இறைவனால் ஈர்க்கப்பட்ட மாணிக்கவாசகர்


இறைவனால் ஈர்க்கப்பட்ட மாணிக்கவாசகர்
x
தினத்தந்தி 27 Jun 2017 10:14 AM GMT (Updated: 27 Jun 2017 10:14 AM GMT)

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக போற்றப்படும் மாணிக்கவாசகர் எழுதிய நூலே ‘திருவாசகம்’ என்ற சிறப்புக்குரிய பெரும் படைப்பாகும்.

பாண்டிய நாட்டின் வைகை ஆற்றின் கரையில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவரது இயற்பெயர் வாதவூரார் என்பதாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக போற்றப்படும் மாணிக்கவாசகர் எழுதிய நூலே ‘திருவாசகம்’ என்ற சிறப்புக்குரிய பெரும் படைப்பாகும்.

சிறு வயதிலேயே கல்வியிலும், ஞானத்திலும் சிறந்த விளங்கினார் வாதவூரார். அவரது அறிவாற்றலை அறிந்த, பாண்டிய மன்னனான அரிமர்த்தன பாண்டின், வாதவூராருக்கு தனது அரசவையில் அமைச்சர் பதவியை வழங்கி கவுரவித்தான். உயர் பதவி, நிறைந்த செல்வம் போன்றவை இருந்தும், எதையோ இழந்தது போன்ற உணர்வையே வாதவூரார் உணர்ந்து கொண்டிருந்தார். அது பற்றி ஆராய்ந்த போது சைவ சித்தாந்தங்களை கற்றறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதன்பிறகு இறைவனின் அடிசேர்வதே தன்னுடைய வாழ்வின் இறுதி நோக்கம் என்பதை அவர் புரிந்து கொண்டார். அதனால் சிவ வழிபாட்டை மேற்கொள்ளத் தொடங்கினார்.

ஒருசமயம், சோழநாட்டில் தரமான, வளமான குதிரைகள் கிடைப்பதாக அறிந்தான் பாண்டிய மன்னன். உடனடியாக தனது அமைச்சரான வாதவூராரை அனுப்பி, குதிரைகளை வாங்கி வரும்படி பணித்தான். குதிரை வாங்குவதற்கு தேவையான பொன், பொருட்களையும் கொடுத்து அனுப்பினான்.

அதே நேரத்தில் தான், ஈசன் தன்னுடைய திருவிளையாடலைத் தொடங்கினார். திருப்பெருந்துறை திருத்தலத்தில், தன்னை ஒரு குருவைப் போல மாற்றிக்கொண்டு அங்கிருந்த குருந்த மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்தார் சிவபெருமான். அந்த வழியாக வந்த வாதவூரார், குருந்த மரத்தின் அடியில் இருந்த குருவை, ஈசனே வந்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தார். அவர் அருகில் சென்று பணிந்து வணங்கினார். அப்போது சிவபெருமானின் பாதம், வாதவூராரின் தலை மீது பட்டது. அடுத்த நொடியே இறைவனை நினைத்து பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

அவரது பாடலைக் கேட்டு அந்த பரமனே உள்ளம் உருகிப்போனார். ‘நீ பாடிய செந்தமிழின் ஒவ்வொரு வார்த்தையும், மாணிக்கம் போன்றது. நீ மாணிக்கவாசகன்’ என்று ஆசீர்வதித்து மறைந்தார் இறைவன்.

இறையருள் கிட்டிய மகிழ்ச்சியில் தன்னையே மறந்தார் மாணிக்கவாசகர். தன்னையே மறந்துவிட்டவருக்கு, தான் வந்த பணி மட்டும் நினைவிலா இருக்கப் போகிறது. மன்னன் கொடுத்தனுப்பிய பொன்னையெல்லாம் கொண்டு, அங்கேயே தங்கி கோவில் திருப்பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்.

பல நாட்கள் கடந்த நிலையிலும் மாணிக்கவாசகர் வராததால், அவருக்கு மன்னன் ஓலை அனுப்பினான்.

அதனைப் பார்த்த மாணிக்கவாசகர், ஈசனை தேடி ஓடினார். ‘ஐயனே! மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?’ என்று கண்ணீர் வடித்தார்.

‘ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்துசேரும் என்று மறு ஓலை அனுப்பு’ என்று அசரீரி கேட்டது. மாணிக்கவாசகரும் அவ்வாறே செய்தார். சிறிது நாள் கழித்து மாணிக்கவாசகரை, மதுரைக்கு திரும்பும்படி ஈசன் கூறினார். அதன்படி மதுரை திரும்பியவரிடம், ‘குதிரைகள் எங்கே?’ என்று கேட்டான் பாண்டிய மன்னன்.

‘நீங்கள் இதுவரை பார்த்திராத அழகிய திடமான குதிரைகள் வந்து கொண்டிருக்கின்றன’ என்றார் மாணிக்கவாசகர்.

ஆனால் ஆடிமாதம் கடைசி நாள் வரை குதிரைகள் வராததால், மன்னனுக்கு கோபம் வந்தது. மாணிக்கவாசகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

இதற்கிடையில் ஈசன், காட்டில் இருந்த நரிகளை, குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பிவைத்தார். அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் மன்னன். ஆனால் அன்று இரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடிவிட்டன.

மன்னனின் கோபம் எல்லை கடந்தது. மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தினான். அவர் ஈசனை நினைத்து வேண்டினார். அப்போது ஆற்றில் வெள்ளம் மதுரையை சூழ்ந்தது. மாணிக்கவாசகரை சுற்றிலும் தண்ணீர் கால் அளவுக்கே ஓடியது.

ஆற்றின் கரையை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னன் உத்தரவிட்டான். அவ்வூரில் வந்தி என்ற மூதாட்டி புட்டு விற்று பிழைத்து வந்தாள். தினமும் ஒரு புட்டை ஈசனுக்கு படைத்து, அடியவர்களுக்கு அளிப்பாள். வயோதிகம் காரணமாக கூலி ஆள் தேடினாள் வந்தி. அப்போது ஈசன், பணியாள் வேடம் கொண்டு தனக்கு புட்டு தந்தால், பணிக்கு செல்வதாக கூறவே, பாட்டியும் கொடுத்தாள்.

பணிக்கு சென்ற ஈசன், பணியை கவனிக்காமல் ஓரிடத்தில் படுத்து உறங்கினார். அப்போது அங்கு வந்த மன்னன், பிரம்பால் ஈசனை அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. மன்னன் திகைத்தான். பணியாள் உருவில் வந்த ஈசன் ஒரு கூடை மண்ணை ஆற்றின் கரையில் கொட்டியதும் வெள்ளம் வடிந்தது.

இது தனது திருவிளையாடலே என்று உரைத்து ஈசன் மறைந்தார்.

மாணிக்கவாசகரை மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க மன்னன் கூறியும், மறுத்து சிதம்பரம் சென்றார் மாணிக்கவாசகர். தில்லையம்பதியானை நினைத்து அவர் திருவாசகம் பாட, அதனை அங்கிருந்த வேதியர் ஒருவர் சுவடியில் எழுதினார். இறுதியில் பாடலின் அடியில் திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு, அந்த வேதியர் மறைந்தார். அப்போதுதான் தான் பாடிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பதை அவர் அறிந்தார்.

பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், 8-ம் திருமுறையாக விளங்குகின்றன. சோதனைகளைக் கடந்த இறைவழி நின்ற மாணிக்க வாசகர், 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, ஒரு ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார். 

Next Story