நற்செய்தி சிந்தனை : பணிவு


நற்செய்தி சிந்தனை : பணிவு
x
தினத்தந்தி 18 April 2017 7:31 AM GMT (Updated: 18 April 2017 7:30 AM GMT)

இயேசு பிரான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் எல்லாவற்றையும் உணர்ந்தவராக இருந்தார். மனிதர்கள் ஏற்று வாழ வேண்டிய நற்பண்புகளை அவர்களின் மனதில் விதைத்தார்.

‘பாஸ்கா’ விழா தொடங்கி இருந்தது. இந்த உலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்து விட்டது என்பதை இயேசு பிரான் அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தம் சீடர்களிடம் அன்பு கொண்டிருந்த அவர், அவர்கள் மேல் இறுதி வரை அன்பு செலுத்தினார். 

இயேசு பிரானைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை ‘சாத்தான்’, சீமோனின் மகனாகிய ‘யூதாசு’க்கு ஏற்படுத்தி இருந்தது. 

இரவு உணவு நேரத்தில் தந்தை, அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும், கடவுளிடம் இருந்து வந்தது போல், மீண்டும் அவரிடமே செல்ல வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

இயேசு பந்தியில் இருந்து எழுந்தார். தன் மேல் உடையைக் கழற்றினார். ஒரு ‘துண்டை’ எடுத்து, தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்தார். தன் சீடர்களின் கால்களைக் கழுவி, துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

‘சீமோன் பேதுரு’ என்ற சீடரிடம் வந்தபோது, ‘‘ஆண்டவரே! நீரா என் கால்களைக் கழுவப் போகிறீர்?’’ என்று கேட்டார். 

இயேசு மறுமொழியாக, ‘‘நான் செய்வது இன்னது என்று இப்பொழுது உனக்குத் தெரியாது. பிறகுதான் தெரிந்து கொள்வாய்’’ என்றார்.

‘பேதுரு’ என்ற சீடர் அவரைப் பார்த்து, ‘‘என் கால்களைக் கழுவ விட மாட்டேன்’’ என்றார். 

அப்படியானால், ‘‘என்னோடு உனக்கு பங்கில்லை’’ என்றார், இயேசு.

உடனே அந்தச் சீடர் அவரைப் பார்த்து, ‘‘ஆண்டவரே! என் கால்களை மட்டும் அல்ல; என் கைகளையும், தலையையும் கூடக் கழுவியருளும்’’ என்றார்.

இயேசு பிரான் சீடர்களை நோக்கி, ‘‘குளித்து விட்டவர் கால்களை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகி விடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் தூய்மையாய் இல்லை’’ என்றார். 

தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறவர் யார்? என்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருந்தார். எனவேதான் ‘அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்று கூறினார்.

சீடர்களின் கால்களைக் கழுவிய பிறகு, இயேசு தன் மேல் உடையை அணிந்து கொண்டார். மீண்டும் பந்தியில் அவர் களோடு அமர்ந்தார். பின்னர் சீடர்களைப் பார்த்து, ‘‘நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள். அவ்வாறு அழைப்பது சரிதான். நான் போதகர்தான்; ஆண்டவர்தான். ஆண்டவரும் போதகருமான நான், உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றொருவருடைய கால்களைக் கழுவ கடமைப்பட்டு இருக்கிறீர்கள். நான் செய்தது போல், நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக ‘முன்மாதிரி’ காட்டினேன்’’ என்றார். 

இந்தச் சம்பவத்தின் பின்னணியை உற்றுக் கவனியுங்கள். எவ்வளவு பெரியவராக இருந்தாலும் ‘தாழ்ச்சி’ என்ற பண்பு இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. பிறருக்கு ‘முன் மாதிரி’யாகத் திகழ வேண்டும் என்பதையும் இது எடுத்துரைக்கிறது. 

இயேசு பிரான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் எல்லாவற்றையும் உணர்ந்தவராக இருந்தார். மனிதர்கள் ஏற்று வாழ வேண்டிய நற்பண்புகளை அவர்களின் மனதில் விதைத்தார். 

நாம் இப்படி வாழ்கிறோமா என்பதை ஒருகணம் எண்ணிப் பார்ப்போம். பெற்றோரை மதித்தல், பெற்றோரைக் காத்தல், உற்றார் உறவினர்களை அணைத்தல் போன்றவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.

‘எல்லோருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து’ என்பது திருக்குறள்.

எல்லோருக்கும் பணிவு என்பது இருக்க வேண்டும். செல்வம் பெற்றவர்களுக்கு அந்தப் பணிவு என்பது கூடுதல் தகுதியானது என்பதே இதன் பொருளாகும்.

செல்வம் பெற்றவர்கள் பணிவை மேற்கொள்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வள்ளுவப் பெருந்தகை இப்படிச் சிந்தித்து இருக்கிறார். 

பணிவு என்பது சிறியவர்களிடம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அப்படியல்ல. பெரியவர்கள் அத்தகைய பண்பை விதைக்க வேண்டும் என்ற கருத்து இதன் மூலம் வெளிப்படுகிறது. இறைவன் மனிதனாக இவ்வுலகில் பிறந்தார். நமக்காக வாழ்ந்தார்; நமக்காக மரித்தார் என்பதுதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடு ஆகும். 

மனிதனாகப் பிறந்த அவர் துன்பப்படுகிறார்; துயரப்படுகிறார். இறுதியில் சிலுவைத் துன்பத்தை ஏற்கிறார். மனிதர் செய்த பாவத்திற்காகத் தன்னையே தியாகம் செய்கிறார்.

பாதங்களை இயேசு பிரான் கழுவியபோது அதைச் சீடர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயேசு பிரானை கூடவே இருந்து கவனித்த அவர்கள், பாவமில்லாத ஒருவர், பாவிகளாகிய நம்முடைய பாவங்களைக் கழுவுகிறாரே என்று துன்பப்படுகின்றனர். அனைவருக்குமே அந்த எண்ணம் இருந்திருக்கும். அதில் ஒரு சீடர் மட்டும் துணிவாக இந்த வினாவைத் தொடுக் கிறார். என் கால்களைக் கழுவ விட மாட்டேன் என்று தடுக்கிறார். ‘என்னோடு உனக்குப் பங்கில்லை’ என்று இயேசு பிரான் கூறிய பிறகே அதை ஏற்கிறார். இதன் மூலம் ‘தாழ்ச்சி’ என்ற பண்பை சீடர்கள் மூலமாக உலகத்திற்கு எடுத்துரைக்கிறார். 

பொதுவாக மனித சமுதாயத்தில் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் போன்ற பண்புகள் குறைந்து வரும் நிலையில், இந்த நற்செய்தி வாசகத்தைப் படிப்போம்; இயேசு பிரான் நடந்து காட்டிய வழியில் நடப்போம்.

Next Story