ஆவுடையார் மீது காட்சி தரும் பெருமாள்


ஆவுடையார் மீது காட்சி தரும் பெருமாள்
x
தினத்தந்தி 28 March 2017 1:15 AM GMT (Updated: 27 March 2017 12:12 PM GMT)

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்.

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். சைவம் மற்றும் வைணவத்தை ஒருங்கிணைக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் எங்கும் இல்லாத புதுமையாக சிவலிங்கம் இருக் கும் ஆவுடையாரின் மீது பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் திருத்தலம் 108 திவ்ய தேசங்களில், 107–வது தலமாக திகழ்கிறது.

புண்டரீக மகரிஷி ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பெருமாளை தரிசித்த பிறகுதான் உணவு உண்பார். ஒரு முறை ஏகாதசி நாளில் மகரிஷி என்றும் வழிபடும் ஆலயத்திற்கு செல்ல தாமதமாகிவிட்டது. எனவே அருகில் இருந்த அவணி நாராயண சதுர்வேதிமங்கலம் என்ற கிராமத்தில் இருந்த ஆலயத்திற்கு சென்றார். ஆனால் அந்த ஆலயத்தில் சிவலிங்கம் இருந்தது. பெருமாளை வழிபட்டு விரதம் முடிக்க வந்த மகரிஷி வருத்தத்தில் ஆழ்ந்தார். ஆலயத்தை விட்டு வெளியேறினார்.

அவர் முகத்தில் இருந்த வருத்தத்தை பார்த்த ஒரு முதியவர், அதுபற்றி விசாரித்தார். மகரிஷியும், தான் பெருமாளை தரிசிக்க வந்தது பற்றியும், உள்ளே சிவலிங்கம் இருப்பது பற்றியும் கூறியதும், பெருமாளை வழிபட்டு விரதத்தை முடிக்க முடியாத வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

உடனே அந்த முதியவர், ‘உள்ளே பெருமாள் தானே இருக்கிறார். நீங்கள் சரியாக கவனிக்கவில்லையா?’ என்றபடி மகரிஷியை மீண்டும் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார்.

கருவறையில் இப்போது ஆவுடையாரின் மீது நின்ற கோலத்தில் வெங்கடேசப் பெருமாள் காட்சி தந்தார். இதைக்கண்டு மகிழ்ந்த மகரிஷி, தன் அருகில் நின்ற முதியவரை தேடியபோது அவரைக் காணவில்லை. அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மகரிஷியே! சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு அல்ல. பேதம் எதுவும் தேவையில்லை. திருப்பாற்கடலில் உள்ள என்னை வழிபட்ட பலன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டாலே கிடைக்கும். இந்த திருத்தலம் இனி திருப்பாற்கடல் என்றே அழைக்கப்படும்’ என்று அருளினார். அதைத் தொடர்ந்து மகிரிஷிக்கு அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் பெருமாள் காட்சி கொடுத்தார்.

புண்டரீக மகரிஷிக்காக பிரசன்னம் ஆனதால், இத்தல இறைவன் ‘பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். ஆலயத்தின் தல விருட்சம் வில்வமும், துளசியும் ஆகும். ஆலயத்தில் பாமா– ருக்மணியுடன் நவநீதகிருஷ்ணன், பக்த ஆஞ்சநேயர், ஒன்பது நாக தேவதைகள், அஷ்ட நாக கருடாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன.

இந்த ஆலயம் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. ஒரு முறை, சந்திர பகவான் பெற்ற சாபத்தினால் அவரது ஒளியும், அவரது கலைகளும் மறையத் தொடங்கின. இதைக் கண்டு வேதனையடைந்த சந்திரனின் மனைவிகளில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, இந்த தலம் வந்து பெருமாளை வணங்கி, தவம் செய்தாள். இதையடுத்து பெருமாள் நேரில் காட்சி தந்து, சந்திர பகவானுக்கு சாபவிமோசனம் அளித்து அருள்புரிந்தார். அது முதற்கொண்டு இந்த தலம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. இங்கு தரிசிப்போருக்கு நட்சத்திர தோ‌ஷங்கள், செவ்வாய் தோ‌ஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் உள்ள பெருமாளை ஏகாதசி, திருவோணம், பிரதோ‌ஷம், சனிபிரதோ‌ஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளில் தரிசனம் செய்வது நலம் பயக்கும். மேற்கண்ட நாட்களில் தீபத்திற்கு நல்லெண்ணெய் அல்லது நெய்யை தானமாக வழங்கலாம். வில்வம், துளசியால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும் என்பது தல மகிமையாகும். மகாளய அமாவாசை அன்று இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்கள் நிவர்த்தி ஆகும். அன்று கோவிலுக்கு பச்சரிசி தானமாக அளிப்பது விசே‌ஷம்.

இங்கு அலமேலுமங்கை தாயார் அமர்ந்த நிலையில் ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருக்கிறார். திருமணமாகாதவர்கள் இந்த தாயாருக்கு 108 மஞ்சளை மாலையாக கட்டி சாத்துவதுடன், நெய் தீபம் ஏற்றி 108 தாமரை அல்லது வில்வத்தினால் அர்ச்சனை செய்து, 108 முறை வலம் வந்து தாயாரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். தாயார் சன்னிதி படியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் இருதயகமல கோலத்தை வரைந்து, 1008 செந்தாமரை பூவால் சகஸ்ரராம அர்ச்சனை செய்வதும், அங்கப்பிரதட்சணம் செய்தால் புத்திர பாக்கியத்தை அடையலாம் என்பது பக்தர் களின் நம்பிக்கை. இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

வேலூரில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தின் தெற்கே மூன்று கிலோமீட்டர் தூரத்தில் திருப்பாற்கடல் திருத்தலம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்தில் இருந்து வருபவர்கள் வேலூர் செல்லும் பஸ்சில் ஏறி, காவேரிபாக்கத்தில் இறங்கி ஆட்டோவில் கோவிலுக்கு போகலாம்.

– மரு. நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.

Next Story