வாய்மையால் பிறவாநிலை அடைந்த அரிச்சந்திரன்


வாய்மையால் பிறவாநிலை அடைந்த அரிச்சந்திரன்
x
தினத்தந்தி 23 March 2017 11:30 PM GMT (Updated: 23 March 2017 8:24 AM GMT)

சத்தியசீலனான அரிச்சந்திரன் தனது முற்பிறவியில் திரிலோசனனாக பிறந்திருந்தான். அப்போது விசுவாமித்திரரிடம், ‘மகரிஷியே! நான் பிறவாநெறி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டான்.

ண்மை சாகா வரம் பெற்றது. இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அது வெளியே வந்து விடும். பொய் சொல்லி தப்பித்து கொள்வதை விட உண்மை சொல்லி மாட்டிக் கொள்வது எவ்வளவோ மேல் என்பார்கள் பெரியவர்கள். ஒரு உண்மையை மறைக்க ஒரு பொய் சொன்னால், அந்த பொய்யை நிரூபிக்க மேலும் பல பொய்கள் சொல்ல வேண்டியதிருக்கும். உண்மை உரைப்பதனால் பொய் சொல்லி விட்டோம் என்று நமது மனச்சாட்சி நம்மை துன்புறுத்தாது. அதே நேரத்தில் அறநெறிக்காக பொய் சொன்னால் தவறில்லை. கொலை பாதக எண்ணத்தோடு ஒருவனை தேடி நம்மிடம் யாராவது வந்தால், அந்த இடத்தில் அவன் இருக்கும் இடம் தெரிந்தாலும் அங்கு பொய் சொன்னால் தவறு இல்லை. அறநெறியுடன் அந்த பொய் இருக்க வேண்டும்.

சத்தியவானாக வாழ நாம் ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல. உண்மை நெறியுடன் வாழ்ந்ததால் தான் இப்போதும் அரிச்சந்திரன் பெயர் நிலைத்து இருக்கிறது. தர்மநெறியுடன் உண்மையை பேசி வாழ்ந்தால் தான், பிறவாநிலையை அடைய முடியும். உண்மையை மட்டுமே பேசியதன் காரணமாக, மனைவி, மகனை விற்று சுடுகாட்டில் பிணம் எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாலும், இறுதியில் உண்மைக்கு கிடைத்த பரிசாக அவனும் அவன் மனைவி மக்களும் பிறவாநெறி நிலையை அடைந்தனர்.

சத்தியசீலனான அரிச்சந்திரன் தனது முற்பிறவியில் திரிலோசனனாக பிறந்திருந்தான். அப்போது விசுவாமித்திரரிடம், ‘மகரிஷியே! நான் பிறவாநெறி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டான்.

அதற்கு விசுவாமித்திரர், ‘திரிலோசனா! நீ பல பிறவிகள் எடுத்து அனுபவிக்க வேண்டிய சஞ்சித வினைகள் நிறைய இருக்கின்றன. நீ வாய்மை தவறாதவனாக இருந்தால், ஒரே பிறவியில் அத்தனை வினைகளையும் நுகர்வாயானால் உனக்கு பிறப்பு நேராது’ என்றார்.

இதைக் கேட்ட திரிலோசனன், ‘தவசீலரே! பிறவாநிலையை பெற தான் எனக்கு விருப்பம். எனவே எனது ஒரே பிறவியில் அத்தனை வினைகளையும் அனுபவித்து பிறவாநிலையை அடைய தங்களின் ஆசி கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினான். விசுவாமித்திரரும் அரிச்சந்திரனுக்கு ஆசி வழங்கினார்.

அதன்படி மறுபிறவியில் திரிலோசனன், அரிச்சந்திரனாக பிறவியெடுத்தான். தனது நாவில் இருந்து உதிர்க்கும் வார்த்தை வாய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவித்தான். தனது மனைவி, மகனையும் அடிமைகளாக விற்றான். மயானத்தில் பிணத்தை எரிக்கும் வேலையை செய்தான். இறுதியில் அவனது வாய்மை வென்றது. இறைவனின் திருவருளால் பிறவாநெறி நிலையை அடைந்தான். அவனது வாழ்க்கையில் அடுக்கடுக்காக துன்பங்களை கொடுத்தவர் விசுவாமித்திரர் என்றாலும், அரிச்சந்திரன் பிறவாநிலையை அடைவதற்காகத்தான் அவ்வாறு செய்தார் என்பதை நாம் உணர வேண்டும்.

ஆனால் நம்மை மீண்டும், மீண்டும் துன்பம் நெருங்குகிறதோ என்று கவலை அடைய வேண்டாம். வாழ்க்கையின் தத்துவமே இது தான். எதுவும் நிலையானது அல்ல. மாற்றம் ஒன்றே நிலையானது. இரவு, பகல் போல் இன்பமும், துன்பமும் மாறி, மாறி வரும். இதை உணர்ந்தால் வாழ்வில் என்றும் இன்ப மயம் தான்.

– குருவன்கோட்டை ஸ்ரீமன்.

Next Story