பக்திப்பாதையில் வரும் திடீர் இழப்புகள்


பக்திப்பாதையில் வரும் திடீர் இழப்புகள்
x
தினத்தந்தி 5 Oct 2017 10:30 PM GMT (Updated: 5 Oct 2017 6:50 AM GMT)

உலகில் உண்மையான பக்திப்பாதையில் நடப்போரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் இவர்கள் இருக்கும் இடம் உடனடியாகத் தெரிந்துவிடும்.

ல்வகை அறிவு பெற்றிருந்தாலும் பெருமையின்மை, அநியாயமாக குற்றம்சாட்டப்பட்டாலும் பொறுமை, பேதங்கள் பார்க்காமல் உதவும் பண்பு, உள்நோக்கம் இல்லாத செயல்பாடு என்பது போன்ற தனிப்பட்ட நற்குணங்கள் மூலம் மற்றவரால் இயேசுவின் பக்தன் எளிதாக அடையாளம் காணப்பட்டுவிடுவான். 

இயல்பு வாழ்க்கையில் அனைவரும் கொண்டிருக்கும் எரிச்சல், கோபம், பழிவாங்குதல், பாகுபாடு, பொய் போன்ற இயல்பு குணங்கள் இல்லாததால் அவன் எல்லா தரப்பினரையும் ஈர்த்துவிடுகிறான்.

பேச்சில், போதனையில், இயேசுவின் நற் குணங்களைப் பற்றி திறமையாக எடுத்துச் சொன்னாலும், உண்மை பக்தி இல்லாதவனால் தனிப்பட்ட நடத்தையில் அந்த குணங்களை வெளிப்படுத்த முடியாது. 

திறமையான பேச்சை நம்பிவிடுவதால், அப்படி போதிப்பவனின் இயல்பு குணத்தின் அடிப்   படையிலான நடத்தையை பெரும்பாலானோர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆன்மிகத்திலும்கூட உண்மை பக்தி மறைக்கப்பட்டு, திறமை அடிப்படையில் போதகம் கணக்கிடப்படுகிறது.

பக்திப் பாதைக்கு வந்துவிட்டால்கூட அதனால் ஏற்படும் உற்சாகத்தையும், அனலையும் காலப்போக்கில் சிலர் இழந்து, உலக நெருக்கடியால் மீண்டும் இயல்பு குணங்களின்படி செயல்படத் தொடங்கிவிடுகின்றனர். இது மிகப்பெரிய இழப்பாகும். இது, இலவசமாக கிடைத்த பங்களாவை பராமரிக்காமல் பழுதடைய விட்டுவிட்டு மீண்டும் குடிசை வீட்டை நோக்கிச் செல்வதைப் போன்றதாகும். 

எனவே இதை உண்மை பக்தர்கள் உணர்ந்து, ஒருமுறை பெற்ற பக்தியை இழந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தீர்க்கதரிசி எலியாவை மகாபஞ்சம் உண்டாயிருந்த சாறிபாத் என்ற நகரத்துக்கு போவதற்கு இறைவன் கட்டளையிட்டார். அங்கு உணவு கொடுத்து பராமரிப்பதற்காக விதவைக்கு ஏற்கனவே கட்டளையிட்டுவிட்டதாக இறைவன் சொன்னார். இதற்கு குடும்பப் பெண்ணை இறைவன் தேர்வு செய்யவில்லை. அந்த விதவையிடம் இறைவன் நேரடியாக பேசியதாக வேதம் கூறவில்லை. ஆனால் இறைபக்தனை நம்பும் வகையில் அவளது இதயத்தை இறைவன் பக்குவப்படுத்தி இருப்பார்.

சாறிபாத்தில் எலியா அவளை அடையாளம் கண்டு எளிதாக தரக்கூடிய தண்ணீரை கேட்டார். விதவை நிலையில் ஒரு ஆணுக்கு தண்ணீர் கொடுப்பது கடினமானதுதான், என்றாலும் இறைவனால் பக்குவப்படுத்தப்பட்ட இதயம் அவளை தடை செய்யவில்லை. இறைசித்தத்தை நோக்கிய முதல் அடியாக, தண்ணீர் எடுக்கச் சென்றபோது எலியா அடுத்த கட்டளையாக, உணவு கொடு என்றார். அவருக்கு உணவு கொடுக்கவும் அவள் மறுக்கவில்லை. 

ஆனால் இருக்கும் சிறிதளவு மாவு, தனக்கும் தனது மகனுக்குமே போதுமானதல்ல என்கிறபோது இன்னொருவருக்கு எப்படி தர முடியும் என்பது அவளது கேள்வியாக இருந்தது.

இப்போது எலியாவை தனது வீட்டில் ஏற்பதற்கு அவளிடம் ஒரு அதிசயத்தை இறைவன் நடத்தியாக வேண்டும். உண்மையான பக்திப்பாதைக்குள் நுழையும்போது எல்லாருமே அற்புதத்தை அனுபவித்திருப்பார்கள். விடவே முடியாதபடி அடிமைப்படுத்தி இருந்த சரீர ரீதியான பாவங்களை முழுவதுமாக மறந்துபோயிருப்பது, பாவங்கள் மீது ஏற்படும் மிகப்பெரிய வெறுப்பு போன்ற இயற்கையை மீறிய அனுபவங்களை அனுபவித்திருக்க முடியும். இப்படிப்பட்ட அற்புத அதிசயங்களே, அந்த பக்தனை இறைவனை நோக்கி ஓடச் செய்யும் கிரியாஊக்கியாக இருக்கின்றன.

