கேரளாவில் புகழ்பெற்ற தெய்யம் ஆட்டம்


கேரளாவில் புகழ்பெற்ற தெய்யம் ஆட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2017 12:45 AM GMT (Updated: 19 Jun 2017 11:03 AM GMT)

ஒரு காலத்தில், கேரளாவில் உயர் வகுப்பினர் வழிபடும் கோவில்களில் மற்ற வகுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

ரு காலத்தில், கேரளாவில் உயர் வகுப்பினர் வழிபடும் கோவில்களில் மற்ற வகுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் மற்ற இனத்தவர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தையும், அதற்காகத் தனி வழிபாட்டையும் கடைப்பிடித்து வந்தனர். இந்த வழிபாட்டில் ஒன்றாகத் தெய்யம் ஆட்டமும் இடம் பெற்றது. ‘தெய்வம்’ எனும் சொல்லே ‘தெய்யம்’ என்று மருவி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

தெய்வமே ஆடும் ஆட்டமாகக் கருதப்படும் இந்த ஆட்டத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களைத் தெய்வம் போல் வேடமிட்டுக் கொண்டு ஆடுகின்றனர். இந்தத் தெய்யம் ஆட்டம் 39 வகையான ஆட்டங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தெய்யம் ஆட்டத்தில் பொதுவாகப் பெண்கள் பங்கேற்பதில்லை. ஆண்களே பெண் வேடமிட்டும் ஆடுகின்றனர். ‘தேவக்கூத்து தெய்யம்’ எனும் ஒரு வகையான ஆட்டத்தில் மட்டும் பெண் வேடத்தில் பெண்களே ஆடுவார்கள்.

தெய்யம் ஆட்டம் ஆடுபவருக்குச் சிறப்பான ஒப்பனை செய்யப்படுகிறது. இந்த ஆட்டம் ஆடுபவர்களுக்கு பலமான உடல், முறையான பயிற்சி போன்றவை தேவையாக இருக்கிறது. இந்த ஒப்பனையில் சிவப்பு நிறத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிவப்பு நிறம்தான் வீரத்தையும், கோபத்தையும் வெளிக்காட்டும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

உடலுக்கு மேலுடை, கீழுடை எல்லாமே மூங்கில் நார், தென்னம்பாளைக் கீற்று, தென்னங்குருத்தோலை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. கிரீடம் மூங்கில் பட்டையில் சிவப்பு நிறத் துணி அல்லது காகிதம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அத்துடன் மணிகள், மாலைகள், குமிழ்கள், கத்தி, கேடயம் என்று பல பொருட்களையும் சேர்த்து அதிக எடையைச் சுமந்து கொண்டு இவர்கள் பல மணி நேரம் ஆட வேண்டியிருக்கிறது. தெய்யம் ஆட்டத்திற்கான ஒப்பனைக்குக் குறைந்தது 5 முதல் 10 மணி நேரம் வரை தேவைப்படுகிறது என்கின்றனர்.

‘செண்ட மேளம், இலத்தாளம், குழல்வாத்தியம் கொண்டு இசைக்கப்படும் இசை முழக்கத்திற்கேற்ப, தெய்யம் ஆட்டமாடுபவர்கள் அடியெடுத்து வைக்கும் ‘கலாசம்’ என்கிற அசைவுதான் தெய்யம் ஆட்டம் எனப்படுகிறது. இந்த ஆட்டத்தில் உணர்வுகளைத் தொட்டு எழுப்பும் வாத்தியங்களின் இசை, கலைஞர்களின் ஒப்பனை, அதிசயிக்க வைக்கும் ஆடை அலங்காரங்கள், அவர்களது முகபாவங்கள், உணர்வுகளை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக இருக்கும். சில வகையான தெய்யம் ஆட்டத்தில், கிரீடத்திலும் இடுப்பிலும் பற்றி எரியும் தீப்பந்தங்கள், தீ வளர்த்து அதைத்  தீண்டுவது, கைகளால் வாருவது, தீக்கங்கு களில் அமர்வது, படுப்பது போன்ற காட்சிகளும் இடம் பெறுகின்றன.

தெய்யம் ஒப்பனை செய்த ஆட்டக்காரர் சாதாரண மனிதனாக இருந்தாலும், அவர் வேடமிட்டிருக்கும் உருவத்திற்கேற்பக் கடவுளாகி விடுகிறார். தெய்யம் ஆட்டம் முடியும் வரை அவர் கடவுளாகவே மதிக்கப்படுகிறார். சில கோவில்களில் தெய்யம் ஆட்டம் ஆடுபவர்கள் பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கான துன்பங்களுக்குத் தீர்வுகளைக் கடவுளாக இருந்து சொல்கிறார்கள்.

–தேனி மு.சுப்பிரமணி

Next Story