மலர்களில் தோன்றிய மகான்கள்


மலர்களில் தோன்றிய மகான்கள்
x
தினத்தந்தி 27 Jun 2017 8:09 AM GMT (Updated: 27 Jun 2017 8:09 AM GMT)

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் இம்மூவரும் மலர்களில் அவதரித்த மகான்கள் என்பது யாருக்கும் கிடைக்காத பெருமை.

திருமாலிடம் தீவிர பக்தி கொண்டு தன்னையை அர்ப்பணித்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்களில் காலத்தால் முந்தியவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். இவர்கள் மூன்று பேரும் ‘முதலாழ்வார்கள்’ என்றும், ‘மூவர் முதலிகள்’ என்றும் போற்றப்படுகின்றனர். இம்மூவரும் சம காலத்தவர்கள் மட்டுமல்லாது, மலர்களில் அவதரித்த மகான்கள் என்பது யாருக்கும் கிடைக்காத பெருமை.

பொய்கை ஆழ்வார்

முக்தி தரும் தலமான காஞ்சி மாநகரில் ஏராளமான சைவ, வைணவக் கோவில்கள் இருந்தாலும், அதில் திருவெளூகா எனப்படும் யதோத்காரி திருக்கோவில் (சொன்னவண்ணம் செய்த பெருமாள்) பிரசித்திப் பெற்றது. அதன் அருகில் உள்ள பொய்கையில் பொன்வண்ணமாக மின்னிய ஒரு தாமரை மலரில், சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசித் திங்கள் அஷ்டமித் திதி, திருவோண நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை அன்று தெய்வீக ஒளியுடன் ஒரு குழந்தை அவதரித்தது. திருமாலின் ஐம்படைகளின் ஒன்றாக விளங்கும் பாஞ்ச சன்யம் என்ற சங்கின் அம்சமாக பிறந்தவரே பொய்கை ஆழ்வார் என்பது ஆன்றோரின் அருள்வாக்கு. இளமையிலேயே அனைத்து மறைகளையும் கற்று உணர்ந்து யோகியாய்த் திரிந்து, மகாவிஷ்ணுவிடம் மாறாத அன்பு கொண்டிருந்தார்.

பூதத்தாழ்வார்

பொய்கை ஆழ்வார் தோன்றிய மறுநாள், அதாவது சித்தார்த்தி ஆண்டு, அவிட்ட நட்சத்திரத்தில் புதன்கிழமை அன்று நவமி திதியில் ஒரு திருக்குழந்தை தோன்றியது. ‘அலைகள் தாலாட்டும் மாமல்லபுரம்’ என்றும், ‘கடல் மல்லை’ என்றும் இலக்கியங்களில் போற்றப்படும் மகாபலிபுரத்தில் பள்ளிகொண்ட அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இவரை தல சயனப் பெருமாள் என்று அழைப்பார்கள்.

அந்த ஆலயத்தின் நந்தவனத்தில் இருந்த, குருக்கத்தி மலரின் மீது பிறந்தவர் பூதத்தாழ்வார். திருமாலின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கவுமோதகி என்னும் கதை ஆயுதத்தின் அம்சமாக இறை ஒளியுடன் ஒரு குழவி தோன்றியது பூதத்தாழ்வாராக பிற்காலத்தில் பிரசித்தி பெற்றவர் அவரே ஆவார். எம்பெருமானுடைய உண்மையான நிலைமையை உணர்ந்து பரஞானம் அடைந்தவர் என்பதனால், ‘பூதத்தார்’ எனப் பெயர் வந்ததாக சொல்வர்.

பேயாழ்வார்

பூதத்தாரின் அவதார தினத்துக்கு அடுத்த நாள், ஐப்பசி மாதம் சதயத் திருநாளில் வியாழக்கிழமை தசமி திதியில் பரந்தாமனின் நாந்தகம் என்ற வாளின் அம்சமாக ஒரு மழலை தோன்றியது.

