சந்தோ‌ஷம் தரும் சத்யநாராயணர் வழிபாடு


சந்தோ‌ஷம் தரும் சத்யநாராயணர்  வழிபாடு
x
தினத்தந்தி 11 April 2017 1:30 AM GMT (Updated: 10 April 2017 12:00 PM GMT)

சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் சூரியனின் ஒளியும், அதன் சக்தியுமே உயிர்ப்பை தருகின்றன. இதனால்தான் பழங்காலத்தில் சூரியனையே கடவுளாக நினைத்து மக்கள் அனைவரும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.  

சூரியன் நிற்கும் நிலையைக்கொண்டு இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பருவகாலங்கள் ஒருவருடத்தில் ஏற்படுகின்றன.

சூரியன் மே‌ஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல்நாள் ஆகும். இது வசந்த ருது எனவும், இளவேனிற்காலம் எனவும் அழைக்கப்படுகிறது. சித்திரை முதல்தினத்தை தமிழக மக்கள் முக்கியமான பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். படிகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, வாசல் நிலைகளில் மாவிலைத்தோரணங்களை கட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் திருமகள் விரும்பி வருவாள். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து குரு, பெற்றோர், பெரியோரை வணங்கி அவர்களின் ஆசி பெற வேண்டும்.

முடிந்தவரை தான, தருமங்களை செய்ய வேண்டும். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதை பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி நல்லநேரம் பார்த்து குத்துவிளக்கேற்றி நிறைகுடம் வைத்து வணங்க வேண்டும். பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் விசிறிகளை தானம் செய்யவேண்டும். அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்வார்கள்.

சித்திராபவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி, குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும். சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு குடிப்பதற்கு மோர் கொடுத்தால் பாவம் விலகும். சர்க்கரை கலந்த பானகம் குடிக்கக் கொடுத்தால், மோட்சம் கிடைக்கும்.

மகாவிஷ்ணுவிற்கு ‘சத்யநாராயணர்’ என்ற திருப்பெயரும் உண்டு. சத்யநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். மாலை 7 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம்.

ஸ்ரீசத்யநாராயணபூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள். ஏழ்மை விலகி செல்வம் சேரும். பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும். இந்த கதையை படிப்பவர்களின் பாவம் நீங்கும்.

பவுர்ணமியன்று இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் தீபாவளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் ஜாதகத்தில் சந்திரன் அனுகூலமாக இருக்கும் போது செய்யலாம்.

ஒரு சமயம் நாரதர் பூமிக்கு வந்தார். அப்போது வாழ்வில் பல வழிகளிலும் துன்பப்பட்ட மக்களை சந்தித்தார். இவர்களின் துன்பத்தை போக்கும் வழி என்ன என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார். அதற்கு அவர் கலியுகத்தில் சத்யநாராயண விரதம் பலன் அளிக்க கூடியது. ஒருவர் இதை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில்  இருந்து விடுபடலாம் என்று கூறினார்.

வழிபாடு செய்வது எப்படி?

சத்ய நாராயண பூஜை செய்வதற்கு முன்னதாக பவுர்ணமியன்று வீட்டில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கணவன்–மனைவி இருவரும் சந்திரன் உதயமாகும் முன் குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.

கோலமிட்டு அதன்மீது மூன்று வாழை இலைகளை வைக்க வேண்டும். வாழை இலையின் மீது அரிசியை பரப்ப வேண்டும். வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆன கலசத்தை நூலினால் சுற்றி அரிசியின் மேல் வைக்க வேண்டும். ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீரை கலசத்தில் நிரப்ப வேண்டும். கலசத்தின் உள்ளே மாவிலைகளை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு இட வேண்டும். மஞ்சள்பொடியை தண்ணீரில் குழைத்து தேங்காயின் மீது தூவி கலசத்தின் மீது வைக்க வேண்டும். இரண்டு வஸ்திரத்தை கலசத்திற்கு அணிவித்து மாலை சாத்த வேண்டும்.

பிறகு சத்யநாராயணர் படத்தை அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். தொன்னையிலான 9 கிண்ணங்களில் தானியங்கள் நிரப்பி அவற்றை நவக்கிரகங்களுக்காக பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். சூரியனுக்கு சிவப்பு, சந்திரனுக்கு வெள்ளை, செவ்வாய்க்கு சிவப்பு, புதனுக்கு பச்சை, குருவுக்கு மஞ்சள், சுக்ரனுக்கு வெள்ளை, சனிக்கு கருப்பு, ராகுவுக்கு நீலம் கேதுவுக்கு பலவண்ண நிறங்களில் வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு அரிசி, செவ்வாய்க்கு துவரை, புதனுக்கு பச்சைப்பயறு, குருவுக்கு கடலை, சுக்ரனுக்கு மொச்சை, சனிக்கு எள், ராகுவுக்கு உளுந்து, கேதுவுக்கு கொள்ளு ஆகியவற்றை படைக்க வேண்டும். விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை முதலியவற்றை செய்து அதன் பிறகு சத்யநாராயணர் பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்ரீசத்யநாராயணர் அஷ்டோத்திர சத்நாமாவளியை உச்சரிக்க வேண்டும். பின்னர் தூபம், தீபம், நிவேதனம், கற்பூரதீபம் முதலிய வற்றை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தான, தர்மங்கள் செய்வது அதிக பலனை கொடுக்கும்.

இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் புத்திர பாக்கியம், செல்வம், பதவி, திருமண யோகம், மோட்சம் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்கிறது புராணங்கள்.

Next Story