பாவம் போக்கும் சித்ரகுப்தர்


பாவம் போக்கும் சித்ரகுப்தர்
x
தினத்தந்தி 4 May 2017 11:30 PM GMT (Updated: 4 May 2017 9:47 AM GMT)

சித்ரகுப்த என்ற வடமொழி சொல்லுக்கு ‘‘மறைந்துள்ளபடம்’’ என்று பொருள். நாம் செய்யும் குற்றங்களை சித்திரம் போல் ரகசியமாக தம் மனதில் நிலை நிறுத்திக்கொள்வதால் இவருக்கு சித்ரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது.

10–5–2017 சித்ரா பவுர்ணமி

னிதன் பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் தொழிலை சித்ரகுப்தர் செய்கிறார் என்று புராண நூல்கள் கூறுகின்றன. எமதர்மனின் கணக்கராக இருந்து வரும் இவரது பணி, மனிதனின் மரணத்திற்கு பின் அவனது பாவ, புண்ணிய விவரங்களை எமதர்மனிடம் பட்டியலிட்டு காட்டுவது ஆகும். அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப அவர்கள் செல்வது சொர்க்கமா? நரகமா?  என்பது நிர்ணயிக்கப்படுகிறது. சித்ரகுப்தரின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகள் கூறப்படுகின்றன.

சித்ரகுப்த என்ற வடமொழி சொல்லுக்கு ‘‘மறைந்துள்ளபடம்’’ என்று பொருள். நாம் செய்யும் குற்றங்களை சித்திரம் போல் ரகசியமாக தம் மனதில் நிலை நிறுத்திக்கொள்வதால் இவருக்கு சித்ரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது.

 ஆரம்பத்தில் எமதர்மன் தான் இந்த பணியை செய்து வந்தார். அவரது வேலைப்பளு அதிகமான தால் சிவபெருமானிடம் சென்று தனக்கு உதவியாளர் ஒருவர் வேண்டும் என்று கேட்டார்.

சிவபெருமான் ஒரு பொற்பலகையை எடுத்து கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், பொன் நிறம், வெண்மை நிறம் என 7 நிறங்களை கொண்டு ஒரு உருவத்தை வரைந்தார். அந்த உருவத்தின் வலது கையில் தங்க எழுத்தாணியையும், இடது கையில் ஓலைச்சுவடியையும் வைத்திருக்குமாறும், வலது காலை ஊன்றியபடியும், இடது காலை மடித்து அமர்ந்து இருக்கும் படியும் வரைந்தார். வரைந்த சித்திரத்தை உமையம்மையிடம் காட்டி, அதற்கு உயிர் கொடுக்கும் படி கூறினார். அதன்படி சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் சித்ரகுப்தர் என பெயர் பெற்றார்.

அவருக்கு சிவனும், பார்வதியும், சிரஞ்சீவி பட்டத்தை வழங்கி, ஜீவராசிகள் செய்யும் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு பாவத்திற்கு ஏற்ப தண்டனைகளை நிறைவேற்ற எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்கும்படி கூறினர். அதன்படி மனிதன் செய்த பாவங்களுக்கு இரண்டு கட்டமாக தண்டனை வழங்க முடிவு செய்தார். முதற்கட்டமாக மனிதன் செய்த பாவங்களுக்கு தண்டனையாக பூமியில் அவன் வாழும் போதே தீராத மனஉளைச்சலோடு அவதிப்பட வேண்டும். மரணத்துக்கு பிறகு இரண்டாம் கட்ட நரக தண்டனையை அனுபவிக்கவேண்டும். அடுத்தவர் மனைவியை விரும்புபவர்கள், கணவனை வஞ்சித்து வாழும் பெண்கள், பிறருடைய பொருட்களை பறிப்பவர்கள், தெய்வத்தை நிந்திப்பவர்கள் உள்ளிட்ட 28 வகையான பாவ செயல்கள் புரிபவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். இதற்கான முடிவு எடுப்பதில் சித்ரகுப்தருக்கு தனி அதிகாரம் உண்டு.

தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகையின் அழகில் மயங்கினான். அவளை அடைய முயன்ற இந்திரன், பொழுது விடியும் முன்பே கோழிபோல கூவினான். கவுதமர் பொழுது விடிந்து விட்டது என்று கருதி  நீராடப் புறப்பட்டார். பின்பு உண்மையை அறிந்து அகலிகையை கல்லாக போகும்படி சாபமிட்டார்.

