ஆம்பூர் அருகே நாகாலம்மன் கோவிலில் படம் எடுத்து ஆடிய நாகபாம்பு பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு


ஆம்பூர் அருகே நாகாலம்மன் கோவிலில் படம் எடுத்து ஆடிய நாகபாம்பு பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு
x
தினத்தந்தி 4 Aug 2017 11:45 PM GMT (Updated: 4 Aug 2017 8:13 PM GMT)

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் கிராமத்தில் நாகாலம்மன் கோவில் உள்ளது. நேற்று ஆடி 3-ம் வெள்ளியையொட்டி காலையில் நாகாலம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது.

ஆம்பூர்,

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் பாலாற்று பகுதியில் உள்ள படிக்கட்டில் இருந்து ஒரு பாம்பு வந்தது. அந்த பாம்பு படிக்கட்டு வழியாக நாகாலம்மன் கோவிலுக்குள் வந்தது. அப்போது அங்கிருந்த கோவில் பூசாரி, பக்தர்களிடம் கோவிலுக்குள் நாகபாம்பு வந்துள்ளது. இதனால் அம்மனே வந்துள்ளதாக கூறினார்.

இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீபோல பரவியது. அதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கோவிலில் குவியத்தொடங்கினர். ஆனால் அந்த பாம்பு எங்கும் செல்லாமல் கோவிலில் இருந்த ஒரு மரத்தூணில் சென்று பதுங்கி கொண்டது.

இதனையடுத்து கோவில் தர்மகர்த்தா வெங்கடேசன் மற்றும் கோவில் பூசாரி நாகபாம்புக்கு கற்பூரம் காட்டி தீபாராதனை செய்தனர். பெண் பக்தர்கள் சிலர் நாகாலம்மனுக்கு கொண்டு வந்த பாலை நாகபாம்பு முன்பு ஊற்றினர். அப்போது திடீரென நாகபாம்பு படம் எடுத்து ஆடியது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். இதனையடுத்து ஒரு சில பெண்களுக்கு சாமி வந்து ஆடியது.

நாகபாம்பு மெல்ல மெல்ல நகர்ந்து நாகாலம்மன் கோவிலில் உள்ள அரச, வேப்பமரம் உள்ள பகுதிக்கு சென்றது. இதனை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

Next Story