பழமை வாய்ந்த வராகமூர்த்தி சிலைகள்


பழமை வாய்ந்த வராகமூர்த்தி சிலைகள்
x
தினத்தந்தி 18 April 2017 7:48 AM GMT (Updated: 18 April 2017 7:48 AM GMT)

சாகர் மாவட்டத்தில் உள்ள ஏரான் என்ற இடத்தில் இருக்கும் வராகர் ஆலயத்தில் உள்ள வராகர் சிலை பிரமாண்டமான முறையில் அமைந்திருக்கிறது.

ராக அவதாரம் எடுத்து இரண்யட்சனை அழித்த பிறகு, வராகமூர்த்தி அமர்ந்த தலமாக கருதப்படும் ஸ்ரீமுஷ்ணம் தமிழ்நாட்டில் உள்ளது. ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஆதிவராகர் கோவிலும்  பிரசித்தி பெற்றது. இதே போல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளிலும் வராகருக்கு ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் இருக்கும் வராகமூர்த்தியின் உருவத்தில் இருந்து தனித்து விளங்குகின்றன, மத்திய பிரதேசத்தில் உள்ள வராக மூர்த்தி சிலைகள். ஏனெனில் இங்குள்ள வராகப் பெருமான், வராக (பன்றி) உருவத்திலேயே, நான்கு கால்களுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இது போன்ற சிற்பங்கள் மத்திய பிரதேசத்தில் 29 இடங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றுள் கஜூராஹோ, ஏரான், பதோ, கோ, குவாலியர், மஜ்கோலி போன்ற இடங்களில் உள்ள வராகர் சிற்பங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.

மத்திய பிரதேசம் மாநிலம் சத்ரப்பூர் மாவட்டம் கஜூராஹோ என்ற இடத்தில் லட்சுமணர் ஆலயம் இருக்கிறது. இதன் எதிரே உள்ள வராகர் சிற்பம் 9 அடி நீளமும், 6 அடி உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த சிற்பத்திற்குள் சுமார் 700 சிற்பங்கள் மிக நுணுக்கமான முறையில் செதுக்கப்பட்டிருப்பது கலையம்சம் மிக்கதாக உள்ளது. இந்த வராகர் சிலை கி.பி. 9–ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காண்போரை கவர்ந்திழுக்கும் இந்த வராகரின் நாசித் துவாரங்களுக்கும், வாய்க்கும் இடையே வீணை ஏந்திய சரஸ்வதியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. வராகரின் காலடியில் பூமியை தாங்கும் ஆதிசே‌ஷன் உருவம் அமைந்துள்ளது.

இதே போல் சாகர் மாவட்டத்தில் உள்ள ஏரான் என்ற இடத்தில் இருக்கும் வராகர் ஆலயத்தில் உள்ள வராகர் சிலை பிரமாண்டமான முறையில் அமைந்திருக்கிறது. இது 14 அடி நீளமும், 5 அடி அகலமும், 11 அடி உயரமும் கொண்டது. மத்திய பிரதேசத்திலேயே மிகவும் பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக ஏரான் கருதப்படுவதால், இங்குள்ள வராகர் சிலையும் பழம்பெருமை வாய்ந்ததாகவே இருக்கும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த வராகரின் ஒரு கொம்பை பிடித்துக் கொண்டு நின்றபடி இருக்கிறார் பூமாதேவி.

மேற்கண்ட இரண்டு வராகர் சிலைகளை அடுத்து மிகவும் பழமையானதாக கருதப்படுவது, ஜபல்பூருக்கு அருகில் உள்ள மஜ்ஹோலி என்ற கிராமத்தில் இருக்கும் வராகர் சிலை. இது கி.பி. 11–ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கின்றனர். இந்த வராகர் ஒரு சதுர வடிவ கருவறையில் வீற்றிருக்கிறார். கருவறையின் நுழைவு வாசலில் கங்கை, யமுனை நதிகளின் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. 

பதோ என்ற இடத்திலும் வராகருக்கு சிலை அமைந்துள்ளது. இந்த வராகர் உருவத்தில் 765 புடைப்புச் சிற்பங்கள் மிகச் சிறிய அளவில் இடம்பெற்றுள்ளன.

Next Story