விசுவாசமும், நம்பிக்கையும்


விசுவாசமும், நம்பிக்கையும்
x
தினத்தந்தி 22 Aug 2017 6:22 AM GMT (Updated: 22 Aug 2017 6:22 AM GMT)

இயேசு பிரான் கூட்டத்தினரை அவ்விடத்தில் இருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடர்களையும் உடனே படகின் மீது ஏறி, தாம் அக்கரைக்குச் செல்வதற்கு முன், அவர்களைச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினார்.

நற்செய்தி   சிந்தனை - செம்பை சேவியர்

யேசு பிரான் கூட்டத்தினரை அவ்விடத்தில் இருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடர்களையும் உடனே படகின் மீது ஏறி, தாம் அக்கரைக்குச் செல்வதற்கு முன், அவர்களைச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினார்.

மக்களை அனுப்பி விட்டு இறைவனிடம் வேண்டிக் கொள்வதற்காக ஒரு மலையின் மீது ஏறினார். பொழுதானது சாய்ந்த பிறகும், அங்கே அவர் தனியே இருந்தார்.

படகானது அதற்குள் கரையில் இருந்து வெகுதூரம் சென்று விட்டது. எதிர்க்காற்றும் அடித்துக் கொண்டிருந்தது. ஆகவே அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டு இருந்தது.

இரவு நேரம், நான்காம் காவல் வேளை. இயேசு பெருமான், அவர்களை நோக்கி கடல் தண்ணீர் மீது நடந்து வந்தார். அவர் கடல் மீது நடப்பதைக் கண்ட சீடர்கள் கலக்க முற்றனர். ‘ஐயோ! பேய்!’ என்று அச்சத்தினால் அலறினர்.

பயப்படுவதைக் கண்ட இயேசு பிரான் அவர்களிடம் பேசினார். ‘துணிவோடு இருங்கள். நான்தான், பயப்படவேண்டாம்’ என்றார்.

பேதுரு, அவருக்கு மறுமொழியாக, ‘ஆண்டவரே! நீர்தாம் என்றால், நானும் கடல் மீது உம்மிடம் நடந்து வர ஆணையிடும்’ என்றார்.

அதற்கு அவர், ‘வா’ என்றார்.

பேதுருவும் படகில் இருந்து இறங்கி, இயேசுவை நோக்கி கடல் தண்ணீர் மீது நடந்து சென்றார்.

அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டதும் பயந்து போய், ‘ஆண்டவரே! என்னைக் காப்பாற்றும்’ என்று உரக்கக் கத்தினார்.

இயேசு பெருமான் உடனே தம் கையை நீட்டி, அவரைப் பிடித்துக் கொண்டு, ‘நம்பிக்கை குறைந்தவனே, ஏன் சந்தேகம் கொண்டாய்?’ என்று கேட்டார்.

இயேசு பெருமான் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தவர்கள் இயேசுவைப் பணிந்து, ‘உண்மையாகவே நீர் இறைமகன்’ என்றனர்.

அவர்கள் மறுகரைக்குச் சென்று, ‘கெனசரேத்’ என்ற பகுதியை அடைந்தார்கள். இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த மக்கள், சுற்றுப்புறம் எங்கும் ஆளை அனுப்பி, எல்லா நோயாளிகளையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவரது மேல் உடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர். தொட்டவர் அனைவரும் நலம் பெற்றனர்.

இந்நற்செய்தியைப் படிப்போர் உணர்ந்து கொள்ள வேண்டியது, விசுவாசமும், நம்பிக்கையும் ஆகும். இயேசு பெருமான், இவ்வுலகில் மக்களோடு மக்களாய் வாழ்ந்தபோது, விசுவாசத்தையும், நம்பிக்கையையும் மிகவும் ஆழமாகப் போதித்தார்.

அப்பொழுது நடந்த ஒரு நிகழ்வைக் காட்டுகிறார். ‘கடலின் மீது அவர் நடந்து வருவதைக் கண்டதும் ‘பேய்’ என அலறினர்.

ஆம்! கடலின் மீது ஒருவர் நடப்பது என்பது இயலாத செயல்தான். என்றாலும் இயேசு பெருமான், அதற்கு அப்பாற்பட்டவர். காரணம் அவர் இறை மகன். அவரால் எதுவும் முடியும். இதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

‘நான் தான்’ என்று கூறியதும், தெளிவு பெற்றார்கள். தெளிவு பெற்றதோடு மட்டும் அல்லாமல், தானும் நடந்து வர வேண்டும் என்று, ‘பேதுரு’ என்ற சீடர் விரும்புகிறார். அவரைப் பார்த்து இயேசு பெருமான் மிக எளிமையாக ‘வா’ என்றார்.

