சேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழா: சமயபுரம் மாரியம்மன் வீதி உலா


சேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழா: சமயபுரம் மாரியம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 12 Aug 2017 10:47 PM GMT (Updated: 12 Aug 2017 10:47 PM GMT)

சேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 14–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆடித்திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த நிலையில் நேற்று செவ்வை நகர ‌ஷராப் வர்த்தக நண்பர்கள் குழு சார்பில் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் மூலவராகவும், செவ்வாய்பேட்டை மாரியம்மன் உற்சவராகவும் தங்கநகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதிஉலா நடந்தது.

17 அடி உயரம்

சமயபுரம் மாரியம்மன் மூலவர் சிலையானது 17 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் குழுவை சேர்ந்த தலைவர் ரெங்காராவ், செயலாளர் சரவணன், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த பல்லக்கு பவனியானது சிங்காரப்பேட்டை, அப்புச்செட்டி தெரு, கபிலர் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சேர்மன் ரத்தினசாமி தெரு, சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இதுபோல சேலம் மாநகர துளுவ வேளாளர் சமூகத்தினரால் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்நகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், தடைகள் வராத கொடைகள் தரும் ஸ்ரீவரதான கவுரி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காட்சி நடந்தது. வீதி உலாவுக்கு முன்பு கேரள செண்டை மேளம் முழங்கியபடியே சென்றது.

இன்று வண்டி வேடிக்கை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு அலங்கார வண்டிகள் வலம் வரும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பெறும் அலங்கார வண்டிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கப்படும், நாளை (திங்கட்கிழமை) சத்தாபரணம் நடக்கிறது.Next Story