இந்திரன் சாபம் நீங்கிய தலம்


இந்திரன் சாபம் நீங்கிய தலம்
x
தினத்தந்தி 16 May 2017 10:32 AM GMT (Updated: 16 May 2017 10:32 AM GMT)

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் நந்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தென் கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பாகசாலை என்ற தலம். இங்கு புரந்தரேஸ்வரர் ஆலயம். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்திற்கு, பல நூற்றாண்டுகளை கடந்த பெருமை உண்டு. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் புரந்தரேஸ்வரர். இறைவி கல்யாணி அம்பாள்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் நந்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து மகாமண்டபம் உள்ளது. இடதுபுறம் இறைவியின் சன்னிதி உள்ளது. அன்னை தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். நான்கு கரங் களில் மேல் வலது கரத்தில் சாமரமும், மேல் இடது கரத்தில் வஜ்ராயுதமும், கீழ் வலது மற்றும் இடது கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரை காட்டியும் நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள் அன்னை.

மகா மண்டபத்தின் தென் மேற்கு மூலையில் கணபதி, காசி விசுவநாதர், காசி விசாலாட்சி திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன. வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையின் திருமேனிகள் உள்ளன. அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள கருவறையில் இறைவன் புரந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கே பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தின் மேற்கில் முக்குருணி விநாயகர், வடக்கில் சண்டிகேசுவரர், கால பைரவர், வடகிழக்கில் சனீஸ்வரன் சன்னிதிகள் இருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சனி பகவான் நின்ற கோலத்தில் தனித்து நின்று அருள்பாலிப்பதால், இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.

தல வரலாறு

அகலிகை ஒரு பேரழகி. கவுதம முனிவரின் மனைவி. அவளது அபரிமிதமான அழகில் இந்திரன் மதி மயங்கினான். அவளை அடையும் நோக்கில், கவுதம முனிவர் வெளியே சென்றிருந்த வேளையில், அவரது உருவத்திலேயே அகலிகையிடம் வந்தான். சிறிது நேரத்தில் கவுதம முனிவர் இல்லம் திரும்பினார். அவரைப் பார்த்ததும் அஞ்சிய தேவந்திரன், பூனை வடிவம் எடுத்தான். மனைவி தவறு செய்து விட்டதாக கருதிய முனிவர், அவளை கல்லாக போகும்படி சபித்தார். பிறர் மனை நோக்கிய இந்திரனை, அவனது உடல் முழுவதும் ஆயிரம் குறிகள் தோன்றும்படி சாபம் கொடுத்தார்.

சாபம் பெற்ற இந்திரன் பிரம்மன் கூறிய அறிவுரைப்படி குறுமாணக்குடிக்குப் புறப்பட்டான். வழியில் இத்தலம் வந்து தங்கிய தேவேந்திரன், யாகம் வளர்த்து அங்கிருந்த புரந்தேரேஸ்வரரையும், கல்யாணி அம்பாளையும் வேண்டி தவம் இருந்தான். தேவேந்திரன் தங்கி யாகம் வளர்த்த அந்த ஊர் ‘யாகசாலை’ என அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி ‘பாகசாலை’ என்றானதாக கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தில் இறைவனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டு, சோமவாரம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, நவராத்திரி நாட்கள் ஆகியவற்றில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.

மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்கள், இங்கு திருவிழா நாட்களே. சனிப்பெயர்ச்சி நாட்களில் சனி பகவானுக்கும், குருபெயர்ச்சி நாட்களில் தட்சிணா மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், அன்னதானமும் நடைபெறுகிறது. ஆவணி உத்திராடம் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நாள். எனவே அந்த நாளில் இங்கு உள்ள இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு பூஜை நடைபெறுவதுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். அன்று இங்கு நடைபெறும் சிறப்பு யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் செல்ல, மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரப் பேருந்துகளும் உள்ளன.

Next Story