அறிவோம் இஸ்லாம்


அறிவோம் இஸ்லாம்
x
தினத்தந்தி 5 April 2017 9:48 AM GMT (Updated: 5 April 2017 9:48 AM GMT)

திருக்குர்ஆனில் பூமி மற்றும் வானங்கள் பற்றிப் பேசப்படுகின்ற இடங்களில் மலைகள் குறித்தும் பேசப்படுகிறது.

72 . மலை

லை என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் அதன் சுற்றாடலுக்கு மேலே உயர்ந்து காணப்படும் ஒரு பெரிய நில வடிவம் ஆகும்.

நாம் வெகு தூரத்தில் இருந்து கொண்டு மலைகளின் அழகை ரசித்து மகிழ்கிறோம். மேலும் பாதைகளை அமைத்து மலையின் உச்சிக்கே சென்று, உலவும் மேகக்கூட்டங்களையும், உலகின் அழகையும் கண்டு வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்.

திருக்குர்ஆனில் பூமி மற்றும் வானங்கள் பற்றிப் பேசப்படுகின்ற இடங்களில் மலைகள் குறித்தும் பேசப்படுகிறது. வானங்களும், பூமியும் இறைவனின் பிரமிப்பூட்டும் பிரமாண்ட படைப்புகளாக இருப்பதைப் போன்றே மலைகளும் ஒரு மகத்தான படைப்பாகும் என்பதையே இது காட்டுகிறது.

‘‘பின்னர் அவனே பூமியை விரித்தான். அவனே அதில் இருந்து நீரையும் மேய்ச்சலையும் வெளிப்படுத்துகிறான். மலைகளையும் அவனே அதில் நிலை நிறுத்தினான்’’ (திருக்குர்ஆன்–79:30) என்றும்,

‘‘நிச்சயமாக (நம்முடைய) பொறுப்பை சுமந்து கொள்வீர்களா? என நாம் வானங்கள், பூமி, மலைகள் முதலியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றி பயந்து, அதைச் சுமப்பதில் இருந்து விலகி விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். (இருப்பினும்) அவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டான்’’ (33:72) என்றும் பூமியுடன் மலைகளும் சேர்ந்தே இடம் பெற்றுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

பூமியில் அழகாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கும் மலைகள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன? பூமியில் அதன் அவசியம்தான் என்ன?

‘‘நாம் பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’’ (78:6) என்றும்,

‘‘அவனே பூமியை விரித்து அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்’’ (13:3) என்றும்,

‘‘அவனே பூமியை விரித்தான்... அதில் மலைகளையும் நிலைநாட்டினான்’’ (79:30,32) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

பூமி ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மலைகள், ‘முளை’களாக அமைந்துள்ளன என்பதையும், அவை உறுதியானவை என்பதையும் மேற்கண்ட வசனங்கள் மூலம் அறியலாம்.

கூடாரங்கள் காற்றில் பறந்து விடாமல் தடுப்பதற்காக அதன் பக்கவாட்டில் உள்ள கயிறுகளை இழுத்துக் கட்டுவதற்காக பூமியில் அறையப்படும் ‘முளைக்குச்சி’களைப் போல மலையின் வேர்கள் அமைந்துள்ளன.

‘புவி’ (எர்த்) என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் புவியியல் தொடர்பான அறிவியல் நூலாக போற்றப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர்களில் ஒருவரும், அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞானக் கழகத் தலைவருமான பிராங் பிரஸ் கூறுகையில், ‘‘மலைகள், முளைகளைப் போன்று பூமிக்கடியில் புதைந்து காணப்படுகின்றன. அதன் வேர்கள் பூமிக்குள் மிக ஆழமாக ஊடுருவி நிற்கின்றன’’  என்று குறிப்பிட்டுள்ளார்.

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மலைகளின் உயரத்தை விட 10 அல்லது 15 மடங்கு ஆழமாக பூமிக்கடியில் ‘மலை வேர்’ என்று அழைக்கப்படும் அதன் வேர் பதிந்துள்ளது.

சான்றாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து 9 கிலோ மீட்டர் உயரமான இமயமலையின் வேர் பூமிக்கு அடியில் சுமார் 125 கிலோ மீட்டர் ஆழத்திற்கு நீண்டு காணப்படுகிறது.

இதன் காரணமாக கூடாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் முளைகள் போன்று மலைகள் செயல்படுகின்றன என்பதை விஞ்ஞான உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.

பூமி பல அடுக்குகளைக் கொண்டுள்ளது என்பதை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

நிலப்பகுதியைச் சேர்ந்த பூமியின் மேல் அடுக்கு, கண்டத்தட்டு (காண்டினென்டல் கிரஸ்ட்) என்றும், நீருக்கடியில் உள்ள மேல் அடுக்கு, கடல் தட்டு (ஓசியானிக் கிரஸ்ட்) என்றும் அழைக்கப்படுகிறது.

கண்டத் தட்டு பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது. கடல் தட்டு கடல் நீருக்கடியில் 5 முதல் 10 கிலோ மீட்டர் ஆழம் வரை வியாபித்துள்ளது. மேன்டில் எனப்படும் இரண்டாம் அடுக்கு மற்றும் உட்கரு (கோர்) எனப்படும் மைய அடுக்கு என பல அடுக்குகள். அதில் உள் மையம், வெளி மையம் என்று  உட்கரு இரண்டு கிளை அடுக்குகளாக பிரிந்துள்ளன.

பூமியின் உள்ளமைப்பு பல்வேறு நிலைகளில் உள்ளன. இதனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும்போது நிலப்பரப்பு நிலை பெயர்ந்து போகலாம். பூமியின் அடுக்குகளில் நடுக்கம் ஏற்பட்டு சீட்டுக்கட்டுகள் போல சரிந்து போகலாம். இதனால் பூமியை அசையவிடாமல் கெட்டியாகவும், உறுதியாகவும் பிடித்துக் கொள்வதற்கு மலையின் மேற்பகுதி உறுதுணையாக உள்ளது.

‘‘இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமல் இருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்’’ (திருக்குர்ஆன்–21:31) என்ற வசனத்தின் மூலம் பூமி ஆடாமல் அசையாமல் இருப்பதற்காகவே மலைகள் அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

மலையின் கம்பீரமான தோற்றமும், எழிலும் மனிதர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதால்தான் அதற்கு மலை என்று பெயரிட்டனர்.

மலைப்பைத் தருவது மலை மட்டுமல்ல; திருக்குர்ஆனில் மலை பற்றி இறைவன் கூறிய கருத்துகளும்தான்.

Next Story