நவக்கிரக ஹோமங்கள்


நவக்கிரக ஹோமங்கள்
x
தினத்தந்தி 20 Sep 2017 7:38 AM GMT (Updated: 20 Sep 2017 7:38 AM GMT)

நவக்கிரகங்களுக்கு தனித் தனியாக ஹோமங்கள் செய்யப்படுவதும் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சூரியன்

ஜோதிட சாஸ்திர ரீதியாக சூரியன் என்பவர் பிதுர்காரகன் அதாவது ஒருவருக்கு அமைந்த தந்தை பற்றி குறிப்பிடக் கூடியவர். ஒருவரது சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கவுரவம், அந்தஸ்து, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றையும், கண்கள், பார்வை, உடல் உஷ்ணம், அரசாங்க தொடர்பு ஆகியவை பற்றியும் சூரியன் குறிப்பிடுவார். ஒருவரது ஜாதக ரீதியாக சூரியனது நிலை கோச்சாரம் அல்லது திசாபுத்திகள் பாதகமாக இருந்தால் சூரிய பிரீதி ஹோமம் செய்து கொள்ளவேண்டும்.

சந்திரன்

சந்திரன் என்ற கிரகமானது ஜோதிட ரீதியாக ஒருவரது மனதின் எண்ண அலைகளை ஆட்சி செய்யும் சக்தி படைத்ததாகும். ஒருவரது சரியான உடலமைப்பை கட்டிக்காப்பதோடு, தாயாரது நிலையையும் சந்திரன் குறிப்பிடுவார். ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தின் ஆரம்பமாக உள்ள லக்னம் வலுவாக இல்லாத பட்சத்தில் சந்திரனை லக்னமாக வைத்து பலன் சொல்லப்படுவது மரபு. ஒருவரது ஜாதகத்தில் வலுவற்றும், பாதிப்புகளுடனும் அமைந்த சந்திரனுக்குரிய திசை அல்லது புத்தி காலங்களில் சந்திர பிரீதி ஹோமத்தை செய்து கொள்ளவேண்டும்.

செவ்வாய்

ஒருவருக்கு இருக்கும் உடல் உறுதி, மனஉறுதி, ரத்தம், கோபம் ஆகியவற்றை குறிப்பிடுவது செவ்வாய் என்ற கிரகமாகும். ஒருவருக்கு அமையும் சகோதர சகோதரிகள், நிலபுலன்கள், கடன்கள் மற்றும் போர்க்குணம் ஆகியவற்றையும் குறிப்பிடுபவர் இவரே. ஜாதக ரீதியாக செவ்வாய் திசை அல்லது புத்தி பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தால் செவ்வாய் கிரக பிரீதி ஹோமம் செய்து கொள்வது நல்லது.

புதன்

ஒருவரது கல்வி நிலை, தாய்மாமா, அத்தை, மைத்துனர்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள புதன் என்ற கிரகம் ஜாதக ரீதியாக எவ்வாறு உள்ளது என்று பார்ப்பது வழக்கம். மேலும், கணிதம், நண்பர்கள், புத்தி சாதுரியம், கவிதை, நாடகம், எழுத்துக்கலை, சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றையும் புதன் என்ற கிரகமே சுட்டிக்காட்டும். ஜோதிட ரீதியாக ஒருவருக்கு புதன் திசை அல்லது புத்தி சாதகமாக இல்லாவிட்டால் புதன் பிரீதி ஹோமத்தை செய்து கொள்வது முக்கியம்.

குரு

ஜோதிட ரீதியாக தனம், குழந்தைகள், நல்ல அறிவு, மந்திரசாஸ்திரம், யாகங்கள், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, சமுதாயத்தில் மதிப்பு, சொல்வாக்கு ஆகியவற்றுக்கு குரு என்ற கிரகமே பொறுப்பாவார். தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆன குரு ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு அவரது திசாபுத்திகள் நடப்பில் இருந்தாலும், கோச்சார ரீதியாக நல்ல இடத்தில் இல்லாதிருப்பினும் குரு பிரீதி ஹோமத்தை செய்து கொள்வது அவசியமானது.

சுக்ரன்

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு அமையும் கணவன் அல்லது மனைவி பற்றிய அனைத்து செய்திகளையும் சுக்ரன் என்ற கிரகம் குறிப்பிடும். சகல கலைகளுக்கும் அதிபதியாகவும், காதல், சுக போகம், வாகனங்கள், ஆபரணம், இளமை, நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, பல மாடி வீடு ஆகிய அனைத்தையும் சுக்ரனே குறிப்பிடுவார். பலமற்ற சுக்ர திசாபுத்தி காலங்களில் ஒருவர் சுக்ர பிரீதி ஹோமத்தை செய்து கொள்ளவேண்டும்.

சனி

ஜாதக ரீதியாக ஒருவரது நீண்ட ஆயுள், மரணம் ஆகியவற்றை கணக்கிடுவதற்கு சனியின் பிறப்பு கால நிலையை கணக்கிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும் கடும் துன்பத்திற்கு காரணமாக இருந்தாலும், பெரும் செல்வ வளத்தையும் அளிப்பவர் சனிதான். ஜாதக ரீதியாக சனியின் திசாபுத்தி அல்லது பாதிப்பான கோச்சாரம் ஆகியவற்றிற்கு சனி பிரீதி ஹோமத்தை செய்து கொள்வது நல்லது.

ராகு

சர்ப்ப கிரகமாக இருக்கும் ராகுவுக்கு சொந்த வீடு இல்லாததால் தான் இருக்கும் வீட்டிற்குரிய பலனை அவரது இயல்பான அதீதமான முறையில் தருவார். ஜாதகத்தில் ராகு சரியான விதத்தில் இருந்தால் கம்ப்யூட்டர், ஸ்பெகுலேஷன், சூதாட்டம் ஆகியவை மூலமாக தன வரவு உண்டாகும். ஜாதக ரீதியாக திசாபுத்தி அல்லது கோச்சாரத்தில் பாதிப்பை தரும்படி ராகு அமைந்திருந்தால் அதற்குரிய பிரீதி ஹோமத்தை செய்து கொள்ளவேண்டும்.

கேது

உலகம் போற்றும் ஆன்மிக ஞானத்தை தரக்கூடிய கேது என்ற கிரகமானது தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம், பைத்தியம் பிடித்தல், சிறைவாசம், புண்ணிய ஸ்தல தரிசனம், மகான்கள் தரி சனம், விநாயகர் வழிபாடு ஆகியவற்றை தருவார். ஜாதக ரீதியாகவோ கோச்சார ரீதியாகவோ கேது பாதிப்பை தரும்படி இருப்பின், அதற்கு உரிய பிரீதி ஹோமத்தை செய்து கொள்ளவேண்டும். 

Next Story