முக்தியை அருளும் காவிரி புஷ்கரம்-12-9-2017 புஷ்கர நீராடல் தொடக்கம்


முக்தியை அருளும் காவிரி புஷ்கரம்-12-9-2017 புஷ்கர நீராடல் தொடக்கம்
x
தினத்தந்தி 5 Sep 2017 7:04 AM GMT (Updated: 5 Sep 2017 7:04 AM GMT)

தல யாத்திரை, தீர்த்த யாத்திரை, பாத யாத்திரை ஆகிய மூன்றும், முன்னோர்கள் காலந்தொட்டே நடைமுறையில் இருந்து வரும் வழிபாட்டு முறை.

ல யாத்திரை, தீர்த்த யாத்திரை, பாத யாத்திரை ஆகிய மூன்றும், முன்னோர்கள் காலந்தொட்டே நடைமுறையில் இருந்து வரும் வழிபாட்டு முறை. பிரிசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்க அந்த ஆலயம் இருக்கும் ஊர்களுக்குச் சென்று வழிபடுவது தல யாத்திரை. புண்ணியம் தரும் நதிகள், ஆறுகள், ஆலய குளங்கள் மற்றும் கிணறுகளுக்குச் சென்று நீராடுவது தீர்த்த யாத்திரை. தொலை தூரங்களில் உள்ள ஆலயங்களுக்கு நடந்தே சென்று வழிபடுவது பாத யாத்திரை. இந்த மூன்று விதமான யாத்திரைகளுக்கும் அடிநாதமாக இருப்பது இறைவழிபாடாகும்.

தீர்த்த யாத்திரை வழிபாட்டில் குறிப்பிட்டதொரு நாளில், குறிப்பிட்ட ஆறு அல்லது தீர்த்தங்களில் நீராடுவது புனிதநீராடலாக கருதப்படுகின்றது. இதற்கு உதாரணமாக ஓராண்டுக்கு ஒரு தடவை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதமும் கார்த்திகை முதல்நாளும் மேற்கொள்ளப்படும் ‘கடைமுழுக்கு’, ‘முடவன்முழுக்கு’, திருச்சி அம்மாமண்டபம் படித் துறையில் மேற்கொள்ளப்படும் ஆடிப்பெருக்கு நீராடல், ராமேஸ்வரம் கடலில் ஆடி மற்றும் தை அமாவாசையின் போது மேற்கொள்ளப்படும் முன்னோர் நினைவு நீராடல் ஆகியனவற்றை குறிப்பிடலாம்.

கிரக சுழற்சியின் அடிப்படையில் நடை பெறும் புனித நீராடல்கள் பல உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை கங்கை ஆற்றில் மேற்கொள்ளப்படும் கும்பமேளா, கும்பகோணத்தில் மேற்கொள்ளப் படும் மகாமகம், புண்ணிய நதிகளாக கருதப்படும் பன்னிரண்டு நதிகளில் மேற்கொள்ளப்படும் புஷ்கரம், திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் கடற்கரையில் மேற்கொள்ளப்படும் மஹோதயம் போன்ற நீராடல்கள் அவை.

பொதுவாக குருபகவான் ஒரு ராசியி லிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது, இந்த விழாக்கள் நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் வரும் ஆவணி 27-ந் தேதி முதல் புரட்டாசி 8-ந் தேதி வரை, மயிலாடுதுறை காவிரி ஆற்றில் மகாபுஷ்கர புண்ணிய நீராடல்விழா நடைபெற உள்ளது.

புஷ்கரம் என்பது நீரை குறிப்பதாகும். மூன்றரைக் கோடி தீர்த்தங்களின் அதிபதியாக விளங்கும், படைப்பு கடவுளான பிரம்மா தனது கையில் ஒரு கமண்டலத்தை வைத்திருப்பார். அந்த கமண்டலத்தின் பெயர் புஷ்கரணி. அதில் உள்ள நீரே ‘புஷ்கரம்’ என்பதாகும். இதைக் கொண்டு உயிரினங்கள் வாழத் தேவையான நீரை படைப்பதுடன், பாவங்கள் அனைத்தையும் விலக்கும் அரும் மருந்தாகவும் பயன்படுத்துவார்.

பிருகண்டு முனிவர் மிகப்பெரிய சிவபக்தர். எவருக்கும் தன்னால் எந்த தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, நெறியானதொரு வாழ்வை வாழ்ந்து வந்தார். அப் படிப்பட்டவர் தனக்கு முக்தியை அருளுமாறு சிவனை வணங்கி தவம் மேற்கொண்டார். அவர் செய்த தவத்தை பார்த்த சிவ பெருமான் அவருக்கு காட்சியளித்தார். ‘உமக்கு முக்தியை அருள எம்மால் முடியாது. பூர்வஜென்மத்தில் நீ செய்த பாவத்தால் உனக்கு முக்தி கிடைப்பது தள்ளிப்போகிறது. குருபகவான் அருள் பெற்றால் மட்டுமே உனக்கு முக்தி கிடைக்கும்’ என்றார்.

உடனே பிருகண்டு முனிவர், குருபகவானை நாடி வணங்கி தன் குறை தீர்க்குமாறு வேண்டினார்.