அந்தக் குழந்தை சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் உதயமாகியது. மயிலை அருண்டேல் தெருவில் உள்ள ஒரு மடத்தையும், அதில் உள்ள பெரியகிணறு ஒன்றையும் பேயாழ்வாரின் அவதார இடமாக காட்டுகிறார்கள்.

இவர் இளமையில் நன்று கல்வி கற்று, உலக வாழ்வில் பற்றற்று இடையறாது எம்பெருமாளைச் சேவித்து வந்தார். அதிக அன்பு கொண்டு வாழ்ந்ததனால் உலகத்தாரால் பேயன் என்று அழைக்கப்பட்டார். அதிக காற்றை பேய்காற்று என்றும், பெரு மழையை பேய்மழை என்றும் சொல்வோம் அல்லவா? அதுபோல அதிக பக்தியில் ஆடியதால் ‘பேய் ஆழ்வார்’ என்றனர். அதில் ஒன்றும் தவறில்லையே.

மூவரின் சந்திப்பு

திருமாலின் திருவுள்ளப் படி மூன்று நாட்களில், மூன்று தலங் களில் முதலாழ்வார்கள் மூவரும் தோன்றினர். அவர்களை ஓரிடத்தில் இணைக்கவும், அவர்களின் வாயிலாக தேன் சொட்டும் தமிழ் பாசுரங்களைச் செவிமடுக்கவும் இறைவன் முடிவு செய்தார். ஏனெனில் இந்த மூன்று மால் அடியார்களும் யோகியர் களாக இருந்ததினால், அவர்கள் ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் ஊர் ஊராக திரிந்து கொண்டிருந்தனர்.

திருவிக்ரம பெருமாள் எழுந்தருளி இருக்கும் திருக்கோவலுர் என்ற தலத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, மூவருக்கும் பெருமாள் ஏற்படுத்தினார்.

ஒரு நாள், பொய்கையார் திருக்கோவலூர் சென்றார். இரவு நேரமாகிவிட்டது. ஒரு வைணவப் பெரியாரின் இல்லம் சென்று இடைக்கழியில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும் ‘எனக்கு இடமுண்டோ?’ என்று வினவினார்.

‘இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்’ என்று எழுந்து அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து பேயார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க ‘இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம், நீரும் வாரும்’ என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கருமேக நிறத்துப் பெருமாள், பெருமழையையும், காரிருளையும் தோற்றுவித்து, தாமும் அவர்களுடே நின்று நெருக்கடியை உண்டாக்கினார்.

‘வந்திருப்பது யார்?’ என்று ஆழ்வார்கள் மூவரும் புறக்கண்ணால் நோக்கியபோது அவர்களின் கண்ணுக்குப் பெருமாள் அகப்படவில்லை. பின்னர் தங்களின் தவ நிலையைக் கொண்டு அகக்கண்ணால் கண்டனர். அப்போது நாராயணரே வந்து தங்களோடு நிற்பதைக் கண்டு உடல் சிலிர்த்துப் போனார்கள். உள்ளம் உருகினார்கள்.

அப்போது திருமால் நாச்சியாரோடு, கருடவாகனத்தில் காட்சி கொடுத்தார்.

‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே’

என்றுமூவரில் முதல்வரான பொய்கையார் வெண்பா பாடினார்.

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இருதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நாள்’

- இது கடல் மல்லையில் குருக்கத்தி மலரில் அவதரித்த பூதத்தாரின் பாட்டு.

பேயார் மட்டும் சும்மா இருப்பாரா? தான் கண்ட திருக்காட்சியைத் திகட்டாத தமிழாக்கினாார்

‘திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கினரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று’

-அன்று தொடங்கி, அவர்கள் திருக்கோவில்கள் தோறும் நாடிச் சென்று பாடினார்கள். தேமதுரத் தமிழ் திவ்ய தேசமெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

Next Story