அல்லாஹ்வை நினைவு கூருதல்...


அல்லாஹ்வை நினைவு கூருதல்...
x
தினத்தந்தி 5 Oct 2017 10:00 PM GMT (Updated: 5 Oct 2017 6:58 AM GMT)

திக்ரைத் தவிர அல்லாஹ்வை வணங்குவதற்கான வழிபாடுகள் ஒவ்வொன்றிற்கும் வரைமுறைகளை வல்ல நாயன் வகுத்திருக்கிறான்.

வ்வுலகில் எங்குமே இல்லாமல் இருந்த நம்மை, தாயின் கருவறையில் உருவாக்கி, உயிர் கொடுத்து, உருவமும் கொடுத்து இப்பூமியில் நம்மை ஜனிக்கச் செய்தவன் எங்கும் நிறைந்திருக்கும் அந்த இறைவனே. அவன் நம்மைப் படைக்க நாடியிராவிட்டால் நாம் இன்று உயிரும் சதையுமாய் உலாவிக் கொண்டிருக்க மாட்டோம். 

எனவே சர்வ வல்லமை பொருந்திய அந்த வல்ல நாயனுக்கே நம்முடைய நன்றியையும், விசுவாசத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அவன் நமக்களித்த அருட்கொடைகளுக்காக அவனிடமே மிக்க அன்பு கொண்டிருக்க வேண்டும். அந்த அன்பினை, வழிபாடுகளில் ஒன்றான ‘திக்ரு’ எனப்படும் ‘நினைவுகூருதல்’ வழியாக வெளிப்படுத்தலாம். 

திக்ரைத் தவிர அல்லாஹ்வை வணங்குவதற்கான வழிபாடுகள் ஒவ்வொன்றிற்கும் வரைமுறைகளை வல்ல நாயன் வகுத்திருக்கிறான். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமையான வழிபாடுகளுக்கு குறிப்பிட்ட காலமும், நேரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் ‘திக்ரு’ செய்வதற்கு காலம், நேரம் பார்க்க வேண்டியதில்லை. மனிதர்கள் எந்நிலையிலும், படுத்தவாறோ, உட்கார்ந்த நிலையிலோ, ஓடிக்கொண்டிருக்கும் பொழுதோ, பிரயாணத்திலோ, இன்னும் தூக்கத்தில் கூட இறைவனை நினைவுகூரலாம். மனதால் மட்டுமன்றி, நாவை அசைத்து அவனை நினைவு கூருவதால் அவனின் பொருத்தத்தையும், நெருக்கத்தையும் பெறலாம். 

கடமையான வழிபாடுகளைத் தவற விடுவதும், சரியாக செய்யாமல் விடுவதும் நாளை மறுமை நாளில் நம்மை அல்லாஹ்வின் முன் குற்றவாளிகளாக நிறுத்தி விடும். திக்ரைப் பொறுத்தவரையில் அதனைச் செய்யாமல் விட்டால் அல்லாஹ்வின் பார்வையில் அது குற்றமாகக் கருதப்பட மாட்டாது. ஆனால் அதனை அல்லாஹ்வின்பால் உள்ளன்பு கொண்டு செய்வதால் நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தருவதுடன், நமது மனம் தேவையில்லாத சிந்தனையில் ஈடுபடுவதை விட்டும், நமது நாவு வீணானவற்றையும், வம்பு பேசுவதை விட்டும் தடுப்பதில் திக்ரைப் போன்ற சிறந்த வழிபாடு ஏதுமில்லை.

திக்ரைப் பற்றி குர் ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள். (திருக்குர் ஆன் 33: 41, 42)

‘அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து அவனை) திக்ரு செய்து வருவது மிகப் பெரிய காரியம்’ என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு கிறான். (29:45)

‘என்னடியான் என்னை நினைவுகூரும் பொழுதெல்லாம், தன் உதடுகளால் என்னை உச்சரிக்கும் பொழுதெல்லாம் நான் அவன் கூடவே இருக்கிறேன்’ என இறைவன் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

‘தன்னை நினைவுகூருபவர்கள் குறித்து அல்லாஹ் வானவர்களிடம் பெருமை பாராட்டுவதாக ஜிப்ரீல் (அலை) தன்னிடம் கூறியதாக அண்ணல் நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்’. 

ஒன்றாகக் கூடியமர்ந்து இறைவனை ‘திக்ரு’ செய்து விட்டு கலைகின்ற ஒவ்வொரு கூட்டத்தார் களிடமும் ‘எழுந்து செல்லுங்கள், உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது’ என்று சொல்லப்படு கிறது. 

அல்லாஹ்வை நினைவுகூருபவர்களை அவன் நேசிக்கிறான். எந்த அளவுக்கென்றால் ‘என்னைப் பற்றி அடியான் எப்படிக் கருதுகிறானோ அப்படியே இருக்கிறேன் நான்’ என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

‘ஒரு அடியான் தன்னுள்ளத்தில் என்னைப் பற்றி எண்ணினால் நானும் என்னுள்ளத்தில் அவனைப் பற்றி எண்ணுகிறேன். தன்னைச் சுற்றியுள்ள மக்களிடையே அவன் என்னை நினைவுகூர்ந்தால் என்னைச் சுற்றியுள்ள அதை விடவும் சிறந்தவர்களிடையே அவனை நானும் நினைவு கூருகிறேன். என்னை நோக்கி அவன் ஒரு சாண் நகர்ந்து வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நகர்ந்து வருகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நகர்ந்து வந்தால் நான் அவனை நோக்கி இரண்டு முழம் நகர்ந்து வருகிறேன். இன்னும் என்னை நோக்கி அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடி வருகிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்.

உறுப்புகளுக்கு விசாரணை நடத்தப்படும் மறுமை நாளில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்ததை நாவும், விரல் நுனிகளும் எடுத்துச் சொல்லும்.

அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரிய சொற்கள் நான்கு. அவை, ‘அல்ஹம்துலில்லாஹ்’, ‘ஸுபுஹானல்லாஹ்’, ‘அல்லாஹு அக்பர்’, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ ஆகியவையாகும். இவற்றில் எதை வேண்டுமென்றாலும் முன்பின் சொல்லிக்கொள்ளலாம்.

எப்பொழுதெல்லாம் தேவையில்லாமல் நம் மனம் அலைபாய்கிறதோ அப்பொழுதுகளில் எல்லாம் அதிகமதிகம் அவனை நினைவுகூர்ந்து நன்மைகளை அள்ளிக்கொள்வோம். இன்னும் நம் தவணைக் காலம் முடியும் தறுவாயில், உயிர் பிரியும் அந்த நேரம் உள்ளமெல்லாம் அவனின் நினைவு நிறைந்திருக்க, அவனை சந்திக்கப் போகும் மகிழ்ச்சியில் மனதாலும், நாவாலும் படைத்த இறைவனை நினைவு கூருதல் பெரும் பாக்கியம். அந்த அற்புதமான பெரும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.

ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை.

Next Story