ஜெபியுங்கள்! ஜெயம் பெறுங்கள்!


ஜெபியுங்கள்! ஜெயம் பெறுங்கள்!
x
தினத்தந்தி 11 May 2017 10:45 PM GMT (Updated: 11 May 2017 12:34 PM GMT)

நம்முடைய அருமை ஆண்டவர் நமக்குச் சொல்லிக் கொடுத்த மிகப்பெரிய பாடம் ஜெபம் தான். எந்த சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுக்கிறார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி நாம் ஜெபம் பண்ணும்போது 'நம்முடைய ஜெபத்திற்கு அவர் பதில் கொடுக்கிறார் என்பதே நாம் அவரைப் பற்றிக் கொண்டிருக்கிற தைரியம்' என 1 யோவான் 5:14-ம் வசனம் சொல்லுகிறது.

விசுவாசமுள்ள ஜெபம்

'நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்' (மத்தேயு 21:22)
 நாம் ஜெபிக்கிற ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்கிறார் என்று நாம் கூறினாலும் சில ஜெபங்களுக்கு பதில் வராத போது உடனே நாம் சோர்ந்து போவதுண்டு. மேலும் தொடர்ந்து ஜெபிப்பதற்கு இயலாமல் ஜெபவாழ்வில் பின்னடைவை சந்திக்கிறோம்.

புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு அற்புதங்களை நாம் பெற வேண்டுமானாலும் அதற்கு நம்முடைய விசுவாசம் தான் மிகவும் அவசியமானதாய் கருதப்படுகிறது. நம்முடைய அருமை ரட்சகராகிய இயேசு கிறிஸ்து எங்கெல்லாம் அற்புதங்களைச் செய்தாரோ அங்கெல்லாம் அற்புதத்தை எதிர்பார்த்து வந்த மக்களிடம் விசுவாசத்தைத்தான் ஆண்டவர் எதிர்பார்த்தார்.
உங்கள் வாழ்விலும் உங்கள் ஜெபத்தின் மூலம் நீங்கள் அற்புதங்களைப் பெற முடியும். 'உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்' என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

விசுவாசம் என்றால் என்ன?

'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1). இந்த வசனத்தின்படி 'நாம் பெற்றுக்கொள்ளாத,  காணாத ஆசீர்வாதங்களை நிச்சயம் அடைவோம்' என்ற நம்பிக்கையோடு காத்திருப்பது தான் விசுவாசம்.

'நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்' (ரோமர் 8:25). இந்த வசனத்தின்படி நாம் காணாததை நம்பினோம் என்றால் கர்த்தர் நிச்சயமாய் அற்புதங்களை செய்வார் என்று பொறுமையோடு காத்திருப்போம்.

ஆகவே, இதுவரைக்கும் நீங்கள் பெற்றுக்கொள்ளாத அனுபவிக்காத ஆசீர்வாதங்களை நிச்சயம் கர்த்தர் எனக்குத் தருவார் என பொறுமையோடு அவரைத் துதியுங்கள்.

தேவனிடத்தில் விசுவாசம்

'இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்' (மாற்கு11:22).

நம்முடைய தமிழ் வேதாகமத்தில் 'தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்' என்ற வார்த்தைக்கு வேறொரு மொழிபெயர்ப்பில் 'தேவனுடைய விசுவாசம்'  என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் இங்கு அருமை இரட்சகர் வலியுறுத்துகிறார்.

நீங்கள் விரும்புகிற எந்த அற்புதமானாலும் அதை பெறுவதற்கு உங்கள் விசுவாசத்தை தேவன் பேரில் வையுங்கள். தேவனுடைய விசுவாசம் உங்களுக்குள் கிரியை செய்ய இடம் கொடுங்கள்.

தேவனுடைய விசுவாசத்தைக் குறித்து விளக்க வேண்டுமானால், 'ஆபிரகாம் பிள்ளை இல்லாமல் இருந்த காலத்தில் நட்சத்திரங்கள் போல உன் சந்ததி பெருகும்' என கூறினார். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் ஒவ்வொரு பிள்ளைகளாக தேவன் கண்டார். இதுதான் தேவனுடைய விசுவாசம். இப்படிப்பட்ட விசுவாசம் உடையவர்களாய் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.

மாற்கு11:23-ல் 'எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என ஆண்டவர் கூறின வார்த்தையை நீங்கள் மிகவும் எளிதாக எடுக்க வேண்டாம்.
தேவனுடைய விசுவாசம் நமக்குள் எப்படி கிரியை செய்ய வேண்டுமென்பதற்கு ஆதாரமுள்ள வார்த்தை இதுவாகும்.

உங்களுக்கு முன்பாக மலை போன்ற பிரச்சினை இருந்தால் அந்த பிரச்சினையை உங்கள் விசுவாசக் கண்களினால் முதலாவது பாருங்கள். அவ்வாறு நீங்கள் பார்க்கும் போது அவைகள் உங்களைக் கலங்கப் பண்ணுவது போல தெரியும்.

ஆனால் உங்கள் இருதயத்தில் இருக்கிற விசுவாசத்தை கண்களின் வழியாக விசுவாசப்பார்வையாக மாற்றி அவைகளைப் பார்க்க வேண்டும். அப்படியானால் உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள உங்கள் கண்கள் விசுவாசக் கண்களாய் மாற அர்ப்பணியுங்கள்.

அதே வசனத்தில் பிரச்சினைகளைப் பார்த்து பேசுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் வாய் எப்போதும் விசுவாச வார்த்தைகளைப் பேசக்கூடிய வாயாக காத்துக் கொள்ளுங்கள். அவிசுவாசமான வார்த்தை ஒருபோதும் உங்கள் நாவில் வருவதை கர்த்தர் விரும்பவில்லை.
உங்களுக்கு முன்பாக இருக்கிற பிரச்சினைகளானாலும் சரி நீங்கள் விரும்புகிற தேவைகளானாலும் சரி அவைகள் அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதற்கு அடிக்கடி விசுவாச வார்த்தைகளைப் பேசி அற்புதங் களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

சந்தேகமில்லா விசுவாசம்

ஆண்டவராகிய இயேசு, 'இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்' என்று கூறுகிறதை மாற்கு 11:23-ல் நாம் காணலாம்.

ஆம், சந்தேகம் என்பது ஒரு ஆவியாகும். அது குழப்பத்தையும், கலக்கத்தையும், பயத்தையும் கொண்டு வந்து அற்புதங்களை நாம் காண முடியாதபடிக்கு நம்மை மட்டுப்படுத்தும்.

ஆகவே இருதயத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்படாமல் 'நான் நம்புவது கர்த்தரால் வரும்', 'நான் நிச்சயமாய் அற்புதங்களைக்காண்பேன்', 'என் மீட்பர் உயிரோடிருக்கிறார்' என விசுவாசத்திற்கு ஏதுவான வார்த்தைகளைக்கூறி சந்தேகத்தின் ஆவியை துரத்துங்கள். உங்கள் விசுவாசத்தின்படி தேவன் அற்புதங்களைக் காண கிருபை செய்வார். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.

Next Story