நல்லருள் வழங்கும் நக்கரவந்தன்குடி திரவுபதி


நல்லருள் வழங்கும் நக்கரவந்தன்குடி  திரவுபதி
x
தினத்தந்தி 7 July 2017 5:30 AM IST (Updated: 6 July 2017 6:53 PM IST)
t-max-icont-min-icon

சாதிக்க நினைப்பவரே அதிக சோதனைக்கு உள்ளாவார்கள் என்பது அனுபவ மொழி.

சாதிக்க நினைப்பவரே அதிக சோதனைக்கு உள்ளாவார்கள் என்பது அனுபவ மொழி. ஆனால் அதுபோன்ற சோதனை சமயங்களில், தைரியத்தை தரவல்ல சக்தி வழிபாட்டை மேற்கொள்வதும் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். எதையும் எதிர்கொள்ள முடியும் என்கின்ற மனோபலத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுகின்ற சக்தி வழிபாட்டின் ஒரு அங்கமே திரவுபதி வழிபாடு.

திரவுபதி தமிழ் தெய்வமல்ல என்றாலும், தன்னுடைய பொறுமை, சகிப்புத்தன்மை, மனஉறுதி ஆகியவற்றால் தமிழ் மக்களால் தெய்வமாக ஏற்கப்பட்டவள். பாஞ்சால தேசத்து மன்னன் துருபதனின் மகளாக பிறந்து, பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனை மணந்தவள். கவுரவர்கள், பாண்டவர்களின் அரச போட்டியையும், அங்கு தர்மத்தை நிலைநாட்ட நடந்த முயற்சிகளையும் கூறும் மகாபாரத காவியத்தின் மகத்துவம் மிக்க நாயகி திரவுபதி.

 தமிழகத்தில் திரவுபதிக்கான ஆலயங்களை, பழைய வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காண முடிகிறது.  

இத்தகைய ஆலயங்களில் ஒன்றே கடலூர் மாவட்டம் நக்கருகந்தகுடி கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் ஆலயம். தற்போது நக்கரவந்தன்குடி, நற்கந்தன்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. மற்ற ஊர்களில் உள்ள ஆலயத்தை விட திரவுபதியோடும், அவள் வரலாற்றுடனும் நேரடி தொடர்புகொண்டதாக இந்த ஊரும், ஆலயமும் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இதற்கான ஆதாரம், இந்த ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற  தலங்களில் ஒன்றான திருவேட்களம் (அண்ணாமலைநகர்) பாசுபதேஸ்வரர் ஆலய வரலாற்றில் இருக்கிறது. அடுத்ததாக வேறு எங்கும் காண இயலாதபடி மிகப்பெரிய மூலவர் திருமேனியை கொண்டிருப்பது இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பாகும்.

ஒருசமயம் வியாச பகவான், வனவாசத்தில் இருந்த பாண்டவர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘அஸ்தினா புரத்தில் பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாவீரர்களை தன்னோடு வைத்துக் கொண்டிருப்பது போதாதென, துரியோதனன் மேலும் பல அரசர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றான். அவன் அப்படி பலம் பெற்றுவிட்டால் நீங்கள் அவனை வெல்ல  முடியாது. ஆகவே தெய்வீக ஆற்றல் மிக்க அஸ்திரசஸ்திரங்களை வேண்டிப்பெறுவது அவசியம்’ என்று கூறினார்.

அவரது பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த தருமன், அர்ச்சுனனை அழைத்தான். ‘தெய்வீக அஸ்திரங் களைப் பெறுவதற்கான தகுதி உன் ஒருவனுக்கே உள்ளது. அதற்கான முயற்சியில் ஈடுபடு’ என்று கூறினான்.

இதையடுத்து அர்ச்சுனன் அங்கிருந்து புறப்பட்டான். அவனை வழியில், முதியவர் வேடத்தில் சந்தித்த இந்திரன், ‘சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தால் பலன் கிடைக்கும்’ என்று அறிவுறுத்தினான்.

‘சரி சிவனை நினைத்து தவம் செய்ய எங்கு செல்லலாம்’ என்ற கேள்வி எழுந்த போது, கிருஷ்ணனை மனதில் நினைத்தான் அர்ச்சுனன். அவன் முன் தோன்றிய கிருஷ்ணர், ‘தில்லையின் எல்லையில் ஒரு மூங்கில் வனம் உள்ளது. அங்கு சென்று தவம் செய்’ என்று ஆசீர்வதித்தார். அந்த இடமே இன்றைய திருவேட்களம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளாகும்.

