ஜென் கதை: துறவியின் மூன்றாம் பதிப்பு


ஜென் கதை: துறவியின் மூன்றாம் பதிப்பு
x
தினத்தந்தி 11 April 2017 1:00 AM GMT (Updated: 10 April 2017 12:09 PM GMT)

ஜென் தத்துவங்களில் ஆழ்ந்த நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்ட துறவி ஒருவர் இருந்தார். அந்தத் துறவி ஒரு ஜப்பானியர்.

ஜென் தத்துவங்களில் ஆழ்ந்த நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்ட துறவி ஒருவர் இருந்தார். அந்தத் துறவி ஒரு ஜப்பானியர். ஆனால் ஜென் சூத்திரங்கள் அனைத்தும் சீன மொழியில் இருந்தன. இதனால் அவர் ஜப்பான் மக்களும் பயன்பெறும் வகையில் மொழிபெயர்க்க எண்ணினார். ஆனால் அந்த சூத்திர புத்தகங்களை மொழிபெயர்த்து பதிப்பிக்க, அதிக பொருள் தேவைப்படும் போல் தோன்றியது. எனவே நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு ஜப்பானிய கிராமங்கள், நகரங்கள் என பல இடங்களுக்குச் சென்று, பலரையும் சந்தித்து நிதி உதவி கோரினார்.

சிலர் பெரும் தொகையை அளித்தனர். சிலர் சிறிய அளவு பொருள் உதவி செய்தனர். பல தரப்பட்ட மக்களும் தங்களால் இயன்றதை அவருக்கு அளித்தனர். உதவி செய்தவர்கள், செய்யாதவர்கள் அனைவருக் கும் தன்னுடைய நன்றியை தெரிவித்தார். தேவையான பொருள் சேர்ந்து விட்டது. இனி புத்தகத்தை மொழிபெயர்த்து பதிப்பிக்கும் வேலையே மிச்சம்.

அந்த நேரத்தில் ஜப்பான் நாட்டில் ஒரு பகுதியில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, வாசல், உடைமைகளை இழந்தனர். உணவும், இருப்பதற்கு இடமின்றியும் தவித்தனர்.

துறவியின் மனம் இரங்கியது. தாம் திரட்டிய பொருள் அனைத்தையும் அங்கிருந்த பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் மறு வாழ்விற்காக செலவிட்டார்.

பின்னர் மீண்டும் புதியதாக நிதி திரட்ட, அதே போல் நாடு முழுவதும் தனது பயணத்தைத் தொடங்கினார். ஒவ்வொருவர் வீடாக சென்று நிதி உதவி கோரினார். பல ஆண்டுகள் உருண்டோடியது. இந்த முறையில் தேவையான பொருள் சேர்ந்தது.

அந்த சமயத்தில் நாடெங்கும் கொள்ளை நோய் பரவியது. ஏராளமான மக்கள் அதனால் துன்புற்றதை அறிந்தார் அந்தத் துறவி. நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காக்கத் தான் திரட்டிய பொருள் அனைத்தையும் செலவிட்டு விட்டார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரது நிதி திரட்டும் படலம் தொடங்கியது. இந்த முறையில் பல ஆண்டுகள் உருண்டோடின. நாடு முழுவதும் பயணம் செய்தார். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தேவையான பொருள் சேர்ந்தது. தாம் நினைத்தது போலவே, சீன மொழியில் இருந்த ஜென் சூத்திரங்களை, ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஏழாயிரம் படிகள் எடுக்கப்பட்டன.

அதன் முதல் பிரதி தலைநகரின் ஒரு மடாலயத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதனைப் பார்வையிட்ட ஜென் குருமார்கள், தங்களோடு வந்திருந்த சீடர்களிடம் இவ்வாறு கூறினார்கள். ‘இந்தப் பதிப்பு இதை வெளியிட்ட துறவியின் மூன்றாவது பதிப்பு. இதை விட கண்ணுக்குத் தெரியாத அவரது முதல் இரண்டு பதிப்புகள்தான் மிகவும் அற்புதமானவை’.

ஆம்! எழுத்து என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய். சொல் வறட்டு வேதாந்தம். செயலில் வெளிப்படும் தர்மமே மிகச் சிறந்தது.

Next Story