 இந்திரனுக்கு உடல் எல்லாம் கண்களாக போகும்படி சாபமிட்டார். இதனால் தேவேந்திரன் தனது மனைவி இந்தி ராணியுடன் காஞ்சீபுரம் வந்து 2 ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தான். இந்திரனின் தவத்தை கண்டு மனமகிழ்ந்த பரமேஸ்வரன் அவன் முன் காட்சி தந்து  ‘இந்திரா! கவுதம முனிவரின் சாபத்தால் உனக்கு குழந்தைப்பேறு இல்லை. இருந்தாலும் சித்ரா பவுர்ணமி அன்று, காமதேனுவின் வயிற்றில் என் அம்சமான மகன் சித்ரகுப்தர் பிறப்பார்’ என்று ஆசி கூறினார். அதன்படி சித்திரை மாதம் பவுர்ணமி அன்று ஞாயிற்றுக் கிழமை காமதேனுவின் வயிற்றில் சித்ரகுப்தன் பிறந்தான். அதனால் பசும்பால், பசு தயிரால் இவருக்கு அபிஷேகம் செய்யக்கூடாது என்றும், எருமைப்பால், எருமை தயிரில்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் கூறுவர். சித்ரகுப்தர் காஞ்சீபுரத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தார். இதன் பயனாக இவருக்கு அறிவாற்றலும், எல்லாவித சித்திகளும் கிடைத்தன. பின்னர் ஈசன் கட்டளையை ஏற்று எமனிடம் போய்ச் சேர்ந்தார்.

திருமணம்


 சித்ரகுப்தர், மயப்பிரம்மாவின் மகள் பிரபாவதியம்மை, மனுப்பிரம்மாவின் புதல்வி நீலாவதியம்மை, விசுவப்பிரம்மாவின் மகள் கர்ணகியம்மை ஆகிய மூவரையும் திருமணம் செய்து கொண்டார். சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும், நரகத்தில் குறைந்தபட்ச தண்டனை வேண்டும் என்றாலும் இவர் அருள் ஒருவருக்கு இருந்தால் தான் முடியும். சித்ரா பவுர்ணமி அன்று இவரை மனம் உருகி வழிபடுவதன் மூலமும், செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்வதன் மூலமும் எந்த சூழ்நிலையிலும், பாவம் செய்யாது இருப்பதன் மூலமும் சித்ரகுப்தரின் அருளை எளிதில் பெறலாம்.

சித்ரகுப்தருக்கு தனிக்கோவில்


காஞ்சீபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக்கோவில் உள்ளது. இது பரிகார தலமாகவும் விளங்குகிறது. வலதுகையில் எழுத்தாணியும், இடதுகையில் ஓலைச்சுவடியும் தாங்கிய எழிலார்ந்த உருவத்தோடு அருள் புரிகிறார். இங்கு கலியுகத்துக்கு முன்னதாகவே சித்ரகுப்தர் எழுந்தருளி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோ‌ஷம், கல்வி தோ‌ஷம், புத்திர தோ‌ஷம் உள்ளிட்ட சர்வ தோ‌ஷங்களும் நீங்கும்.

ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணியங்கள் அனைத்தும்  சித்ரகுப்தரால் எழுதப்படுகிறது என் கிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தரை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை தொடங்கி ‘சித்ரகுப்தாய நம’ என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். மாலையில் பவுர்ணமி நிலவு உதயமானதும் வீட்டில் விளக்கேற்றி சித்ரகுப்தருக்கு பூஜை செய்யவேண்டும். வெண்பொங்கல், இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய், தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன் நீர் மோர், பழங்கள், இளநீர், பலகாரங்கள்  படைக்கவேண்டும். பிறகு ஏழைகளுக்கு முடிந்த அளவுக்கு தானம் செய்யவேண்டும்.

பேனா, பென்சில், நோட்டு ஆகியவற்றை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். பயத்தம்பருப்பும், எருமைப்பாலும் கலந்த பாயாசத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். பின்னர் உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தர் மனம் மகிழ்ந்து நம் பாவ கணக்குகளை குறைப்பார். இந்த விரதம் இருப்பவர்களுக்கு எமபயம் இருக்காது. சித்ரகுப்தரிடத்தில் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திக்க வேண்டும்.  நவக்கிரகங்களில் கேதுபகவானின் அதிஷ்டானதேவதை ஸ்ரீ சித்ரகுப்தரே ஆவார். கேதுபகவானால் ஏற்படக்கூடிய  கெடுபலன்கள் நீங்கிட சித்ர குப்தரை வழிபடவேண்டும்.

 கேது பகவானுக்கு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் சித்ரகுப்தரை வழிபடுவதோடு கேது பகவானுக்கு உகந்த கொள்ளு தானியத்தில் வடை அல்லது சுண்டல் செய்து புளியோதரையுடன் நைவேத்தியமாக படைத்து கேது பகவான் தோத்திரப்பாடலை பாடி செங்கரும்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யவேண்டும்.

பூஜைகள்


காஞ்சீபுரம் சித்ரகுப்தர் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது. ஆலயத்தில் வரசித்தி விநாயகர்,  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை சன்னிதிகள் உள்ளன. கேது பெயர்ச்சி அன்று 108 சங்கு கலச பூஜை 2 நாட்கள் விமரிசையாக நடைபெறும். கார்த்திகை மாதம் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். மார்கழி மாதம் ஆருத்ரா சிறப்பு வழிபாடு, அபிஷேக, அலங்காரங்களும் நடைபெறும். சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்க பலன்படிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெறுகிறது. சித்ராபவுர்ணமி அன்று ஸ்ரீ சித்ரகுப்தருக்கும், ஸ்ரீ கர்ணகியம்மைக்கும் வெகு விமரிசையாக திருமண வைபவம் நடைபெறும். அப்போது  சாமி வீதிஉலா நடைபெறும்.

– செந்தூர் திருமாலன்.

Next Story