புண்ணியம் மிகுந்த பூரி ஜெகந்நாதர் ஆலயம்


புண்ணியம் மிகுந்த பூரி ஜெகந்நாதர்  ஆலயம்
x
தினத்தந்தி 25 May 2017 11:00 PM GMT (Updated: 25 May 2017 8:48 AM GMT)

இந்தியாவின் புனித தலங்களில் நான்கு மிக முக்கியமானவை. அவை துவாரகை, பத்ரிநாத், ராமேஸ்வரம் மற்றும் பூரி. இதில் பூரி ஜெகந்நாதர் ஆலயமானது, வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.

ந்தியாவின் புனித தலங்களில் நான்கு மிக முக்கியமானவை. அவை துவாரகை, பத்ரிநாத், ராமேஸ்வரம் மற்றும் பூரி. இதில் பூரி ஜெகந்நாதர் ஆலயமானது, வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. பூரியை ஆட்சி செய்து வந்த இந்திர தையுமா என்ற மன்னனால், பூரி ஜெகந்நாதர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயம் காலவெள்ளத்தில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் கூட அந்த இடத்தில் பலகோவில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. பின்னர் கி.பி.12–ம் நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசர்களால் தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சோடகங்கன், ராஜேந்திரச் சோழனின் வழி வந்தவன் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலைக் கட்ட கங்கையில் இருந்து கோதாவரி வரையான சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட மக்களின் 12 ஆண்டுகால வரிப்பணத்தை செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிய மேலும் சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மனிதனுக்கு பொறுமை வேண்டும்

இந்திர தையுமா என்ற மன்னன் பூரியை ஆண்டு வந்தான். சிறந்த பக்திமானான அவனது கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறினார். மேலும், கடலில் மிதந்து வரும், ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்கும்படியும் தெரிவித்தார். கனவில் இறைவன் சொன்னதை, தனக்கான உத்தரவாகவே எண்ணிய மன்னன், தன்னுடைய காவலர்களை பூரி கடற் கரைப் பகுதியில் காவலுக்கு நிறுத்தி வைத்தான். ‘கடலில் ஏதாவது பொருள் மிதந்து வந்தால், அதை எடுத்து வரும்படி உத்தரவிட்டான்’.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, கடலில் ஒரு பெரிய மரக்கட்டை மிதந்து வந்தது. காவலர்கள் அதை எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த தலைசிறந்த தச்சர் ஒருவரிடம், அந்த மரத்தில் சிலை செய்யும் பணியை மன்னன் ஒப்படைத்தான். அவர் அந்த மரத்தில் உளியை வைத்தவுடன், அந்த உளி உடைந்து போனது. தொடக்கமே அபசகுணமாக இருந்ததால், மன்னன் வருத்தம் கொண்டான்.

அப்போது பெருமாள், ஒரு முதிய தச்சர் வேடத்தில் அங்கு வந்தார். ‘மன்னா! 21 நாட்களில் சிலை செய்யும் பணியை முடித்துத் தருகிறேன். ஆனால் நான் வேலை செய்யும் அறையை யாரும் திறக்கக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். அரசனும் ஒப்புக்கொண்டான்.

15 நாட்களுக்கு தொடர்ச்சியாக உளி சத்தம் கேட்டபடி இருந்தது. எனவே அரசன், வேலை மும்முரமாக நடப்பதாக எண்ணி அந்த அறை பக்கம் போகவில்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு எந்த சத்தமும் இல்லை. இதனால் ‘தச்சர் தூங்கி விட்டாரோ’ என்று எண்ணிய அரசன், அறைக்கதவை திறந்தான்.

அங்கே பெருமாள் பெரிய உருவம் எடுத்து நின்றார். ‘மனிதனுக்கு பொறுமை வேண்டும். மூன்று நாட்கள் சத்தம் இல்லாமல் இருந்ததால் அவசரப்பட்டு கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோவிலில் நீ ஸ்தாபனம் செய்யும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். இருப்பினும் அதையே பிரதிஷ்டை செய்துவிடு. இந்தக் கோவிலுக்கு வருபவர்கள், இந்தச் சிலைகளைப் பார்த்து, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளட்டும்’ என்று கூறி மறைந்தார்.

அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா தேவி ஆகியோரின் சிலைகள் இருந்தன. அதை அரசன் பிரதிஷ்டை செய்தான்.

