குடும்ப சிக்கல் நீக்கும் அர்த்தநாரீஸ்வரர்
சென்னை– பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர் அடுத்துள்ளது தாஷ்பிரகாஷ் பேருந்து நிறுத்தம். இந்த பஸ்நிறுத்தத்தின் அருகில் உள்ள ஆராவமுதன் கார்டன் முதல் தெருவில் இருக்கிறது இந்த ஆலயம்.
சென்னை எழும்பூர்– பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் மூலவர் சிவலிங்க மூர்த்தி வடிவத்தில் அர்த்தநாரீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கருவறையின் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உருவச்சிலை உள்ளது. இந்த ஆலய மூலவரான சிவலிங்கத்தின் ஆவுடையார், மூன்றரை அடி விட்டம் கொண்டது என்பது தனிச்சிறப்பாகும். மூலவரின் கருவறைக்கு வெளியே விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இந்த ஆலயத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள், கருடாழ்வாருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன.
இத்தல அம்பாளின் திருநாமம் திரிபுரசுந்தரி என்பதாகும். இவ்வாலய ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால், கணவன்–மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பச் சிக்கல் விலகும் என்கிறார்கள். மேலும் திருமணப் பேறும், குழந்தைப்பேறு அமையும் இத்தல இறைவனை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
Related Tags :
Next Story