ஊட்டியில் ஒரு பழனி முருகன் கோவில்


ஊட்டியில் ஒரு பழனி முருகன் கோவில்
x
தினத்தந்தி 5 Sep 2017 7:56 AM GMT (Updated: 5 Sep 2017 7:56 AM GMT)

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ளது எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில். மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

லைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ளது எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில். மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது. குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் சிறந்த மலைவாழிடம் ஊட்டி (உதக மண்டலம்) என்பது அனைவரும் அறிந்தது. ஒத்தக்கல் மந்து என்பதே உதகமண்டலம் என்று மருவியது. மந்து என்றால் மலை என்று பொருள்படும்.

சென்ற நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆண்டபோது நீலகிரி மலையை மேம்படுத்தி, போக்குவரத்து வழிகளை ஏற்படுத்தினர். தென்னகத்தின் கோடைவாசஸ்தலமாகவும் மாற்றினர். அப்போது சமவெளி பகுதி மக்கள் வாணிபத்துக்காகவும், தேயிலை தோட்டங்கள் உள்பட பல்வேறு பணிகளுக்காகவும் இங்கு குடியேறினார்கள். அந்த நேரத்தில் ஊட்டியில் வாழ்ந்த முருக பக்தர்கள் 2 பேர் ஆண்டுதோறும் பழனி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்து வருவது வழக்கம். தளர்ச்சி மிகுதியாலோ, வேறு சில காரணங்களினாலோ ஒரு முறை பழனி போக முடியவில்லை. இதனால் முருகப்பெருமான் கனவில் தோன்றி, ஊட்டி நகரில் உள்ள எல்க்ஹில் குன்றிலேயே உறைவதாகவும், இங்கேயே வழிபடுமாறும் அருள் பாலித்தார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஊட்டி எல்க்ஹில் மலையில் பாலதண்டாயுதபாணி கோவிலை நிறுவியதாக வரலாறு கூறுகிறது.

தாமரை மலர்

ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து பார்த்தால் எதிரே தெரியும் மலைப்பகுதி தான் எல்க்ஹில் என்று அழைக்கப்படுகிறது. ‘எல்க்’ என்ற வகை மான்கள் இந்த குன்றம் முழுவதும் நிறைந்து இருந்ததாம்... அதனால் எல்க்மலை என்றும், மான் குன்றம் என்றும் அழைக்கப்பட்டு, தற்போது எல்க்ஹில் என்று மாறி விட்டது.

மிகவும் அமைதியான அழகிய சூழலில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு செல்லும் போது முதலில் பாத விநாயகர் காட்சி தருகிறார். பக்தர் களின் வசதிக்காக தார்சாலை போடப்பட்டுள்ளது. விநாயகரை தரிசித்து விட்டு சற்று மேல்நோக்கி வலதுபுறம் திரும்பி சில அடி தூரம் நடந்து சென்றால் ஜலகண்டேஸ்வரி அம்மன் சன்னிதி இருக்கிறது. அங்கு அம்மன் தாமரை மலரில் 4 கரங்களுடன் அருள் பாலித்து வருகிறார். அருகில் விநாயகர் உள்ளார்.

அதற்கு முன்புறம் கொற்றவையான துர்க்கை அம்மன் சன்னிதியும், அங்கு மகிடனை வென்ற அம்பிகையின் தோற்றம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதிக்கு கீழே ஜலகண்டேஸ்வரர் லிங்கவடிவமாக காட்சி அளிக்கிறார்.

முருகப்பெருமான்


அங்கிருந்து சற்று மேல் நோக்கி நடந்து சென்றால் தனிக்கோவில் கொண்டு பாலதண்டாயுத பாணி வீற்றிருக்கிறார். பழனி முருகப்பெருமான் போலவே காட்சி அளிக்கிறார். தலையில் அக்க மாலையும், ஒரு கரத்தில் தண்டமும், ஒரு கரம் இடுப்பில் வைத்த கோலத்தில் மிக அழகாக காட்சி அளிக்கிறார்.

கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருவார். மேலும் மாதந்தோறும் கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் பாலதண்டாயுதபாணியின் வடிவமைப்பு போல, எல்க்ஹில் முருகன் கோவிலில் முருகப்பெருமானின் வடிவமைப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்

கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங் களில் இருந்து ஊட்டிக்கு பஸ் வசதி உண்டு. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

-சேர்மசாஸ்தா, கோவை.

12 அடி உயர ஞானவேல்


டந்த 1986-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடிகர் நம்பியார் கோவிலில் இருந்து 500 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் 60 அடி உயரம் கொண்ட ஞானவேலை நிறுவினார். காலப்போக்கில் மலை உச்சியில் பலத்த காற்று வீசியதால் ஞானவேல் சாய்ந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் 60 அடி உயர ஞானவேலை அகற்றி விட்டு, 12 அடி உயரமுள்ள ஞானவேல் வைத்தது. மேலும் பலத்த காற்றுக்கு கீழே விழாமல் இருக்க, கான்கிரீட் போடப்பட்டு உள்ளது. இந்த ஞானவேல் கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.

மலை உச்சியில் கார்த்திகை தீப திருநாளன்று, மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் விளக்கு ஏற்றுவது போன்று திருவிளக்கு ஏற்றப்படும். பல ஆண்டுகளுக்கு முன்பு எல்க்ஹில் முருகன் கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பின்னர்தான், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். அதற்காக மலை உச்சியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு, அதன் மேல் தீபம் ஏற்றப்படுகிறது. காலப்போக்கில் அப்பகுதியை சுற்றிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்ததால், கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் தீபம் ஏற்றினால் ஊட்டி நகரத்தில் இருந்து பார்த்தால் தெரிவதில்லை. இருந்தாலும், கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் எத்தனை மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றுவார்கள்? என்று கேட்டு சென்று, அதன் படி தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வருகின்றனர்.

40 அடி உயர முருகன் சிலை

ல்க்ஹில் முருகன் கோவிலில் முருகப் பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்களும், 108 திருநாமங்களை நினைவுகூரும் வகையில் 108 படிகளும் உள்ளன. மலேசியா நாட்டில் பத்துமலை என்ற இடத்தில் முருகன் கோவில் ஒன்று உள்ளது. அங்கு 140 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. அதற்கு அடுத்த படியாக தமிழகத்திலேயே முதல் முறையாக ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் 40 அடி உயரத்தில் முருகன் கம்பீரமாக மலை நடுவே எழுந்தருளி உள்ளார். இது தமிழகத்திலேயே மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்க்ஹில் முருகன் கோவிலில் கடந்த 1971-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. 40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 40 அடி உயரத்தில் முருகன் சிலை வைக்கப்பட்டது. அதற்காக 5 அடி உயரத்தில் மேடை அமைத்து, அதன் மேல் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story