ஜோதி ஒளியாக வந்த காயநிர்மலேஸ்வரர்
மகரிஷியான வசிஷ்டர் இந்தத் திருத்தலத்தில் யாகங்கள் நடத்தியதால், இங்குள்ள இறைவனுக்கு ‘வசிஷ்டேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. வசிஷ்ட நதிக்கரையோரம் அமைந்துள்ள மூன்றாவது பஞ்சபூத திருத்தலமான இது, அக்னி தலமாகும். இந்தப் பகுதியில் வசிஷ்டநதி, சுவேதநதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் இந்த ஊர் ‘ஆற்றூர்’ என்றழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் ‘ஆத்தூர்’ என மருவியது.
மகரிஷியான வசிஷ்டர் இந்தத் திருத்தலத்தில் யாகங்கள் நடத்தியதால், இங்குள்ள இறைவனுக்கு ‘வசிஷ்டேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. அதேபோல இந்த ஊரை அனந்தன் என்னும் அரசன் ஆண்டு வந்ததால் இத்தல இறைவன் ‘அனந்தேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஊருக்கும் அனந்தகிரி, வசிஷ்டபுரம் என பெயர்கள் உண்டு.
தல வரலாறு
வசிஷ்ட மகரிஷி ஒரு சமயம் இந்தப் பகுதிக்கு வந்து தவம் செய்தார். அப்போது அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன. இதனால் அவர் நாரதரின் யோசனைப்படி சிவபூஜையில் ஈடுபட்டார். இதற்காக தமது தவவலிமையால் ‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். பின்னர் பூஜை செய்ய தகுந்த இடம் தேடினார்.
அப்போது மேடான ஓரிடத்தில் அவரது கால் பட்டு இடறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசிஷ்டர் அந்த இடத்தைப் பார்த்தபோது, சுயம்பு லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அவரது கால் பட்டு லிங்கத்தின் ஒருபகுதி சேதமடைந்து இருப்பதை கண்டு கலங்கினார். பழுதுபட்ட லிங்கத்தை சிவபூஜைக்கு பயன்படுத்தலாமா? எனத் தயங்கினார். அந்த நேரத்தில் இறைவன் அசரீரியாக, ‘வசிஷ்டரே! நீர் தயங்காமல் பூஜை செய்யும். நிறைவாக தீபம் காட்டுகையில் ஓர் அதிசயம் நிகழும்’ என்று கூறினார்.
ஜோதி சொரூபமாக
இதனால் மகிழ்ந்த வசிஷ்டர், அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை, ஆராதனைகள் செய்தார். நிறைவாக சிவலிங்கத்துக்கு அவர் தீபாராதனை காட்டியபோது ஜோதி சொரூபமாய் பிரகாசமான ஒளி தோன்றியது. அதன் பிரகாசத்தை தாங்கமுடியாமல் வசிஷ்டர் கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தார்.
அப்போது பழுதடைந்து இருந்த லிங்கமேனி, குறை ஏதும் இல்லாத பளபளப்பான லிங்கமாக மாறி இருந்தது. வசிஷ்டர் தாம் ஏற்றி வைத்த தீபஒளியே லிங்கத்தின் மீது பட்டு பேரொளியாய் திகழ்வதை கண்டு பிரமித்தார். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த ஒளி வசிஷ்டரின் தவத்திற்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்தது.
‘காயம்’ என்றால் ‘உடல்’ என்று பொருள். ‘நிர்மலம்’ என்றால் ‘பழுது இல்லாதது’ என்று அர்த்தம். லிங்கத் திருமேனியில் இருந்த குறையை நீக்கி வசிஷ்டருக்கு காட்சி தந்ததால், இங்குள்ள இறைவன் ‘காயநிர்மலேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். மேலும் இறைவன் வசிஷ்டருக்கு ஜோதி சொரூபமாய் அருள்பாலித்ததால் இந்த திருத்தலத்தை ‘அக்னி ஸ்தலம்’ என்றும், லிங்கத்தை ‘தேயுலிங்கம்’ (நெருப்பு) என்றும் அழைக் கிறார்கள்.
கனவில் வந்த இறைவன்
கி.பி.905–945 வரை தஞ்சையை ஆண்ட முதல் பராந்தக சோழன், இந்தக் கோவிலில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை கட்டியதாக கூறுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு பின் கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தான். அவன் தினமும் எம்பெருமானை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான்.
ஒருநாள் அவனது கனவில் இறைவன் காட்சி தந்ததாகவும், இறைவனது திருமேனி அழகை கண்டு வியப்புற்று கெட்டி முதலி எம்பெருமானுக்கு ‘காயநிர்மலேஸ்வரர்’ என பெயர் சூட்டியதாகவும் கூறுகிறார்கள். கெட்டி முதலி காலத்தில்தான் ஆத்தூர் கோட்டை, மதிற்சுவர், அகழி, மூன்று நெற்களஞ்சியங்கள், அரண்மனை நீராழிமண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டது.
