ஜென் கதை : இறை ஞானம் எப்படிப்பட்டது?


ஜென் கதை : இறை ஞானம்  எப்படிப்பட்டது?
x
தினத்தந்தி 28 March 2017 1:00 AM GMT (Updated: 27 March 2017 12:03 PM GMT)

அந்த ஜென் மடாலயத்தின் தலைமை குருவாக இருந்தவருக்கு வயோதிகம் வந்து விட்டது.

ந்த ஜென் மடாலயத்தின் தலைமை குருவாக இருந்தவருக்கு வயோதிகம் வந்து விட்டது. தனக்குப் பிறகு இந்த மடாலயத்தை நிர்வகிக்க சிறந்தவர்களை தேர்வு செய்யும் பொறுப்பை அவரை உந்தித் தள்ளியது. தன்னுடைய சீடர்களில் சிறந்தவர்களாக விளங்கிய மூன்று பேரை அழைத்தார் அந்த குரு.

மூவரும் அவர் அருகில் வந்து நின்றனர். அவர்கள் எவ்வளவு சிறந்த சீடர்கள் என்பது அவர்களின் பணிவிலேயே தெரிந்தது. மூவரையும் உற்று நோக்கிய குரு, ‘எனக்கு வயதாகி விட்டது. நான் ஓய்வுபெற விரும்புகிறேன். நீங்கள் ஏறக்குறைய எல்லாவற்றையும் கற்று விட்டீர்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும் தர்க்க அறிவுக்கும், அனுபவ அறிவுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அதுபோலவே தத்துவமும், யதார்த்தமும் வேறு வேறு.

மனிதனாக பிறந்தவர் இறையுணர்வு பெற வேண்டும் என்பது முக்கியமானது. எனவே நீங்கள் மூவரும் தனித்தனியாக செல்லுங்கள். பல திசைகளிலும் ஓராண்டுக்கு பயணம் செய்யுங்கள். பின்னர் திரும்பி வந்து உங்களுக்கு ஏற்பட்ட மெய்ஞான அனுபவங்களைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்’ என்றார்.

குருவின் கட்டளைப்படி மூவரும் புறப்பட்டுச் சென்றனர். குறிப்பிட்ட ஓரிடத்தில் இருந்து அவர்கள் மூவரும் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கினர். அந்த பயணத்தில் அவர்கள் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தனர். அவர்களுக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. அவர்கள் மூவரையும் பலவிதமான சம்பவங்கள் எதிர்கொண்டன.

அவர்கள் மூன்று பேரும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்கு ஓராண்டுக்கு மேலாகவே ஆகிவிட்டது. பயணம் முடிந்து மூன்று பேரும் ஒன்றாகவே குருவைப் பார்க்கச் சென்றனர்.

ஒருவர் தன்னுடைய பயணத்தில் கிடைத்த இறை அனுபவத்தைச் சொன்னான். ‘குருவே! நான் இறைவனைக் கண்டுவிட்டேன். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. எல்லாவற்றிலும், எல்லா இடத்திலும் இறையானது பரவியிருக்கிறது’.

அவனைத் தொடர்ந்து இரண்டாவது ஒரு சீடர் பேசினான். ‘குருவே! இறைவனுக்கு உருவம் இருக்கிறது. அவன் ஒளி வடிவமானவன். மனக் கண்ணால் மட்டுமே இறைவனைக் காண முடியும். மனம் உருகிப் பிரார்த்தித்தால், அவர் பலவிதங்களில் ஓடி வந்து உதவுவார்’ என்றான்.

கடைசியில் ஒரு சீடன் தலைகவிழ்ந்தபடி நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் வருத்தம் இழைந்தோடியது. அவனை நோக்கி ‘என்னவாயிற்று?’ என்பது போல் பார்த்தார் குரு.

உடனே அந்த சீடன், ‘குருவே! எனக்குள் இதுவரை குழப்பமே எஞ்சியிருக்கிறது. எதுவும் புரியவில்லை. திட்டவட்டமாக இதுதான் இறைவன் என்று எண்ணால் ஊகிக்கவோ அல்லது முடிவு செய்யவோ இயலவில்லை. அதற்கு என் அறிவு போதவில்லை என்று நினைக்கிறேன்’ என்றான் வருத்தத்துடன்.

அவனது வார்த்தையைக் கேட்ட மற்ற இரண்டு சீடர்களும் கேலியாக பார்த்தனர்.

ஆனால் குருவின் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது. ‘உண்மை.. நீ சொன்னது தான் உண்மை. அறிவுக்கோ, விவாதங்களுக்கோ எட்டாதது இறை ஞானம். தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே என்பதுதான் ஜென். எனக்குப் பின் இந்த மடாலயத்தை நீயே நிர்வகித்து வா’ என்றார்.

Next Story