ஞானம் நிறைந்த திருக்குர்ஆன்


ஞானம் நிறைந்த திருக்குர்ஆன்
x
தினத்தந்தி 27 Oct 2017 5:00 AM IST (Updated: 26 Oct 2017 4:40 PM IST)
t-max-icont-min-icon

இந்த உலகையும், அதைவிட பிரமாண்டமான பல ஆயிரம் கோள்களையும், அவை அனைத்தும் நீந்திச் செல்வதற்காக எல்லையற்ற பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தையும் மிகநுட்பமாக படைத்து, பரிபாலித்து இயக்குபவன், பூரண ஞானமுள்ள இறைவனே.

ந்த உலகையும், அதைவிட பிரமாண்டமான பல ஆயிரம் கோள்களையும், அவை அனைத்தும் நீந்திச் செல்வதற்காக எல்லையற்ற பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தையும் மிகநுட்பமாக படைத்து, பரிபாலித்து இயக்குபவன், பூரண ஞானமுள்ள இறைவனே.

அவனுடைய வல்லமையை கொண்டே ஒவ்வொரு பொருட்களும் உண்டாகுகின்றன. பின்னர் அவை அனைத்தும் அவன் வசமே மீட்கப்படுகின்றன என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

‘எவனுடைய கைவசத்தில் ஒவ்வொரு பொருட்களின் அதிகாரம் இருக்கின்றதோ, (அவன்) மகாத்தூய்மையானவன், அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்’ (36:83).

வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிந்து போகின்ற ஒன்றல்ல. அது முடிவில்லாத மறுமை வாழ்வை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டு செல்கின்றது.

இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்தவன் இறைவன். ஆனால் மனிதன் இதை உணராமல் இறைவனின் படைப்பு குறித்து தர்க்கம் செய்கிறான். இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

‘தன்னுடைய (ஆரம்ப) படைப்பை (மனிதன்) மறந்த நிலையில் அவன் ஓர் உதாரணம் காட்டுகின்றான். எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில், யார் உயிர்ப்பிப்பது என்று கேட்கின்றான். (நபியே!) நீர் கூறுவீராக, அவற்றை முதன் முறையில் படைத்தவனே! அவற்றை மீண்டும் உயிர்பிப்பான், இன்னும் அவன் ஒவ்வொரு படைப்பையும் முற்றிலும் அறிந்தவனாவான்’ (36:78,79).

‘மனிதன் – அவனை ஒரு துளி விந்திலிருந்து நிச்சயமாக நாம் படைத்தோம் (இதனை) சிந்தித்து பார்க்க வேண்டாமா? பிறரும் அவன் பகிரங்கமான தர்க்கவாதியாகவே இருக்கின்றான்’ (36:77).

விந்து துளிகளில் ஒன்றாக இருந்த மனிதன், உலகில் பலவீனமான நிலையிலேயே பிறந்து, பின்னர் வளர்ந்து வலிமை பெற்ற பின்பு, தான் முன்பு இருந்த நிலையை மறந்து வீண் தர்க்கம் புரிவதிலே மகிழ்வு காணுகின்றான்.

இவ்வாறு தர்க்கம் செய்யும் மனிதன் இறைக்கட்டளைக்கு மாறுசெய்து சைத்தானின் மாயவலையில் சிக்கி ஏமாந்து விடுகிறான். இதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

‘ஆதமுடைய மக்களே! நீங்கள் சைத்தானை வணங்க கூடாது, நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதி, என்று உங்களிடம் நாம் உறுதிவாங்கவில்லையா?’ (36:60).

இப்படி இரக்கத்தோடு இறைவன் எச்சரித்த பின்பும் மனிதன் பாராமுகமாகவே இருக்கின்றான். இறைவனின் அத்தாட்சிகள் எத்தனையோ தன்னை சுற்றி இருந்தும் அதனை பார்க்க இயலாதவனாய் இருப்பதற்கு மனிதனுக்கு இரண்டு தடுப்புகள் இருப்பதாக குர்ஆன் கூறுவதை பார்ப்போம்.

‘அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்கு பின்னால் ஒரு தடுப்பையும் நாம் ஏற்படுத்தி விட்டோம், (இவ்வாறு) நாம் அவர்களை மூடிவிட்டோம் அவர்கள் (சிந்தித்து) பார்க்க மாட்டார்கள்’ (36:09).

இந்த உலகம் தான் நிச்சயமானது, சத்தியமானது என நம்புகின்ற மனிதர்களுக்கு உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலேயே போய்விடுகின்றது. அழிய கூடிய உடலையும், இந்த உலகையும் சத்தியம் என மனிதன் கருதும்போது, என்றும் அழியாத இறைவனையும், அவனது அத்தாட்சிகளையும் பார்க்க முடியாமலும், சிந்திக்க முடியாமலும் ஆகிவிடுகிறான்.

அப்படிப்பட்டவர்களுக்கு இவ்வாறு விளக்கம் தருகிறது திருக்குர்ஆன்:

‘இரவும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும், அதிலிருந்து நாம் பகலை சுழற்றி எடுக்கின்றோம். அப்போது அவர்கள் இருளில் ஆகி விடுகின்றனர்’. ‘சூரியன் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கு செல்கின்றது. இது முற்றிலும் அறிந்தவன் (யாவற்றையும்) மிகைத்தவனான (அல்லாஹ்வின்) ஏற்பாடாகும்’. ‘சூரியன் அது சந்திரனை எட்டிவிட முடியாது. இன்னும் இரவு பகலை முந்திவிடவும் முடியாது. ஒவ்வொன்றும் (அதனதன்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன’ (36:37–40)

விஞ்ஞானம்  வளர்ச்சியடையாத ஆறாம் நூற்றாண்டில் குர்ஆன் பேசிய இந்த ஞானத்தை அறிந்த இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இதுபோல் மனிதர்களுக்கு தேவையான ஞானம் அனைத்தும் திருக்குர்ஆனில் நிறைந்துள்ளது. இதை திருக்குர்ஆன் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது:

‘‘முற்றிலும் ஞானம் நிறைந்த இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக!. (நபியே!) நிச்சயமாக நீங்கள் நம்முடைய தூதர்களில் ஒருவர். (நீங்கள்) நேரான வழியில் இருக்கின்றீர்கள்’’. (36:2,3,4)

இறைவன் பூரண ஞானமுள்ளவன் அவன் அருளிய குர்ஆன் ஞானம் நிறைந்தது. அதனை பெற்றுத் தந்த நபிகளார் நேரிய வழியில் ஞானத்தை பெற்றவர்கள் ஆவார்கள். எனவே ஞானம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகவே உள்ளது. அதனை அடைய குர்ஆன் இவ்வாறு வழிகாட்டுகின்றது.

‘‘ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்’’. (8:29)

இறைவனை அஞ்சி நேர்வழியில் நடப்பதால் மட்டுமே ஞானத்தை பெறமுடியும், அந்த ஞானம் மனிதனின் உணரும் ஆற்றலை அதிகரிக்க செய்து அவனை நன்மையின் வழியில் அழைத்து செல்லும். அதனை அடைய பாடுபடுவது நமது பொறுப்பாகும்.

மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.



Next Story