அறிவோம் இஸ்லாம் : கருவறை அதிசயங்கள்


அறிவோம் இஸ்லாம் : கருவறை அதிசயங்கள்
x
தினத்தந்தி 2 May 2017 7:24 AM GMT (Updated: 2 May 2017 7:24 AM GMT)

கருவணு என்பது பாலின இனப்பெருக்கம் மூலம் ஆண்பால் அணுவும், பெண்பால் அணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு.

“(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்” (76:2) என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

கருவணு என்பது பாலின இனப்பெருக்கம் மூலம் ஆண்பால் அணுவும், பெண்பால் அணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு. பெண்ணின் சினை முட்டையும், ஆணின் விந்துவும் இணைவதால் உருவாகும் கருவணு, பின்னர் பெண்ணின் வயிற்றில் உள்ள கருப்பையில் வளர்கிறது. இதன் தொடக்க நிலையை ‘கலப்பான இந்திரியத்துளி’ என்ற சொல்லால் திருக்குர்ஆன் குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை எண்ணிப்பாருங்கள்.

“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக! மனிதனை (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும்) ரத்தக் கட்டியில் இருந்து அவன் படைத்தான்” (96:1) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இங்கே ‘அலக்’ என்ற அரபிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ‘ஓர் உறைந்த கட்டி’ என்று அர்த்தம். அதோடு அது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்றும் பொருள்படும். இந்தத் தொங்கும் பொருள் ஓர் அட்டைப் பூச்சியைப் போன்ற அமைப்பைக் கொண்டது.

கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூறு துறைத்தலைவராகவும், கருவியல் துறை பேராசிரியராகவும் இருந்தவர் டாக்டர் கீத் மூர். இவரிடம் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள கருவியல் சார்ந்த தகவல்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. தாயின் கருவறையில் வளரும் கரு தொடக்க நிலையில் அட்டைப் பூச்சியைப் போன்று காட்சி அளிக்கக் கூடியது என்பதை டாக்டர் கீத் மூர் அறிந்திருக்கவில்லை.

ஒரு சக்தி வாய்ந்த நுண்ணோக்கி கருவி மூலம் கருவின் ஆரம்ப நிலையை ஆய்வு செய்தார், டாக்டர் கீத். அதை அவர் ஓர் அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அடடா! என்ன ஆச்சரியம். திருக்குர்ஆன் கூறும் கருவியல் தகவலும், சோதனைக்கூட கருவியல் ஆய்வும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதைக் கண்டு அவரது விழிகள் வியப்பால் விரிந்தன. இதன் காரணமாகவே அவர் “முகம்மது இறைவனின் தூதராக இருந்தார் என ஏற்றுக் கொள்வதிலோ, குர்ஆன் உண்மையிலேயே இறைச் செய்திதான் என்பதை ஒப்புக் கொள்வதிலோ எனக்குத் தயக்கமே இல்லை” என்று மொழிந்தார்.

“அவன் உங்களை ஒரே மனிதரில் இருந்து படைத்தான். பிறகு அவரில் இருந்து அவருடைய மனைவியை ஆக்கினான். அவன் உங்களுக்காக கால்நடைகளில் இருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாகப் படைத்தான். உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுதும் உரித்தாகும்.) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படு கிறீர்கள்?” (39:6) என்பது திருக்குர்ஆன் வசனம்.

தாய்மார்களின் வயிறுகளில் கருக்குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்துப் பாதுகாப்பதாக இறைவன் கூறுகின்றான். அதன்படி தாயின் வயிறு, கருப்பையின் சுவர், குழந்தையைச் சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் ஆகியவையே திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் ஆகும்.

“நிச்சயமாக நாம் (ஆதி) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர், அந்த இந்திரியத் துளியை ரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அந்த ரத்தக்கட்டியை ஒரு சதைத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அந்தச் சதைத்துண்டை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறொரு படைப்பாக (மனிதனாக) செய்தோம். எனவே படைப்பாளர்களில் மிக்க அழகானவனான அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன்” (திருக்குர்ஆன்-23:12).

மேற்கண்ட இந்த இறை வசனம், ‘மனிதனை இறைவன் ஒரு துளி விந்தில் இருந்து படைத்து, அதனை ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாகத் தங்க வைத்துள்ளான்’ என்பதை எடுத்துக்கூறுகிறது.

“கர்ப்பப்பைக்குள் இருக்கும் குழந்தை வளரத்தொடங்குகிறது. சுற்றிலும் ‘பிளசெண்டா’ (நச்சுக் கொடி) திரை அமைத்துக் கொள்கிறது. ‘பிளசெண்டா’ எனப்படும் நச்சுக் கொடி, கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் ரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான உணவு, ஆக்சிஜன் போன்றவற்றை பிரித்து எடுத்து ‘தொப்புள் கொடி’ மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.

‘தொப்புள்கொடி’, பார்ப்பதற்கு ஒரு குழாய் (டியூப்) மாதிரி இருந்தாலும், அதற்குள் இரண்டு தமனிகளும், ஒரு சிரையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. உணவு மற்றும் ஆக்சிஜனை ஏந்தி வரும் சுத்தமான ரத்தம், சிரை வழியே தாயிடம் இருந்து உள்ளே போக, குழந்தை அதை உறிஞ்சிக் கொண்டு அசுத்த ரத்தத்தை மிச்சமிருக்கும் இரண்டு தமனிகள் வழியாக ‘பிளசெண்டா’வுக்குள் அனுப்புகிறது.

இதுவரை இருந்த வேகத்தை விட ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருக்குழந்தை சற்று வேகமாக வளரத்தொடங்குகிறது. கருவைச் சுற்றி உருவாகி இருக்கும் மெல்லிய பையில், சற்று வழவழப்பான ‘அம்னியாடிக் திரவம்’ (பனிக்குடம்) நிரம்பி ஐந்தாவது மாதத்தில் ஒரு மினி நீச்சல் குளம் போல ஆகி விடுவதால் கருக்குழந்தை அதில் உற்சாகமாக கை கால்களை உதைத்து நீச்சலடிக்க ஆரம்பிக்கிறது.

கருக்குழந்தை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு மேற்கண்ட மருத்துவக் குறிப்புகள் மறுக்க முடியாத சாட்சியங்களாகக் காட்சி அளிக்கின்றன. 

Next Story