கந்த சஷ்டியின் மகிமை


கந்த சஷ்டியின் மகிமை
x
தினத்தந்தி 24 Oct 2017 4:00 AM GMT (Updated: 23 Oct 2017 12:52 PM GMT)

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே, கந்த சஷ்டிப் பெருவிழா.

25–10–2017

கந்தசஷ்டி


முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே, கந்த சஷ்டிப் பெருவிழா. சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழா. கச்சியப்ப சிவாசாரியாரின் கந்த புராணமும், பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.

தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மன், அவன் தம்பிகளாகிய தாரகாசூரன், சிங்க முகன் ஆகியவர்களோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது, கந்த சஷ்டிப் பெருவிழா. செவ்வேல் பரமனாகிய கந்தனுக்கும், சூரபத்மனுக்கும் போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர். போருக்குப் பின்னர் முருகன் இந்திரன் மகளாகிய தெய்வானையை மணம் முடித்த இடம் திருப்பரங்குன்றம். அது ஏழாம் நாள் விழா. இதற்கிடைப்பட்ட ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரத நாட்களாக அனுசரிக்கப்படுகிறது.

செந்தமிழ் நாட்டில் நடைபெற்ற வரலாற்றை மையமாகக் கொண்ட செந்   தமிழ்க் கடவுளின் தெய்வ பெருவிழாவே கந்த சஷ்டிப் பெருவிழா. ஆன்மாக்           களுக்கு அல்லது மானிட உயிர்களுக்கு மூன்று வகையான அழுக்கள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம். அதை ஒட்டி ஆன்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் மாயை, கன்மம். மாயையானது உலகப் பொருட்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டுபண்ணும். ஞானிகளைக் கூட மயங்க வைத்துவிடும். சூரபத்மனின் ஒரு தம்பியாக நின்ற தாரகாசூரன் மாயை மயமாக நின்று செயல்படுபவன்.

அடுத்த அழுக்கானது கன்மம். இதுவும்  நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும். சூரபத்மனின் மற்றொரு தம்பியான சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன். சூரபத்மனோ ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறுநாட்களில் அவைகளை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்த சஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்.

இந்த மூன்று அழுக்குகளிலிருந்து நீங்கிய மனிதனின் ஆன்மா, இறைவனடி சேர்ந்து இன்புற்றிருக்கும். உலகமும், உலகப் பொருட்களும் இறைவன் படைப்புகள் என்று உணர்ந்தால் மாயையிலிருந்து விடுபடலாம். தீவினைகளை எப்போதும் செய்யக் கூடாது. நல்வினைகளைச் செய்யும் போது அவைகள் நம் முயற்சியென்று கருதாமல், அவைகளை இறைவன் நம் மூலமாகச் செய்விக்கிறான் என்று உணர வேண்டும். அப்போது நல்வினைப் பயன் நம்மைச் சாராது. மறுபிறப்பும் ஏற்படாது. அற வாழ்க்கையை மேற்கொண்டு, எப்போதும் இறைவனைச் சிந்தித்து எல்லா நிகழ்வுகளும் அவனால் நிகழ்கின்றன என்று கருதினால் ஆணவத்திலிருந்து விடுபடலாம்.

இத்தத்துவத்தை நம் கையினுள்ள ஐந்து விரல்கள் மூலம் அறியலாம். பெருவிரல் இறைவனையும், அதற்கடுத்த ஆள்காட்டி விரல் ஆன்மாவையும், மற்ற மூன்று விரல்கள் முறையே ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளைக் குறிக்கும். ஆள் காட்டி விரல் மற்ற மூன்று விரல்களோடு இணைந்திருப்பது ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளுடன் இணைந்திருப்பதைக் குறிக்கும். ஆள்காட்டிவிரல் மற்ற மூன்று விரல்கள் இணைப்பிலிருந்து விலகி சற்று வளைந்தவுடன் பெருவிரலை அடைய            முடியும். அதாவது ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளிலிருந்து விடுபட்டால் இறைவனடி சேரும். தட்சிணமூர்த்தி சுவாமிகளின் ‘சின்முத்திரை’ இந்தத் தத்துவத்தைக் குறிக்கும். இறைவனுக்குத் தேங்காய் படைப்பதும் இத்தத்துவத்தையே குறிக்கிறது. பச்சை மேல்மட்டை மாயையும், நார் கன்மத்தையும், ஓடு ஆணவத்தையும் குறிக்கும். இம்மூன்றும் நீக்கப்பட்டவுடன் தேங்காயின் வெள்ளைப் பருப்பு சுத்த ஆன்மாவைக் குறிக்கும்.

கந்தப் பெருமான் சூரபத்மனை வென்று அவனைத் தன் மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் மாற்றினான். சிங்க முகசூரன் உமையமையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான். கந்த சஷ்டி விரதத்தை முறையாக அனுசரித்தால் கந்தப் பெருமான் திருவடியடைந்து நிலைத்த இன்பம் பெறுவோம்.

–சித்தாந்த ரத்தினம் செ.வே.சதாநந்தன்.

Next Story