உயரமான கருவறை விமானம்

பூரி ஜெகந்நாதர் ஆலயம், கடற்கரைக் கோவில் என்பதால், கடலில் நீராடிய பிறகே இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும். கடற்கரையில் மார்க்கண்டேஸ்வரர் கோவில் இருக்கிறது. கடலில் நீராடிவிட்டு, முதலில் மார்க்கண்டேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்குள்ள பாண்டவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனுமன் தீர்த்தம் போன்றவற்றில் நீராடிவிட்டு தான் ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும். ஆயத்திற்கு இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோவிலுக்குச் செல்ல நான்கு வாசல்கள் இருக்கின்றன. சிங்கவாசல், குதிரை வாசல், யானை வாசல், புலிவாசல். இவற்றை அந்தப் பகுதி மக்கள் ‘சிம்ஹதுவார், ஹஸ்துவார், ஹாஸ்திதுவார், வியாக்ரதுவார்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாசலும் பிரமிடு போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக் கிறது. இந்த ஆலயத்தில் உள்ள ஒரு கோபுரம் 713 அடி உயரம் கொண்டதாகும். ஒடிசாவிலேயே இந்த கோபுரம்தான் மிகவும் உயரமானது. இது ராஜகோபுரம் இல்லை. மூலவர் ஜெகந்நாதரின் கருவறை விமானம் ஆகும்.மூன்று தேர்கள்

பூரி ஜெகந்தாதர் ஆலயத்தில் ஆனி மாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த தேர்கள் ஆண்டு தோறும் புதியதாக உருவாக்கப்படுகின்றன. நந்திகோஷ் அல்லது கருடத்வஜா என்று அழைக்கப்படும் ஜெகந்நாதரின் தேர், 45 அடி உயரம் கொண்டது. 16 கலைகளைக் குறிக்கும் வகையில், 16 சக்கரங்கள் இருக்கும். நான்கு வேதங்களைக் குறிக்கும் விதத்தில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும்.  தேர் வடத்திற்கு, சங்கசூடா என்று பெயர்.

பலராமரின் தேர் ‘தலத்வஜ்’ என்று அழைக்கப்படுகிறது. இது 44 அடி உயரம் கொண்டது. 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வகையில் 14 சக்கரங்கள் இருக்கும். நான்கு வேதங்களும், நான்கு குதிரைகளாக இருக்கும் இந்த தேரின் வடத்திற்கு வாசுகி என்று பெயர்.

‘தரவதவானா’ என்பது சுபத்ராதேவியின் தேர் பெயராகும். இதன் உயரம் 43 அடி. 12 மாதங்களைக் குறிக்கும் வகையில் 12 சக்கரங்களைக் கொண்டது. ஸ்வர்ணசூடா என்பது இந்தத் தேர் வடத்தின் பெயர். இந்த தேர் சிவப்பு மற்றும் கருப்பு நிறத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

56  வகை பிரசாதங்கள்

பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையில் ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பலராமர் 6 அடி உயரமும், ஜெகந்  நாதர் 5 அடி உயரமும், சுபத்ரா 4 அடி உயரமும் இருக்கிறார்கள். இவர்கள் முறையே வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங் களில் காட்சி தருகின்றனர். இவர்கள் மூவரின் சிலையும் மரத்தால் செய்யப்பட்டவை. இந்த உருவங்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதியதாக உருவாக்கப்படுகின்றன. கருப்பு நிறமும், பெரிய கண்களும் கொண்ட ஜெகந்நாதர், சாம வேதத்தைக் குறிக்கும் விஷ்ணுவின் சொரூபம் ஆவார். வெண்மை நிறமும், தாமரைக் கண்களும் கொண்ட பலராமர், ரிக் வேதத்தைக் குறிக்கும்  சிவனின் சொரூபமாக விளங்குகிறார். மஞ்சள் நிறமும், தாமரைக் கண்களும் கொண்ட சுபத்ரா, யஜூர் வேதத்தைக் குறிப்பவராகவும், சக்தியின் அம்சமாகவும் திகழ்கிறார். இங்குள்ள இறைவனுக்கு 56 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இந்த நைவேத்தியம் முக்கியமானது. பல பானைகளில் சாதம், குழம்பு, கூட்டு போன்றவை நைவேத்தியமாக படைக்கின்றனர். இந்த நைவேத்தியங்கள்தான், அந்த ஆலயத்தில் முக்கிய பிரசாதமாக விற்பனை செய்யப்படுகிறது.

Next Story