பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்


பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
x
தினத்தந்தி 21 Sep 2017 11:04 PM GMT (Updated: 2017-09-22T04:34:48+05:30)

பழனி முருகன் கோவிலிலும், பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை நடத்தப்பட்டது.

பழனி,

அதைத்தொடர்ந்து காலசந்தி பூஜை நடந்தது. பூஜையின் போது சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமார சுவாமி, வள்ளி- தெய்வானை, வாகனங்கள் மற்றும் கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்புக்கட்டப்பட்டு விழா தொடங்கியது.

இதையடுத்து மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகவள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

விழாவின் கடைசி நாளான 30-ந் தேதி மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், 3.05 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடும் நடைபெறும். அத்துடன் சன்னதி திருக்காப்பிடுதலும், பராசக்திவேல் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவில் வந்து, பின்னர் தங்க குதிரை வாகனத்தில் முத்துக் குமார சுவாமி பராசக்திவேலுடன் சென்று கோதைமங்கலம், கோதை ஈஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் பராசக்திவேல் மலைக்கோவில் வந்தடைந்து இரவு 10 மணிக்கு மேல் சம்ரோட்சண பூஜைக்கு பின் ராக்கால பூஜை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story