இஸ்லாத்தின் தனிச் சிறப்பு


இஸ்லாத்தின் தனிச் சிறப்பு
x
தினத்தந்தி 27 Jun 2017 8:17 AM GMT (Updated: 27 Jun 2017 8:17 AM GMT)

ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக் கொடை), ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் கொண்ட மார்க்கம், இஸ்லாம்.

லகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ அல்லது ஒரு தனிப்பட்ட சமுதாயத்துடனோ தொடர்புடையதல்ல. பொதுவாக மனித குலம் முழுமைக்கும் இறைவன் (அல்லாஹ்) தேர்ந்தெடுத்த மார்க்கம் இஸ்லாம் ஆகும். இது எல்லா மொழியினருக்கும் எல்லாச் சமுதாயத்திற்கும் பொருத்தமானது; பொதுவானது.

ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக் கொடை), ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் கொண்ட மார்க்கம், இஸ்லாம்.

“லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை- அல்லாஹ்வைத் தவிர! முகமது நபி அவனுடைய திருத்தூதர்) என்ற ‘கலிமா’வை சொன்னவுடன், அவர் முஸ்லிம் ஆகி விடு கிறார் என்பது மட்டுமல்ல; அவர் சமத்துவ பாதையில் நடைபோடத் தொடங்குகிறார். உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டைக் களைகின்ற களமாக தொழுகை அமைந்துள்ளது. நோன்பு திறக்கும்போது பணக்காரரும், ஏழையும் பாகுபாடின்றி கஞ்சி அருந்துவது சமத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. ‘ஜகாத்’ என்கிற கட்டாயக் கொடை சமுதாயத்தில் நிலவும் பொருளாதார பாகுபாட்டைப் போக்குகிற வழிமுறையாக உள்ளது. நாடு, மொழி, நிறத்தால் வேறுபட்ட லட்சக்கணக்கான மக்கள், ஒரே உடையில், ஒரே குரலில் ஒரே சிந்தனையில் சந்திக்கும் சமத்துவ மாநாடு, ஹஜ். இப்படி இஸ்லாம் கூறும் ஐந்து கடமைகளின் செயல்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், அவற்றின் பின்னணியில் ‘சமத்துவம்’ பின்னிப் பிணைந் திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தக் கட்டாயக் கடமைகளில் ஒழுங்கும், நேரக் கட்டுப்பாடும் பேணப்படுகிறது. வரையறுக்கப்பட்ட நேரங்களில் இறைவனை கட்டாயம் வணங்க வேண்டும் என்று ஐவேளைத் தொழுகைக்கு வரையறை செய்துள்ளது, இஸ்லாம். தொழுகையைத் தலைமை தாங்கி நடத்த வேண்டிய ‘இமாம்’ குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அவருக்காக யாரும் காத்திருப்பதில்லை. அவருக்குப் பதிலாக வேறொருவரைக் கொண்டு தொழுகை நடைபெறும். தாமதமாக வந்த ‘இமாம்’ கடைசி வரிசையில் காணப்படுவார்.

குறிப்பிட்ட நேரத்தில் உணவருந்தி நோன்பு இருக்க வேண்டும். அதைப்போல குறிப்பிட்ட நேரத்தில் நோன்பைத் திறக்க வேண்டும். ஹஜ் வழிபாடுகளும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிவடையும். திரளான மக்கள் திரண்டாலும் அங்கே நேரமும், ஒழுங்கும், கட்டுப்பாடும் பேணப்படும்.

இஸ்லாம் ஓர் ஆதாரபூர்வமான மார்க்கம். இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலேயே, அருளப்பட்ட மொழியிலேயே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வேத நூல்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கான அறிவுரைகளே அதில் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் ஒவ்வொரு இடத்திலும், ‘மனிதர்களே!’ ‘ஆதமுடைய மக்களே!’ ‘இறை நம்பிக்கையாளர்களே!’ என்று அழைத்து அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கும். இது அகில உலக மக்களுக்காக அருளப்பட்டது என்பதை நிரூபிக்கிறது. இந்த உலகில் உள்ள அதிக மக்களால் மனனம் செய்யக் கூடிய- ஓதக்கூடிய ஒரே வேத நூலாக விளங்குகிறது, திருக்குர்ஆன்.

இன்று மனித உரிமைகள் குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் உரத்த குரலில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பிரெஞ்சுப் புரட்சி என்பது மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது. சமூகத்தில் வெவ்வேறு வர்க்கத்தினருக்கு வெவ்வேறு உரிமைகள் என்ற நிலை மாறி சமத்துவம், மனித உரிமைகள் போன்ற கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கியதாகக் கருதப்பட்டது. 1789-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி பிரெஞ்சு மானுடப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

தாமஸ் ஜெபர்சன் உருவாக்கிய அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் 1776-ம் ஆண்டு வெளியானது. இதில், “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும் முழு உரிமை உண்டு” என்று கூறப்பட்டிருந்தது.

பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்க சுதந்திர பிரகடனம் காரணமாக சுதந்திரம், சமத்துவம், சக வாழ்வு கிடைத்ததாகக் கருதுகிறார்கள். ஆனால் இந்த இரண்டுக்கும் மூலமாக இருப்பது 1,400 ஆண்டுகளுக்கும் முன்பு இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆனே ஆகும். மனித உரிமைகளின் பாதுகாவலனாகவும், பாதுகாப்பு அரணாகவும் இஸ்லாம் விளங்குகிறது. அது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வலிமை மிக்க கொள்கைகளை வகுத்துத் தந்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து மனித குலத்திற்கான உரிமைகளை பாதுகாப்பதற்கு என்று 30 அம்ச கொள்கைகளை ஐ.நா.சபை அறிவித்தது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளும், சுதந்திரமும் வரையறுக்கப்பட்டன. ஐ.நா. சபை ஆவணப்படுத்திய உரிமைகளோடு, இஸ்லாம் வழங்கிய உரிமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இஸ்லாம் மார்க்கத்தின் உயர்வை-உன்னதத்தை- அதன் தனிச் சிறப்பைப் புரிந்து கொள்ள முடியும்.

“மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண் மற்றும் பெண்ணில் இருந்துதான் படைத்தோம்... உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமானவர் ஆவார்” (திருக்குர்ஆன்-49:13) என்பது இறைமறை வசனம்.

சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்கிற எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், சமத்துவத்தை நிலை நிறுத்தி, ஒரு மனிதனுக்கான சகல சம உரிமைகளையும் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

(நிறைவு பெற்றது) 

Next Story