நற்செய்தி சிந்தனை


நற்செய்தி சிந்தனை
x
தினத்தந்தி 16 May 2017 9:44 AM GMT (Updated: 16 May 2017 9:44 AM GMT)

“என் பொருட்டு மக்கள், உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே!

பேறு பெற்றோர்

ந்தக்காலத்தில் இயேசு பிரான் இவ்வுலகில் தொடர்ந்து போதித்துக் கொண்டிருந்தார். நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒருநாள் அவர் மலையின் மீது ஏறினார். அங்கே அவர் அமர்ந்தார். அவருடைய சீடர்கள் அவரருகே வந்தனர்.

அவர், திருவாய் மலர்ந்து இவ்வாறு கூறினார்:

“ஏழையின் உள்ளத்தோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயரப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக ஆக்கிக் கொள்வர்”.

“நீதியை நிலை நாட்டும் விருப்பம் கொண்டவர்கள் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையவர்கள் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுபவர். நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர் களுக்கு உரியது”.

“என் பொருட்டு மக்கள், உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ச்சியோடு பேருவகை கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைமாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்பு இருந்த இறைவாக்கினர்களையும், அவர்கள் துன்புறுத்தினார்கள்”.

‘மத்தேயு’ என்ற நற்செய்தியாளர் எழுதிய, இவ்வாசகத்தை ஆழ்ந்து படிப்போம். இப்பகுதியில் சொல்லப்படும் ஒவ்வொரு சொற்றொடரும் மிகவும் பொருள் கொண்டதாக இருக்கிறது. சுருக்கமாக ஒரே வரியில் சொன்னால், இவ்வுலகில் துன்பப்படுவோர் பேறு பெற்றவர்கள் என்கிறார். இவ்வுலகம் நிரந்தரமல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஏழையரின் உள்ளத்தை உடையவர்கள், பேறு பெற்றவர்கள் என்கிறார். உன் உள்ளத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதே என்பதுதான் இதன் அடிப்படைக் கருத்தாக அமைகிறது. இவர்களுக்குத்தான் விண்ணரசு கிடைக்கிறது என்கிறார்.

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழைந்து விடலாம். செல்வந்தன் விண்ணரசை அடைய முடியாது என்ற நற்செய்தி கருத்தையும் இவ்விடத்தில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

கவலை வேண்டாம்; துன்பப்படுவோர்கள், நிச்சயம் ஆறுதல் அடைவார்கள் என்கிறார். நீதியை நிலை நாட்டுவதற்காகவே, இயேசு பிரான் இவ்வுலகில் அவதரித்தார். ஆகவே அவர், நீதியை நிலைநாட்டும் விருப்பம் உடையவர்கள் பேறு பெற்றவர்கள் என்கிறார். ஏனென்றால் அவர்கள் நிறைவைப் பெறுவார்கள் என்கிறார். நிறைவு என்றால் என்ன? அதுதான் ‘மன நிறைவு’ என்பதாகும்.

இறைவனை எல்லோரும் காண முடியாது. இறைவனைக் காண வேண்டும் என்றால், தூய்மையான உள்ளத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். தூய்மையான உள்ளத்தைக் கொண்டவர்களாக நாம் இருப்போமானால் நாம் பேறு பெற்றவர்கள் என்று கூறுகிறார்.

எல்லோரும் கடவுளின் மக்கள் என்று நாம் எண்ணுகிறோம். இயேசு பெருமான் போதிக்கும்பொழுது, கடவுளின் மக்கள் யார்? என்பதைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

“இவ்வுலகில் அமைதியை யார் ஏற்படுத்துகிறார்களோ அவர்களே பேறு பெற்றவர்கள். ஏனெனில் இவர்கள்தான் இறைமக்கள்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

நீதியின் பொருட்டு யார் போராடினாலும், நிச்சயம் இவ்வுலகில் துன்புறுத்தப்படுவார்கள். அப்படிப் போராடுபவர்கள் பேறு பெற்றவர்கள். ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கே உரியது என்கிறார்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இறுதியாக ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார். ‘என் பொருட்டு, மக்கள் உங்களைத் துன் புறுத்தி, இகழ்வாகப் பேசி, இல்லாத பொல்லாதவற்றைச் சொல்லும்போது, நீங்கள் பேறு பெற்றவர்கள். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகில் துன்பப்பட்டாலும் விண்ணுலகில் கிடைக்கும் கைமாறு மிகுதியாகும். உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களும் இப்படித்தான் துன்புறுத்தப்பட்டார்கள்’ என்கிறார்.

இந்நற்செய்தி வாசகத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். பேறு பெற்றவர்கள் யார்? என்ற பட்டியலையே நமக்கு அளிக்கிறார். துன்பப்படுவோர், துயரப்படுவோர் யாராக இருந்தாலும் என்று எண்ணுவதை விட, நீதியின் பொருட்டு, யார் துன்பப்பட்டாலும், துயரப்பட்டாலும் என்ற கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் நீதியை நிலை நிறுத்துவதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. நீதியை நிலை நாட்டவும், இறையரசை இவ்வுலகில் நிறுவவுமே, இயேசு பிரான், இம்மண்ணுலகில் அவதரித்தார் என்பது திருமறைக் கோட்பாடாகும். இன்றைய உலகில் நாமும் கண்கூடாக எத்தனையோ நிகழ்வுகளைப் பார்க்கிறோம். நீதி, அநீதி என்று பிரித்துப் பார்க்கும்பொழுது, அநீதியே இவ்வுலகில் அதிகமாக ஆட்சி புரிகிறது. நீதியை வலியுறுத்துவோர் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள். நீதிக்காக போராடக்கூடியவர்கள், யாராக இருந்தாலும் எச்சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், துன்பப்படுவதும், துயரப்படுவதும் ஏன்? கொல்லப்படுவதும்கூட சர்வ சாதாரணமாக இருப்பதைக் காண்கிறோம்.

இயேசு பெருமானும், நீதியைக் காத்து, அநீதியை அழிக்கவே, இம்மண்ணுலகில் மனித உருவாகப் பிறப்பெடுத்தார். இப்படிப்பட்டவர் களைப் பற்றி இந்த நற்செய்தியில் பேசும்பொழுது, யார் பேறு பெற்றவர்கள் என்ற வரிசையில், ‘இவ்வுலகில் யார் அமைதியை ஏற்படுத்துகிறார்களோ, அவர்களே பேறு பெற்றவர்கள்; ஏனென்றால், இவர்கள்தான் இறைமக்கள்’ என்று அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறார்.

அமைதியை யார் நிலைநாட்டமுடியும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், நீதிக்காகப் போராடி வெற்றி காண்பவர்களே, அமைதிக்காகப் போராட முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படிப்பட்ட மக்கள் தோன்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக, இயேசு பிரான் இம்மண்ணுலகில், எளிமை யாகப் பிறந்து, இன்னல்களை ஏற்று, ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்து, மனித சமூகம் மாண்புற தன் அன்பை வழங்குகிறார். அன்பிற்குச் சான்றாக தன் உயிரையே தியாகம் செய்கிறார். இயேசு பெருமானின் வாழ்க்கை, நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்பதைத்தான், இந்த நற்செய்தி போதிக்கிறது.

Next Story