முப்பெரும் தேவியர் வழிபட்ட அன்னை
மகிஷாசுரமர்த்தினி தேவகன்னியர்கள் முன்னூறு பேரின் முன் தோன்றி காட்சி கொடுத்தார். இதனால் அன்னை ‘முன்னுதித்த நங்கை’ என்று அழைக்கப்பட்டார்.
மகிஷாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். பின்னர் பிரம்மனிடம் இருந்து, ‘ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்று வரம் பெற்றான். பெண்கள் பலம் இல்லாதவர்கள் என்பது அவன் கருத்து. அந்தக் கருத்தால் தனக்கு அழிவே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டான். அந்த கர்வத்தால் தேவர்களை துன்புறுத்தினான்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர், தம்மில் இருந்து கருநிறத்தில் ஒரு ஒளியை தோற்றுவித்தார். விஷ்ணுவிடமிருந்து வெண்மை நிற ஒளியும், பிரம்மாவிடமிருந்து சிவப்பு நிற ஒளியும் தோன்றி, மூன்றும் ஒன்றாகக் கலந்தன. அந்த ஒளிப்பிழம்பில் இருந்து பராசக்தி தோன்றினாள். அந்த அன்னை அனைத்து தெய்வங்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று, மகிஷாசூரனை அழித்தாள்.
வெற்றிக்களிப்பில் அன்னை தெற்கு நோக்கி வந்து நிலை கொண்ட திருத்தலமே சுசீந்திரம். இந்த அன்னையை தேவகன்னியர்கள் முன்னூறு பேர் வேள்வி செய்து வழிபட்டனர். அப்போது மகிஷாசுரமர்த்தினி தேவகன்னியர்கள் முன்னூறு பேரின் முன் தோன்றி காட்சி கொடுத்தார். இதனால் அன்னை ‘முன்னுதித்த நங்கை’ என்று அழைக்கப்பட்டார்.
ஒரு முறை இந்திரன் தன் சாபம் நீங்க முன்னூறு தேவ கன்னியர்களை அழைத்து யாகம் செய்தான். அதில் ஒரு தேவகன்னி மட்டும் வரவில்லை. இதனால் இந்திரனின் யாகம் முழுமை அடைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து முன்னுதித்த நங்கை, முன்னூறு தேவகன்னியரில் ஒருவராக தோன்றினாள். வேள்வி நிறைவு பெற்றது. இந்திரனின் சாபமும் நீங்கியது. இந்த நிகழ்வால் அன்னையை ‘முன்னூற்றி நங்கை அம்மன்’ என்றும் அழைக் கிறார்கள்.
ஒரு முறை அனுசுயை தேவியால் முப்பெரும் தேவர்களும் குழந்தைகளாக மாற்றப்பட்டனர். அவர்களை மீண்டும் சுய உருபெற வைக்க, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் ‘முன்னுதித்த நங்கை’ அம்மனை வழிபட்டுள்ளனர். முப்பெரும் தேவியர்கள் வழிபட்ட ஆதிபராசக்தியே சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மனாக அருள்கிறாள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் அம்பிகையின் மேல் பல் வரிசை விழுந்த ‘பிருகு பீடமாக’ போற்றப்படுகிறது. இதனை சுசி பீடம் என்றும் கூறுகிறார்கள்.
ஆலயத்தில் சுமுகியும், சுந்தரியும் துவார பாலகிகளாக அருள, கருவறையில் முன்னுதித்த நங்கை அம்மன் அருள்கிறாள். பத்து திருக்கரங்களுடன் சூலம், கட்கம், கதை, கேடயம் தாங்கி, அபய வரத முத்திரைகளுடன் ஒரு காலை மடக்கி, இன்னொரு காலின் கீழ் மகிஷன் இருக்க சூலாயுதத்துடன் திருக்காட்சி தருகிறாள்.
முன்னுதித்த நங்கை அம்மன் திருமேனி, கடுசர்க்கரை யோக மருந்தால் ஆனதாம். கடுசர்க்கரை யோகமருந்து என்பது செம்மண், குந்தரிக்கம், குலுகுலு சர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சயம், பசு நெய், எள் எண்ணெய் மற்றும் பலவித மூலிகைச்சாறு ஆகிய எட்டுப் பொருட்களால் ஆனது. எனவே இங்கு அம்மனுக்கு அபிஷேகம் இல்லை. மாறாக அம்பாள் முன் உள்ள மகாமேரு ஸ்ரீ சக்கரத்தை பத்ரகாளியாக ஆவாகனம் செய்து அதற்கே அபிஷேகம் நடக் கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் தெப்பக் குளக்கரையின் வடக்கில், முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில், கன்னியாகுமரி செல்லும் வழிப்பாதையில் சுசீந்திரம் இருக்கிறது.
Related Tags :
Next Story