உணவை தர முடியாத நிலையில் இருந்த விதவையிடம் ஒரு கட்டளை வைக்கப்படு   கிறது. அப்பம் தயாரித்தால் அதிக மாவு ஆகக்கூடும் என்பதால் சிறிய அடையை செய்து, முதலில் எனக்குக் கொடுத்துவிட்டு பின்னர் நீங்கள் பசியாறுங்கள். அப்போது மாவும், எண்ணெயும் பஞ்ச காலம் முடியும்வரை பாத்திரத்தில் இருந்து வந்துகொண்டே இருக்கும் என்று எலியா கூறினார். எலியா கூறிய இறைவார்த்தைக்கு கீழ்ப்படிந்தாள்.

குறைவுபட்ட மாவைப் பற்றிய முணுமுணுப்பை விட்டுவிட்டு, இறைநீதியை  நிறைவேற்றும் விதமாய் அடை செய்ய மாவை எடுத்தபோது அற்புதம் நிகழ்ந்தது. 

நமது வாழ்க்கையிலும் பல குறைவுகள் உள்ளன. அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, வாழ்க்கை முழுவதும் இறைநீதியின் அடிப்   படையில் நடந்துகொள்வதற்கு முடிவு செய்து, அதன்படி நடக்கத் தொடங்கினால், ஆத்ம தேவைகள், வாழ்க்கைத் தேவைகள் என எல்லாவற்றையுமே இறைவன் அதிசயமாய் தரத்தொடங்கிவிடுகிறார்.

ஆனால் புறந்தள்ளப்பட வேண்டிய குறைபாடுகளை முன்னிருத்திக்கொண்டு, பலர் அதை நீக்குவதற்காக யாரையெல்லாமோ தேடித்தேடி அலைகின்றனர். இறைப்பணியாளர்களிடம் போய் அற்புதங்களுக்காக ஜெபிக்கின்றனர். ஆனால் குறைவுகள் தீராமலும் அற்புதங்களை அடையாமலும் போய்விடுகின்றனர். 

இறைநீதியின் பாதையில் நம்மை முதலில் சரியாய் திருப்பிக்கொண்டுவிட்டால், அதிசயங்களுக்காக மற்றவர்களிடம் போய் நிற்கத் தேவையில்லை. இறைநீதிபற்றி தெரிந்த பிறகு அதற்கேற்றபடி திருப்பிக் கொள்ளாமல், எவரிடம் போய் நின்றாலும் அதிசயம் நடக்கப்போவதில்லை.

அள்ள அள்ளக் குறையாத மாவையும், எண்ணெயையும் பஞ்சகாலத்தில் விற்றிருந்தால் அவள் பணக்காரி ஆகியிருக்கலாம். அதை அவள் செய்யவில்லை. அற்புதமாகக் கிடைத்துள்ள தாலந்துகளை, உண்மையான ஆன்மிக போதனை இல்லாத பஞ்சம் உள்ள இந்த காலத்தில் பணத்துக்காக விற்காமல், அதை இறைவனின்  சித்தத்தின்படி பயன்    படுத்த வேண்டும்.

விதவையின் வாழ்க்கை அதிசயத்துடன் போய்க்கொண்டிருந்த நிலையில் மகன் வியாதியால் செத்துப்போனான். இறைசித்தத்தின்படி பக்தனை பராமரிக்கும் ஊழியத்தில் உள்ள விதவைக்கு, சகிக்கமுடியாத இழப்பை ஏன் இறைவன் அனுமதிக்க வேண்டும்? ஏன் இப்படி நடந்தது என்று அவள் எலியாவைக் கேட்க, ஏன் அப்படி செய்தீர் என்று இறைவனை எலியா கேட்க, அங்கு அமைதி குலைந்தது.

பக்திக்கு வந்து அற்புதங்களை கண்ட பிறகும், அனைத்து காரியங்களிலும் இறைநீதியை வெளிப்படுத்தாமல் இயல்பான குணங்களின்படி செயல்படுவது அக்கிரம செய்கையாகும். 

‘அதை உணர்ந்து அந்த விதவை புலம்பு  கிறாள்’ (1 ராஜா.17:18). 

(அவள் எந்த சம்பவத்திலோ இறைச்சொல்லை உண்மை என்று நம்பாமல் மீறியிருக்கிறாள் என்பதை 24–ம் வசனத்துடன் ஒப்பிட்டு அறியலாம்). 

ஆக, அவளது அக்கிரமத்தை நினைவுபடுத்தவும், இறைவனின் அற்புத செய்கையை மீண்டும் அவளுக்கு நினைவுபடுத்தி, பக்திப்பாதையில் தன்னை திருத்திக்கொள்வதற்கும் அங்கு மகனின் சாவு அனுமதிக்கப்படுகிறது.

தன் அக்கிரமத்தை உணர்ந்ததால், மகனை எலியா உயிருடன் எழுப்பும் அளவுக்கு பெரிய அற்புதமும் இறைவனால் நிகழ்த்தப்படுகிறது. அதன் பின்னரே, இறைவன் சொல்வதே உண்மை என்பதை 100 சதவீதம் நம்புகிறேன் என்று கூறினாள் (24–ம் வசனம்). எனவே நாமும் பக்திப்பாதையில் இழப்புகள் நேரிடும்போது, நம்மை நாம் ஆராய்ந்து நம்மிடம் உள்ள குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

Next Story