காற்றின் மொழி முதல் காகமாய் பறந்தது வரை


காற்றின் மொழி முதல் காகமாய் பறந்தது வரை
x
தினத்தந்தி 3 Oct 2017 7:53 AM GMT (Updated: 3 Oct 2017 7:53 AM GMT)

அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டில் 1960-களில், ஷாமனிஸத்திற்கு அடையாளமாகப் பேசப்பட்ட பெயர் கார்லோஸ் காஸ்டநேடா.

பெரு நாட்டில் பிறந்து வளர்ந்த கார்லோஸ் காஸ்டநேடா, பிற்காலத்தில் அமெரிக்காவில் வந்து குடியேறியவர். பிறகு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆராய்ச்சி மாணவனாகப் படிக்க வந்த இவர், ஒரு நாள் அரிசோனா பேருந்து நிறுத்தம் ஒன்றில், ஒரு நண்பருடன் நின்று கொண்டிருந்த போது ஒரு வயதான ஷாமனைச் சந்தித்தார். கார்லோஸ் காஸ்டநேடாவின் நண்பர் அந்த முதியவரை தாவரங்களைப் பற்றி மிக நுணுக்கமாக அறிந்தவர் என்று மட்டுமே சொல்லி அறிமுகப்படுத்தினார். டான் ஜுவான் என்ற அந்த முதியவரிடம் கார்லோஸ் காஸ்டநேடா பேசிய போது, அவர் அதிகம் பேசவில்லை. தன் பேருந்து வந்தவுடன் போய் விட்டார். ஆனால் அந்த முதியவரிடம் ஏதோ ஒரு விசேஷ சக்தி இருப்பதாக கார்லோ காஸ்டநேடா அழுத்தமாக உணர்ந்தார்.

அதுவே அடுத்த முறை டான் ஜுவானை சந்தித்த போது, மறுபடி போய் பேசும்படி கார்லோ காஸ்டநேடாவைத் தூண்டியது. டான் ஜுவானிடம் கார்லோஸ் காஸ்டநேடா தனக்கு தாவரங்கள் பற்றி நுணுக்கமாகச் சொல்லித்தர வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார். டான் ஜுவான் தலையசைத்து விட்டு மவுனமாகவே அமர்ந்திருந்தார். கார்லோஸ் காஸ்டநேடா சிறிது நேரம் பொறுத்துப் பார்த்து விட்டு மறுபடி முன்பு சொன்னதையேச் சொன்னார்.

டான் ஜுவான் சொன்னார். ‘நான் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீ தான் கற்றுக் கொள்ள மாட்டேன்கிறாய்’.

கார்லோஸ் காஸ்டநேடாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘சும்மாவே அமர்ந்திருந்து விட்டு இந்தக் கிழவர் இப்படிச் சொல்கிறாரே’ என்று திகைப்புடன் பார்த்தார்.

டான் ஜுவான் சொன்னார். ‘காற்றுடன் சேர்ந்து தாவரமும் பேசிக்கொண்டிருக் கிறது. கவனித்துக் கேள்’. வீசிய காற்றில் தாவரங்களின் கிளைகள் அசைந்த சத்தம் கார்லோ காஸ்டநேடாவுக்குச் சாதாரணமாகவேத் தோன்றியது. ஆனால் அதைத் தாவரமும், காற்றும் சொல்லும் ரகசியங்களாக மீண்டும் டான் ஜுவான் சொன்னது குழப்பியது.

அதை அவர் தெரிவித்த போது டான் ஜுவான் ‘வளவளவென்று பேசிக்கொண்டிருக்காதே. கவனி. எல்லாவற்றையும் கவனி. நிறைய ரகசியங்கள் தெரிய வரும்’ என்றார்.

கார்லோ காஸ்டநேடாவுக்கு சும்மா அமர்ந்திருப்பது பெரும் பிரச்சினையாக இருந்தது. ஆனால் டான் ஜுவான் அதையே வலியுறுத்தியதால் வேறு வழியில்லாமல் அப்படியே கவனித்து வந்தார். சில வித ஓசைகளை டான் ஜுவான் ‘சம்மதம்’ என்றும், சில வித ஓசைகளை ‘எச்சரிக்கை’ என்றும், ‘ஏதோ உனக்குத் தகவல் சொல்கிறது’ என்றும் டான் ஜுவான் சொல்லிக் கொடுத்தார். வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் அவர் சொன்னது இருந்த போதிலும், கார்லோ காஸ்டநேடாவுக்கு தாவரங்கள் அவற்றின் உபயோகம் பற்றி மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்று தோன்றியது. அதை டான் ஜுவானிடம் அவர் சொன்னார்.

