எனக்கு பதிலாக ஒரு சிறு பாகற்காயை உங்களோடு எடுத்துச் சென்று, நீங்கள் நீராடும் தீர்த்தங்களில் நனைத்து எடுத்து வாருங்கள்’ என்று கூறினார்.

அன்பர்களும், ஞானி கொடுத்த பாகற்காயை எடுத்துச் சென்று, தாங்கள் நீராடிய தீர்த்தங்களில் நனைத்து எடுத்து வந்து ஞானியிடம் கொடுத்தனர்.

அன்பர்கள் கொடுத்த பாகற்காயை வாங்கிய கோராகும்பாரர், உடனே அதை பல துண்டு களாய் நறுக்கினார். பின்னர் பாகற்காய் துண்டுகளை அன்பர்களிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். ஞானியின் இந்தச் செயலால் திகைத்த அன்பர்கள் யோசித்தபடியே பாகற்காயை சாப்பிட்டனர். ஆனால் பாகற்காயின் கசப்பின் காரணமாக சாப்பிட முடியாமல் வாயிலிருந்து அதை எடுத்து வெளியே எறிந்தனர். பின்னர் சற்று கோபத்துடன் ஞானியைப் பார்த்து, ‘தவசீலரே! தாங்கள் செய்த இந்த செயல் நியாயமா?’ என்று கேட்டனர்.

இதைக் கேட்ட கோராகும்பாரர் கலகலவென சிரித்தபடியே பேச ஆரம்பித்தார். ‘அன்பர்களே! நான் செய்த சிறு தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் நான் கொடுத்த பாகற்காயை நீங்கள் புனித தீர்த்தத்தில் நனைத்து எடுத்து வந்ததும் அதன் இயல்பை அது மறக்கவில்லை. மாறாக பாகற்காய் கசக்கிறது. அது போல் தூய மனம் இல்லாமல் எத்தனை தீர்த்தங்களில் நீராடினாலும், நம்முடைய மனதில் இறைவன் குடி கொள்ள மாட்டான். நம்மை பற்றிய பாவமும் நீங்காது. மனம் தூய்மைபட நல்ல சிந்தனைகள் நம்முள் எழ வேண்டும். அப்போது தான் இறைவன் நம் மனதை விரும்புவான். இதை தாங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே, இந்த சிறிய தவறை செய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்றார்.

ஞானியின் வார்த்தையைக் கேட்டதும்தான் இறை அன்பர்கள் உண்மையை உணர்ந்தனர். கோராகும்பாரரிடம் மன்னிப்பு கேட்டனர்.

Next Story