ஆலய அமைப்பு
ஆத்தூர் கோட்டையில் கிழக்கு நோக்கியவாறு ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்தக் கோவில் கம்பீரமாக காட்சி அளிக் கிறது. முகப்பு மண்டபம், அர்த்த மண்டபத்தை அடுத்து நந்தி முன் இருக்க, கருவறையில் மூலவர் காயநிர்மலேஸ்வரர் பிரகாசமாக அருள்பாலிக்கிறார். கருவறை பிரகாரத்தில் விநாயகர் அநேக வடிவங்களில் விதவிதமான பெயர்களுடன் அருள்பாலிக்கிறார்.
சிவ–பார்வதி, பாலமுருகன், வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான், லட்சுமிதேவி, சரஸ்வதிதேவி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா, ஐயப்பன், சூரியபகவான், சனிபகவான், ஆஞ்சநேயர், நாகர்கள், நாககன்னி ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். இங்கு சதுர்புஜ பைரவர், அஷ்டபுஜ பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என வெவ்வேறு வடிவங்களில் பைரவர் வீற்றிருக்கிறார். தனியாக நவக்கிரக சன்னிதியும் உள்ளது.
சுவாமிக்கு வலது பின்புறத்தில் கிழக்கு நோக்கியபடி தாயார் அகிலாண்டேஸ்வரி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் உலக உயிர்களை காக்கும் வகையில் கருணை மிளிர காட்சி தருகிறார். கர்ப்பிணி பெண்கள் இத்தல அம்மனை வழிபட்டு, குங்குமத்தை நெற்றில் இட்டுக் கொண்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவில் தலவிருட்சம் மகிழமரம் ஆகும். காயநிர்மலேஸ்வரர் கோவில் எதிரே, ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்
இந்த தலத்தில் தமிழ் புத்தாண்டு, மாதாந்திர கிருத்திகை, ஆனி திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ராதரிசனம், தைப் பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக் கும்.
காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர் களுக்கு மணமாலையும், திரு மணம் ஆனவர்களுக்கு குழந்தை வரமும் தேடி வரும். நாள்பட்ட நோய்கள் தீரும்.
சேலத்தில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்தில் ஆத்தூர் உள்ளது. ஆத்தூர் பஸ்நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கோட்டை என்னும் பகுதியில் காயநிர்மலேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
ஒளிரும் சிவலிங்கம்
திருவண்ணாமலைக்கு இணையாக கருதப்படும் இந்தக் கோவிலில், வெளியே எவ்வளவுதான் பனி, மழை இருந்தாலும் கருவறை எப்போதும் வெப்பமாகவே இருப்பதை உணரலாம். மூலவரான காயநிர்மலேஸ்வரருக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டும் போது, அந்த தீபத்தின் ஒளி பல மடங்காக பிரகாசித்து ஒளிர்வது அதிசயமான ஒன்றாகும். காயநிர்மலேஸ்வரரை வணங்குவோர் வாழ்க்கை ஒளி விட்டு பிரகாசிக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஒளியால்தான் அன்னை அகிலாண்டேஸ்வரியே பிரகாசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அன்னையின் சிலையில் ஒருவித ஈர்ப்பு உள்ளதை இன்றும் காணலாம். அம்பிகை இன்முகத்தோடு, கருணை ததும்ப காட்சி அளிப்பது தத்ரூபமாக இருக்கும்.
தலையாட்டி பிள்ளையார்
ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலுக்கு வெளியே ‘தலையாட்டி பிள்ளையார்’ சன்னிதி உள்ளது. முன் காலத்தில் சோழ அரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன் வானவராயன் இந்தப் பகுதியை ஆண்டுள்ளான். இந்தக் கோவிலை அவன் புனரமைத்து கட்டிய போது, இந்த விநாயகரிடம் உத்தரவு கேட்டு விட்டுத்தான் பணியைத் தொடங்கினான். இந்த விநாயகரே இத்தலத்தின் பாதுகாவலர். கோவில் வேலைகள் முடிந்தபிறகு இந்த விநாயகரிடம் வந்த மன்னன், ‘பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?’ என்று கேட்டானாம். அதற்கு பிள்ளையார் ‘நன்றாக கட்டியிருக்கிறாய்’ என்று சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு ‘தலையாட்டி பிள்ளையார்’ என்று பெயர் வந்தது. இந்த விநாயகர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதைக் காணலாம்.
அதிசய தட்சிணாமூர்த்தி சன்னிதி
இந்தக் கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்தி மரத்தின் அடியில் அமர்ந்து சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு பேருக்கு வேத ஞானத்தை அருளும் வகையில் காட்சி அளிப்பார். ஆனால் ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில், குரு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் அமர்ந்து சப்தரிஷிகள் 6 பேருக்கு வேதத்தை அருள்வது போன்று காட்சி தருகிறார். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் இந்த கோலம் மிகவும் அதிசயமான ஒன்றாக கருதப்படுகிறது.
Next Story