டான் ஜுவான் அவருக்கு ஏதோ சில கள்ளிச்செடி மொட்டுகளைத் தந்து சாப்பிடச் சொன்னார். அவர் அதைச் சாப்பிட்ட போது ஒருவிதமான போதை ஏற்பட்டது. அப்போது எதிரில் ஒரு கருப்பு நாய் நிற்பது போன்ற காட்சியும் கார்லோ காஸ்ட நேடாவுக்குத் தெரிந்தது. அதை அவர் டான் ஜுவானிடம் தெரிவித்தார். உடனே டான் ஜுவான் அது மெஸ்கேலிடோ என்ற அமானுஷ்ய சக்தி என்றும், அது கண்ணுக்குத் தெரிவது, ஒருவன் பிரபஞ்ச சக்திகளைப் படிக்க முடிந்தவனாக இருப்பான் என்பதைத் தெரிவிக்கிறது என்றும் சொன்னார். அப்போது தான் கார்லோஸ் காஸ்ட நேடாவுக்கு அந்தக் கிழவர் வெறும் தாவரங்களைப் பற்றி மட்டும் அறிந்தவர் அல்ல, பல அமானுஷ்யங்களையும் அறிந்த ஒரு ஷாமன் என்பது புரிந்தது.

பரபரப்புடன் கார்லோஸ் காஸ்டநேடா தனக்கு அனைத்தையும் கற்றுத்தருமாறு டான் ஜுவானைக் கேட்டுக் கொண்டார். ‘முதலில் பேச்சைக் குறை. அதிகம் கவனி. புரிந்து கொள். உன்னால் தாவரங்களுடனும், மிருகங்களுடனும் கூடப் பேச முடியும்’ என்று டான் ஜுவான் கூறினார்.

ஆனால் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக உள்ள கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு இயல்பாகவே நிறைய கேள்விகள் கேட்கவும், கேட்டவற்றைக் குறித்துக் கொள்வதும் படிப்பிற்குத் தேவையாக இருந்தது. ஆனால் டான் ஜுவானோ கார்லோஸ் காஸ்டநேடாவின் கல்வித் தேவைகள் குறித்து அக்கறை காட்டவில்லை. அவரது முதல் பாடமே பேச்சைக் குறை என்பதாக இருந்தது.

கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு பேச்சைக் குறைத்து கவனிக்க ஆரம்பிப்பது சுலபமாக இருக்கவில்லை. ஆனால் அதைக் கற்காமல், அடுத்ததைக் கற்றுத்தர டான் ஜுவான் சம்மதிக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் கார்லோஸ் காஸ்டநேடா பேச்சைக் குறித்து கவனிக்க ஆரம்பிக்க சில மாதங்களில் கற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் டான் ஜுவான் தாவரங்களின் மொழியையும், பூச்சிகளின் ரீங்கார ஒலி மொழியையும், பல்லியின் மொழியையும் கார்லோஸ் காஸ்டநேடாவுக்குக் கற்றுத்தந்தார். ‘எதையும் கண்ணால் பார்த்தே தெரிந்து கொள்ளப் பழகியிருக்கும் மனிதன், காதால் கேட்டும் எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்’ என்று டான் ஜுவான் கூறினார்.

அவற்றைப் படிப்பதும் கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு சுலபமாக இருக்கவில்லை. சிலவற்றை ஒழுங்காகக் கேட்க கண்களை மூடிக் கொள்ள வேண்டி இருந்தது. கண்களை மூடினால் தான், காதால் முழுமையாகக் கேட்க முடிந்தது. டான் ஜுவான் ‘அது தவறு’ என்றார். கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே காதையும் ஒரு மனிதன் முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்பது அந்த ஷாமனின் பாடமாக இருந்தது.

இப்படி டான் ஜுவானிடமிருந்து பல ஷாமனிஸ ரகசியங்களை கற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, தங்களுக்குள்ளான உரையாடல்களையும், டான் ஜுவானின் பாடங்களையும் விரிவாக எழுதி கார்லோஸ் காஸ்டநேடா தன் கல்லூரிப் பேராசிரியரிடம் ஆராய்ச்சிப்படைப்பாகக் கொண்டு போய் தந்தார்.