படகில் இருந்து இறங்கிய பேதுரு என்ற சீடர், கடலின் மீது நடக்கத் தொடங்கினார். அவருடைய விசுவாசம் உண்மையானதா? என்பதை அறிய, பலத்த காற்று வீசிய அவ்வேளையில், ‘ஆண்டவரே! என்னைக் காப்பாற்றும்’ என்று உரக்கக் கத்தினார். கடலில் நடக்க வைத்த இயேசு பெருமான், காற்றானது சுழன்று அடிக்கும்பொழுது காப்பாற்ற மாட்டாரா?

‘காப்பாற்றும்’ என்று உரக்கக் கத்தக் காரணம் என்ன? அதுதான் விசுவாசக் குறைவு.

‘நம்பிக்கை குறைந்தவனே! என்ற ஒரு வார்த்தையை அங்கு கூறுகிறார். இந்நற்செய்தியைப் படிப்பவர்கள், விசுவாசம் எவ்வளவு ஆழமானது என்பதை உணர வேண்டும்.

முதலில் நம்பிக்கையோடு செயலில் இறங்கிய பேதுரு என்ற சீடர், தொடர்ந்து அந்த நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இயேசு பெருமானின் செயலை கண் முன்னே கண்டும், தானே அதை உணர்ந்து செயல்பட்டும், அச்சமும், நம்பிக்கையின்மையும் அவருக்கு ஏற்பட்டதை இந்த நற்செய்தி வாயிலாக அறிகிறோம் அல்லவா?

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை பல நிலைகளில் இவ்வுலகில் நாம் உணர்கிறோம். என்றாலும் மனிதன் தன் பலகீனத்தால், நம்பிக்கையை இழந்து விடுகிறான்.

கிறிஸ்து பெருமானைப் பின்பற்றக் கூடியவர்கள், நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவர்களாக வாழ்வதைத்தான், இயேசு பெருமான் உணர்த்துகிறார்.

‘கடுகளவு’ விசுவாசம் ஒருவருக்கு இருக்குமேயானால், இந்த மலையை ‘இடம் பெயர்ந்து செல்’ என்றால் சென்று விடும் என்று ஓரிடத்தில் இயேசு பெருமான் கூறியதையும் எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காற்றும், கடலும் இவர் சொல்லுக்கு அடங்குகிறதே என்பதைப் பார்த்த பிறகுதான், ‘உண்மையான இறை மகன் நீர் தான்’ என்கின்றனர். இப்படிப்பட்ட விசுவாசத்தை விட, வேறோர் இடத்தில் இப்படிக் கூறுகிறார்: ‘கண்டு விசுவாசிப்பவர்களை விட காணாமல் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள்’. இது உண்மைதான்.

இயேசு பெருமான் உயிர்த்தெழுந்ததை மற்ற சீடர் அறிந்திருந்தும், புனித தோமையார் நேரடியாகக் காணவில்லை. ஆகவே அவர் ‘நான் என் கண்களால் கண்டால்தான், இயேசு பெருமான் உயிர்த்தார் என்பதை நம்புவேன்’ என்றார்.

அப்போது, இயேசு பெருமான் அவர் கண் முன் தோன்றி, ‘தோமையாரே! என் காயங் களில் உன் விரலை இடும்’ என்று சொன்னதும், ‘என் ஆண்டவரே! என் தேவனே! என்று கிழே விழுந்து வணங்கியதாக நற்செய்தியில் ஒரு வரி வருகிறது.

அப்பொழுது தான், ‘கண்டு விசுவாசம் கொள்பவனை விட, காணாமல் விசுவாசிக்கக் கூடியவன் பாக்கியவான்’ என்ற வார்த்தையைக் கூறுகிறார்.

இந்நற்செய்தியின் தெளிவை உணர்ந்து கொள்வதற்கு, வேறோர் செய்தியையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இயேசு பெருமானின் புதுமைகளைக் கண்ட மக்கள், மேலும் ஊக்கம் பெறுகிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.

ஆகவே சுற்றுப்புறம் எங்கும் ஆளை அனுப்புகின்றனர். எல்லா நோயாளிகளையும் அவரிடம் கொண்டு வருகின்றனர். அவரை முழுவதும் தொட முடியாவிட்டாலும், அவரது ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு, அவரிடம் கேட்டுக் கொள்கின்றனர். ஆடையின் ஓரத்தைத் தொட்ட அனைவரும் நலம் பெறுகின்றனர் என்பதையும் காண்கிறோம்.

இயேசு பெருமானின் உன்னதத்தை உணர்ந்து, செயலூக்கம் பெறுவோம்.

(தொடரும்)

Next Story