கிருஷ்ணர் பிடித்த பிரமாண்ட குடை


கிருஷ்ணர் பிடித்த பிரமாண்ட குடை
x
தினத்தந்தி 8 Aug 2017 10:24 AM GMT (Updated: 8 Aug 2017 10:24 AM GMT)

தன் மக்களை காக்கும் பொருட்டு, கோவர்த்தன மலையையே தூக்கினார் கிருஷ்ணர். அதை தன் சுண்டுவிரலால் தாங்கிப் பிடித்தார்.

பிருந்தாவனத்தில் மழை வேண்டி, இந்திரனுக்கு யாகம் செய்ய கோகுலத்து மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை வலம் வந்து வழிபடும்படி தன் மக்களை அறிவுறுத்தினார். இந்திரன் தன்னுடைய பதவியையும், பலத்தையும் எண்ணி இறுமாப்பு கொண்டிருந்தான். அவனுக்கு பாடம் புகட்டவே கிருஷ்ணர் அவ்வாறு செய்தார். கோகுலத்து மக்களும் கிருஷ்ணர் சொன்னபடியே செய்தனர்.

கிருஷ்ணரின் இந்த செய்கையால் கோபம் கொண்ட இந்திரன், தன்னுடைய கோபத்தை பிருந்தாவன மக்களின் மீது காட்டினான். பல வகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம், பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும்.

பிருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக் கும் படி, இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டான்.

இந்திரனின் கட்டளைப்படி அந்த அபாயகர மான மேகங்கள், பிருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடி இடித்தது; மின்னல் வெட்டியது; பலமான காற்று வீசியது. கூரிய அம்புகள் போல் நீர் தாரைதாரையாக தரை இறங்கின. சற்று நேரத்தில் பிருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலைமை மிக மோசமானது. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் பிருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின.

அந்தத் தொல்லையில் இருந்து விடுபட முடியாத மக்கள், கிருஷ்ணரை சரணடைந்தனர்.

தன் மக்களை காக்கும் பொருட்டு, கோவர்த்தன மலையையே தூக்கினார் கிருஷ்ணர். அதை தன் சுண்டுவிரலால் தாங்கிப் பிடித்தார். அது ஒரு குடைபோல் மாறிப்போனது. அந்த பிரமாண்ட மலை குடையின் கீழ், பிருந்தாவன மக்களும், கால்நடைகளும் அடைக்கலம் புகுந்தனர்.

கிருஷ்ணர் தமது இடது கையின் சுண்டு விரலின் நுனியில் அந்த பெரிய மலையை ஒரு வார காலம் நிறுத்தி வைத்திருந்தார். இதைக் கண்டு ஆயர்கள் ஆச்சரியமடைந்தனர். கிருஷ்ணரின் அசாதாரண சக்தியைக் கண்டு இந்திரன் நிலைகுலைந்தான்.

உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள் எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றது. பலத்த காற்று வீசுவதும் நின்றது.

தேவலோகத்தில் இருந்து அங்கு வந்த இந்திரன், தன்னுடைய குற்றத்தை பொறுத்தருளும்படி கிருஷ்ணரிடம் வேண்டினான். அவனது கர்வமும் அத்துடன் அடங்கிப்போனது.

வடமாநிலத்தில் உள்ள பிருந்தாவனத்திற்குச் செல்பவர்கள், அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவர்த்தன மலையை இன்றும் தரிசிக்கலாம். 

Next Story