புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 23 Sep 2017 10:30 PM GMT (Updated: 23 Sep 2017 10:30 PM GMT)

புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

பெருமாளுக்கு உகந்தநாள் புரட்டாசிமாத சனிக்கிழமை ஆகும். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலம் கோட்டை அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன் பின்னர் மூலவர் பெருமாள் மற்றும் சுந்தரவல்லி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. கண்ணாடி மாளிகையில் ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர் ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதுபோல ஆஞ்சநேயர், கருடாழ்வார் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவில் பெருமாளின் வீதியுலா நடந்தது.

இதேபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சேலம் பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாளுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு துளசி மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனையும், இரவு பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதுபோல செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி கோவில், குரங்குச்சாவடி கூசமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில், சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், நாமமலை பெருமாள் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

எடப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. கொங்கு வெள்ளாளகவுண்டர்கள் சமூகம் சார்பில் வெள்ளாண்டிவலசையில் இருந்து ஸ்ரீதேவிபூதேவியுடனான திம்மராயபெருமாள் சாமி உற்சவர் சிலை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வெள்ளகரட்டு திம்மராய பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு திருக்கோடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. ஜலகண்டாபுரம் ரோட்டில் உள்ள மூக்கரைநரசிம்மப்பெருமாள் கோவில், பழைய எடப்பாடி சென்றாயபெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதுபோல ரெட்டிப்பட்டி கிருஷ்ணர் கோவில், வெள்ளூற்று பெருமாள் கோவிலிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

Next Story