 அர்ச்சுனன் ஆயுதம் பெறுவதற்காக தவம் செய்வதை ஒற்றர் மூலம் அறிந்த துரியோனன், மூகாசுரன் என்னும் பன்றி வடிவ அசுரனை அனுப்பி, அவன் தவத்தை கலைக்கும்படி கூறினான். அந்த அசுரனும் அப்படியே செய்ய முற்படுகிறான். இத்தருணத்தில் எம்பெருமான் அர்ச்சுனனை காப்பதற்காக உமையம்மையுடன் சேர்ந்து வேடுவ வடிவெடுத்து, வேதங்கள் நான்கையும் நாய்க்குட்டிகளாக மாற்றிக் கொண்டு வந்தார்.

தன் தவத்தை பன்றி வடிவ அசுரன் கலைக்கவே, நினைத்ததும் கைக்கு வரும் அஸ்திரத்தை வைத்து பன்றியை வீழ்த்துகிறான் அர்ச்சுனன். பின்னர் அடிபட்ட பன்றியை பார்த்தபோது, அதன் மீது இரண்டு அம்புகள் இருப்பதைக் கண்டு வியந்தான். அப்போது வேடன் உருவில் இருந்த சிவபெருமான் அங்கு வந்து, ‘நான்தான் அம்பை எய்தேன். வேட்டைப் பொருள் என்னுடையது’ என்று உரிமை கோரினார்.

அர்ச்சுனனுக்கு உரிமை கோர விருப்பம் இல்லையென்றாலும், தான் விட்ட அம்பால் இறந்த பன்றியை இன்னொருவர் உரிமை கொண்டாடுவதை அவனால் ஏற்க முடியவில்லை. ஈசனுடன் சொற்போர் நடத்தினான். வாய்ச் சண்டை, கைச் சண்டையாக மாறியது. போரில் அர்ச்சுனனால் வெல்ல முடியவில்லை.

அப்போதுதான் தன்னை எதிர்த்து நிற்பது சாதாரண மனிதன் இல்லை என்பது அவனுக்கு புரிந்தது. இருப்பினும்  வீரனான அவன் தோற்க மனமின்றி தொடர்ந்து போரிடுகிறான். வேடுவன் உருவில் இருந்த ஈசனை வீழ்த்த அக்னிதேவனிடம், காண்டீபம் தருமாறு வேண்டிப் பெற்றான். தன் அனுமதியின்றி தரப்பட்ட காண்டீபத்தை வேடுவ சிவன் வேடிக்கையாக முறித்து எறிகிறார். இதை ஏற்கமுடியாத அர்ச்சுனன் முறிந்த வில்லால் சிவனின் தலையில் அடித்தான். (அர்ச்சுனன் அடித்த அடியால் சிவனின் தலையில் தழும்பு ஏற்படுகிறது. இந்த தழும்புடனேயே திருவேட்களம் பாசுபதேஸ்வரர் இருப்பதை இன்றளவும் காணலாம். அர்ச்சுனன் சிவனோடு போர் புரிந்ததை கிராதார்ச்சுனீயம் என்ற வடமொழி காவியம் விரிவாக கூறுகிறது).

சிவன் கோபத்தில் அர்ச்சுனனை எட்டி உதைக்க, உயரேச்சென்று தலைகீழாக தரையை நோக்கி விழ வந்தவனை காக்க, உமையம்மை கிருபாசாகரம் என்னும் தீர்த்தத்தை (பாசுபதேஸ்வரர் ஆலய தீர்த்தம்) உருவாக்கி அதில் விழச்செய்கிறாள். குளத்திலிருந்து எழுந்து வந்த அர்ச்சுனன், தன் பிழை பொறுக்குமாறு இறைவனை வேண்டினான். சிவபெருமானும் அவன் வீரத்தைப் பாராட்டி அவனை ஆசீர்வதித்து பாசுபத அஸ்திரத்தை தந்தருளினார்.