அந்தப் பேராசிரியர் அந்தக் கட்டுரைகளைப் படித்து விட்டு ‘இது ஆராய்ச்சிக் கட்டுரை போல இல்லை. ஆனால் சுவாரசியமாக இருக்கிறது. இதை நீ பல் கலைக்கழகப் பதிப்பாளரிடம் கொண்டு போய் காட்டு. புத்தகமாகப் போடலாம்’ என்று சொன்னார். ஒருபக்கம் ஆராய்ச்சிக் கட்டுரைப் புத்தகமாகத் தேர்ந் தெடுக்கப்படவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதை சுவாரசியமான புத்தகமாக ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று சொல்கிறாரே என்று கார்லோஸ் காஸ்டநேடாவுக்குச் சந்தோஷமாகவும் இருந்தது.

அந்தப் பக்கங்களைப் படித்த பதிப்பாசிரியருக்கு நூல் சுவாரசியமாக இருப்பதாகப் பட்டது. ஆனால் பல்கலைக்கழக பதிப்பில் வெளியே வரும் அளவு நம்பகத்தன்மை உள்ளதா? என்கிற சந்தேகமும் சேர்ந்தே வந்தது. பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையினரைக் கலந்தாலோசித்தார். அவர்கள் கார்லோஸ் காஸ்டநேடா எழுதியிருப்பது பலதும் ஷாமனிஸ அடிப்படை அம்சங்களை வித்தியாசமான ஆழமான கோணத்தில் அணுகி இருப்பதாகவே இருக்கின்றது என்று கருத்துத் தெரிவிக்கவே ‘ The Te-a-c-h-i-ngs ’ என்ற புத்தகத்தை முதலில் 1968-ம் ஆண்டில் வெளியிட்டது. வெளியிட்ட குறுகிய காலத்திலேயே அந்த நூலைப் பற்றிக் கேள்விப்பட்டு பலரும் அதை வாங்க வந்தார்கள். சீக்கிரமாய் அந்த நூல்கள் அனைத்தும் விற்றும் போயின.

இந்தக் கால கட்டத்தில் தான் சில தாவர இலைகள், பாகங்கள் சாப்பிட்டு உயர் உணர்வு நிலைகளுக்குப் போகலாம் என்பதையும் கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு டான் ஜுவான் சொல்லித்தந்தார். அப்போது கிடைப்பது போதை நிலைமை போல இருந்தாலும், மனிதன் முழுக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் முழு விழிப்புத் திறனுடன் இருக்க முடியும் என்று அவர் ஆணித்தரமாகச் சொன்னார். அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்லும் போது தீய சக்திகள் ஆக்கிரமிக்க வரும் என்றும், அப்படி ஆக்கிரமிக்க வரும் போது அவற்றை விரட்ட ஒரு விதமான போர்க்குரலை எழுப்பவும் கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு டான் ஜுவான் கற்றுத் தந்தார்.

கார்லோஸ் காஸ்டநேடாவுக்கு டான் ஜுவான் சாப்பிடக்கொடுத்த இலை, தழை, மொட்டுக்கள் எல்லாம் பல விதமான காட்சிகளைக் காட்ட ஆரம்பித்தன. அவை எல்லாம் போதையால் தோன்ற ஆரம்பித்த காட்சிகளாக கார்லோஸ் காஸ்டநேடா நினைத்தார். அவர் நினைப்பதற்கு ஏற்றது போல் ஒரு முறை அவர் ஒரு காகமாய் மாறியது போலவும், ஆகாயத்தில் பறப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. ஆனால் டான் ஜுவானோ ‘நீ கண்டது போதையினால் ஏற்பட்ட காட்சிப்பிழை அல்ல. உன் உணர்வு நிலைகளில் நீ மாற முடிந்த மாற்றங்கள் அவை. ஒரு விதத்தில் அவை உண்மையே’ என்றார்.

அவர் சொன்னதை நம்ப பகுத்தறிவு கார்லோஸ் காஸ்டநேடாவை அனுமதிக்கவில்லை. ஆனால் முழுமையாக நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஒரு நாள் அவர் ஆரம்பத்தில் காட்சியாகப் பார்த்த கருப்பு நாயே அவர் எதிரில் வந்து நின்றது. அதை மெஸ்கேலிடோ என்ற அமானுஷ்ய சக்தி என்றும், அது கண்ணுக்குத் தெரிவது ஒருவன் பிரபஞ்ச சக்திகளைப் படிக்க முடிந்தவனாக இருப்பான் என்பதைத் தெரிவிக்கிறது என்றும் டான் ஜுவான் சொல்லியிருந்தது நினைவுக்கு வர கார்லோஸ் காஸ்டநேடா செய்வதறியாமல் திகைத்தார். 

Next Story