சிற்பங்கள் நிறைந்த சிகாநாதசாமி ஆலயம்


சிற்பங்கள் நிறைந்த சிகாநாதசாமி ஆலயம்
x
தினத்தந்தி 5 Sep 2017 8:09 AM GMT (Updated: 5 Sep 2017 8:09 AM GMT)

புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடுமியான்மலை. இங்கு சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடுமியான்மலை. இங்கு சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது. ‘சிகா’ என்பதற்கு ‘குடுமி’ என்ற பொருள் உண்டு. இங்குள்ள இறைவன் குடுமியுடன் காணப்படுவதால் சிகாநாதசாமி என்றும், இந்த ஊர் குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு, இவ்வூர் ‘குடுமியான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. (சிகா - குடுமி. அதாவது குடுமியுள்ள இறைவன்).

இங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோவில் தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும்.

முன்னொரு காலத்தில் இக்கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது காதலிக்கு கொடுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோவிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது காதலியின் தலையிலிருந்து பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க, அதில் தலைமுடி இருந்ததைக் கண்ட மன்னர், அதற்கான காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோசிதமாக கோவிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு (லிங்கம்) குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார்.

வியப்பு மேலிட்ட மன்னர் (இறைவனின்) குடுமியைக் காட்டும்படி சொன்னார். தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். (இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவனுக்கு லிங்கத்திற்கு குடுமி இருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் உச்சியில் குடுமி முடிச்சு போன்ற பகுதி இருப்பது இன்றும் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது).

அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந் திருந்தன. குன்றின்மீது ஏறிச் செல்லும்போது ஒரு இயற் கைக் குகையினைக் காண் கிறோம். இது கற்கால மனிதர் களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குமரன் கோவில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோவில் உள்ளது. புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலை யிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சிகாநாதசாமியின் கருவறை கி.பி.12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப் படுகிறது. அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் ஆலயத்தின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோவில் என்னும் குகைக்கோவில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும்.

குகைக்கோவிலின் மேலே உள்ள பாறையின் உச்சி பகுதியின் கிழக்குநோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிகாநாத அகிலாண்டேஸ்வரி கோவில், சமஸ்தான காலத்தில் சீரும், சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கி இருக்கும் கோவிலில் கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றதும் ஆயிரங்கால் மண்டபத்தை காணலாம். இம்மண்டபத்தின் முகப்பு தூண்களில் அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன. இதன் இருபுறமும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றில் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்க பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும், இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற இரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகற, அருகிலிருந்து தூணை எட்டி உதைத்தான் இரண்யகசிபு.

தூண் இரண்டாகப் பிளந்தது. இதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. இரண்யனைப் பற்றி பிடித்து தனது கால்களுக்கு குறுக்கே கிடத்தி, அவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. அவனது ஆணவம் வீழ்ந்தது. இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையை சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதார காட்சியினை விளக்கும் நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காணலாம். காதலுக்கு கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல்விழியினை பாய்ச்சிடும் ரதி என இங்குள்ள ரதிமன்மதன் சிலைகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன் வயப்படுத்திக்கொண்டு காட்சியளிக்கும் மோகினி உருவில் விஷ்ணு, வினை தீர்க்கும் விநாயகர் பக்தர்களை காக்க பன்னிரு கைகளும், ஆறுமுகங்களும் கொண்டு சண்முகன், அண்டத்தையும் ஆட்டிபடைக்கும் பலம் பெற்று பத்து தலையுடன் கூடிய ராவணன், கருடன் மீதமர்ந்து பயணம் செய்யும் விஷ்ணு பெருமான், தீயசக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரன் இன்னும் பல சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். குதிரைப் படை வீரர்களும், கால்படை வீரர்களும் உபயோகித்த ஆயுதங் களையும், குதிரைப்படை தாக்குதல்களை, காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ள சிற்பங்களில் காணலாம்.

இந்த மண்டபத்திலிருந்து கோவிலினுள் செல்லும் நுழைவு வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். கோவிலின் கருவறையும் விமானமும்-முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டது. குகைக்கோவிலில் காணப்படும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம், திருமேற்றளி என இரண்டு கோவில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோவிலையே குறிப்பதாகும். ஆலய விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்பிரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் வியாகரபாதர் (மனித உருவம் புலியின் கால்கள்), பதஞ்சலி (மனித உடலும் கால்கள் பாம்பு போன்றும்) சிற்பங்கள் காணப்படுகின்றன.

அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி, பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் அறுபட்டை வடிவாக அமைந்த கருங்கல் பலகை ஒன்று உள்ளது. அக்கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடு கின்றன. உமையாள்நாச்சி என்னும் தேவதாசி, குகைக்கோவிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலைக் கட்டுவித்து அங்கு சவுந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள்.

- ஜெ.சித்தார்த்தா, புதுக்கோட்டை.

Next Story