அர்ச்சுனனுடன் ஏற்பட்ட சண்டையால் களைப்புற்ற சிவன், ஓய்வெடுப்பதற்காக உகந்த ஒரு இடத்தைத் தேடி வந்தார். சிவனுக்கு ‘நக்கர்’ என்ற பெயருண்டு. இப்படி நக்கருக்கு உகந்த இடமாக அமைந்த ஊராதலால், சிவன் அமர்ந்த இடம் ‘நக்கருகந்தகுடி’ என்றாயிற்று.  வேடுவ சிவன் ‘பள்ளமுடையார்’ என்றும், வேடுவ அன்னை ‘பள்ளமுடைச்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். வேடுவ தம்பதியினராகவும் வேதங்களை நாயாகவும் உருமாற்றி வந்ததால், இவரை கானக தெய்வமாகவே இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். இக்கோவில் திரவுபதி அம்மன் ஆலயத்திற்கு இரண்டு கிலோமீட்டர் வடமேற்கு திசையில் நக்கருகந்தங்குடி– கொடிப்பள்ளம் எல்லையில் அமைந்துள்ளது.

மகாபாரத வரலாற்றுடன் நீண்டதொரு தொடர்பை நேரடியாகக் கொண்ட இந்த ஊரில், அதன் அடிப்படையில் கட்டப்பட்டதாகவே இந்த திரவுபதி அம்மன் கோவில் பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இது பிற திரவுபதி அம்மன் கோவில்களுக்கெல்லாம் மூலக்கோவிலாக இருந்திருக்கலாம் என்பதும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும். மேலும் இந்த ஆலயத்திலிருந்து அரவானின் தலையை எடுத்துச் சென்று, பிற ஊர்களிலுள்ள திரவுபதி அம்மன் ஆலயங்களில் திருவிழா நடத்தியிருப்பதற்கான செய்திகள் இதன் பழமையையும் பெருமையையும் உறுதி செய்கின்றன.

பொதுவாக சிவாலயங்களில் உள்ள அம்பாள் மட்டுமே பெரிய திருமேனியுடன் காட்சியளிப்பதை காணலாம். விதிவிலக்காக சக்தி வழிபாடு கொண்ட ஓரிரு ஆலயங் களில் மூலவரை பெரிய திருவுருவத்துடன் காண முடியும். மற்ற ஆலயங்களில் அம்பாள் சிறிய திருமேனி கொண்டவராகவே இருப்பார். அதிலும் திரவுபதி அம்மனுக்கான ஆலயங்களில் மூலவர் சிலை சிறியதாகவே இருக்கும். ஆனால் விதி விலக்காக இவ்வாலயத்தில் ஐந்தடி உயரத்தில் அழகுப்பதுமையாய் திரவுபதி அம்மன் காட்சியளிப்பது காண கண்கொள்ளாக் காட்சியாகும். சிற்பக்கலை சாஸ்திரப்படி கலை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை வடிவத்தை வர்ணிப்பது அவ்வளவு சுலபமல்ல. எழிலார்ந்த தோற்றத்துடன் சற்றே வலப்புறம் சாய்ந்து, ஒரு கையில் கிளியுடன் ஒயிலாக நிற்கும் தோற்றத்தில் திரவுபதி அருள்புரிகிறாள்.

வரலாறு மற்றும் அமைப்பின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த ஆலயம் காலப்போக்கில் சிதறுண்டு போனது. பின் வந்தவர்களால் படிப்படியாக திருப்பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இறுதியாக 108 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2011–ம் ஆண்டு இந்த ஆலயம் கும்பாபிஷேக விழாவை சந்தித்திருக்கிறது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வசந்தகால அக்னி உற்சவ விழா வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான அக்னி உற்சவ விழா வருகிற 10–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

கிழக்கு நோக்கிய இக்கோவிலின் இடதுபுறத்தில் விநாயகருக்கு தனி ஆலயமும், தீர்த்தகுளமும் இடம்பெற்றுள்ளது. பிரகாரச் சுற்றில் உள்ள சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காலபைரவர், ஆஞ்சநேயர் மூர்த்தங்கள் யாவும், கும்பாபிஷேக விழாவில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். ஆலயத்தின் உள்ளே விநாயகர், முருகன், அய்யப்பன், கிருஷ்ணர், அர்ச்சுனர், கருடாழ்வார் ஆகியோரின் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.

சிதம்பரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நக்கரவந்தன்குடி. சிதம்பரத்திலிருந்து  பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

–நெய்வாசல் நெடுஞ்செழியன்.

Next Story