குருபகவானோ, ‘எனது அருள் உனக்கு என்றென்றும் உண்டு. ஆனால் நீ முக்தியடைய ஒரேவழி பிரம்மனின் கையிலுள்ள புஷ்கரத்தால் மட்டுமே முடியும். ஆகவே நாமிருவரும் சென்று பிரம்மனிடம் புஷ்கரத்தைக் கேட்டுப்பெறுவோம்’ என்று கூறி பிருகண்டு முனிவரை அழைத்துக் கொண்டு பிரம்மனிடம் சென்றார்.

இருவரும் பிரம்மனிடம் விஷயத்தை எடுத்துக் கூறினர். அனைத்தையும் கேட்ட பிரம்மன் முனிவருக்கு தன் கமண்டலத்திலுள்ள புஷ்கரத்தை தர சம்மதித்தார். அப்போது பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரம் பேசத் தொடங்கியது. ‘பிரம்ம தேவனே! நான் உயிருள்ள பொருள். நான் உங்களை விட்டுச் சென்றால் மூன்றரை கோடி தீர்த்தங்களும், முப்பத்துமுக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணா யிரம் ரிஷிகளும், அஷ்டலட்சுமியும் உங்களை விட்டு அகன்றுவிடுவார்கள். அதன்பிறகு உங்களை யாரும் வணங்கமாட்டார்கள்’ என்றது. இதனால் பதறிப்போன பிரம்மன், புஷ்கரத்தை தரமறுத்துவிட்டார்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என நினைத்த பிருகண்டு முனிவர், குருபகவானிடம் புலம்பினார். குருபகவான் பிரம்மனின் ஒப்புதலுடன் பிருகண்டு முனிவருக்காக புஷ்கரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

‘நீ பிரம்மனை விட்டு ஒட்டு மொத்தமாக வரவேண்டாம். நான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாறி சஞ்சரிக்கும் காலத்தில், நான் செல்லும் ராசியில் பன்னிரண்டு தினங்கள் மட்டும் நீ இருந்தால், முனிவரும் முனிவரைப் போன்று பூர்வஜென்ம பாவத்தில் சிக்கி தவிப்போரும் அந்த ராசிக்குரிய நதிகளில் நீராடி தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்வர்’ என்றார் குரு.

இதற்கு புஷ்கரம் சம்மதித்தது. அதன்படி குரு பகவான் மேஷத்தில் சஞ்சரிக்கும் போது கங்கையிலும், ரிஷபத்தில் சஞ்சரிக்கும் போது நர்மதையிலும், மிதுனத்தில் சஞ்சரிக்கும் போது சரஸ்வதியிலும், கடகத்தில் சஞ்சரிக்கும் போது யமுனையிலும், சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது கோதாவரியிலும், கன்னியில் சஞ்சரிக்கும் போது கிருஷ்ணாவிலும், துலாத்தில் சஞ்சரிக்கும் போது காவிரியிலும், விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் போது தாமிரபரணி யிலும், தனுசுவில் சஞ்சரிக்கும் போது சிந்துவிலும், மகரத்தில் சஞ்சரிக்கும் போது துங்கபத்ராவிலும், கும்பத்தில் சஞ்சரிக்கும் போது பிரம்மபுத்திராவிலும், மீனத்தில் சஞ்சரிக்கும் போது கோதாவரியின் உபநதியான பரணீதாவிலும் புஷ்கரமானவர் இருந்து அருள் பாலிக்கிறார் என்கிறது புராண வரலாறு. அதனடிப்படையில் ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின் போதும் குருபகவான் சஞ்சரிக்கும் ராசிக்குரிய நதியில் புஷ்கரபுண்ணிய நீராடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வரிசையின் படி பார்க்கும்போது, இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு செல்கிறார். அதன்படி புஷ்கரம் காவிரி நதியில் வாசம் செய்கிறார். அவர் வாசம் செய்யும் 12 நாட்கள் வருகிற ஆவணி மாதம் 27-ந் தேதி (12.9.2017) செவ்வாய்க்கிழமை முதல் புரட்டாசி மாதம் 8-ந் தேதி (24.9.2017) வரை ‘புஷ்கரவிழா’ கொண்டாடப்படுகிறது. இந்த பன்னிரண்டு நாட்களிலும் அந்நாளின் தேவதைகளான மித்ரன், அர்யமா, த்வஷ்டா, பக(ற) சூரியன், விவஸ்வாள், அருண, பகவான், அம்சுமான், இந்திரன், பர்ஜன்யன், விஷ்ணு, ப்ரம்ஹா ஆகியோருக்கு அவரவருக்குரிய தானங்கள் வழங்கி வழிபடுவது மிகவும் விசேஷம் என புராணங்கள் தெரிவிக்கின்றன. காவிரியில் வரும் இந்த புஷ்கரமானது 144 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய சிறப்புக்குரிய புஷ்கரம் என்பதால் இது மஹாபுஷ்கர விழாவாக கொண்டாடப்படுகின்றது.

-நெய்வாசல் நெடுஞ்செழியன்

Next Story