பலப்படுத்தும் தேவன்


பலப்படுத்தும் தேவன்
x
தினத்தந்தி 27 Oct 2017 12:00 AM GMT (Updated: 26 Oct 2017 11:49 AM GMT)

அன்பானவர்களே! இயேசுவின் நாமத்தில் மிகவும் அன்புடன் வாழ்த்துகிறேன். நம் தேவன் உங்களைப் பெலப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பாராக!

ன்பானவர்களே! இயேசுவின் நாமத்தில் மிகவும் அன்புடன் வாழ்த்துகிறேன். நம் தேவன் உங்களைப் பெலப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பாராக! பலவிதமான வியாதிகளினாலும், வேதனைகளினாலும், பலவீனங்களினாலும் கலங்கிக் கொண்டிருக்கிற உங்கள் வாழ்வில் நிச்சயம் ஆண்டவர் ஒரு புதிய சக்தியைத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். நம்மைப் பலப்படுத்த தேவன் ஒருவரால் தான் முடியும்.

வேதம் சொல்லுகிறது, ‘‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’’. பிலிப்.4:13

தேவனுடைய பெலனை நாம் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்று இச்செய்தியின் மூலமாக உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்

‘‘...கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.’’ நெகே.8:10

‘நமக்கு எவ்வளவு வேதனைகள், பலவீனங்கள் வந்தாலும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்கிற விசுவாசத்தோடு  நாம் கர்த்தருக்குள் சந்தோ‌ஷமாயிருக்க வேண்டும். இரட்சிப்பின் சந்தோ‌ஷத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

பிசாசு சோர்வுகளைக் கொண்டு வந்து உங்கள் இருதயத்தைக் கவலைப்பட வைக்கும்போது, கர்த்தர் மேல் உங்கள் பாரங்களை வைத்து விட்டு சந்தோ‌ஷமாயிருங்கள். கவலைகள், வேதனைகள் உங்களைத் தாக்கும்போது உங்கள் சரீரமும் தானாகவே பலவீனமாகிவிடும். அப்படிப்பட்ட வேளைகளில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள். தேவனுடைய பெலன் நிச்சயம் உங்களை அளவில்லாமல் நிரப்பும்.

‘அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்’. 1 பேதுரு 5:7

கர்த்தருக்குக் காத்திருங்கள்

‘கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்’. ஏசா.40:31

பிரியமானவர்களே! நம் சரீரம் பலவீனமாயிருக்கும் நேரத்தில் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான காரியம் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும். கர்த்தரை நோக்கி அதிகமாக ஜெபிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நாம் அதிகமதிகமாய் ஜெபிக்கிறோமோ அந்த அளவுக்கு தேவ பெலனை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

வேதனை நேரங்களில் மனிதர்களைத் தேடி ஓடி அவர்களுக்காக காத்திருப்பதனால் எந்த பயனும் கிடையாது. மாறாக தேவனை நம்பி, அவரை நோக்கி ஜெபித்து அவருக்காக காத்திருக்கும் போது, கர்த்தர் உங்கள் வியாதிகளை குணமாக்கி, உங்களுக்கு நல்ல சுகத்தையும், பெலனையும் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். சோர்ந்து போகாமல் கர்த்தரையே சார்ந்து, அவர் ஒருவருக்கே காத்திருங்கள். விரைவில் அற்புதங்களை எதிர்பாருங்கள். ஒருபோதும் முணுமுணுக்காதீர்கள். பொறுமையோடு காத்திருங்கள்.

‘ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்’. மல்.4:2

வேதத்தை வாசியுங்கள்

‘என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி, என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய், அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக, அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள், அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்’. நீதி.4:20,21,22

மேற்கண்ட வேத வசனங்கள் நம் உடலுக்கெல்லாம் ஆரோக்கியத்தையும், பெலனையும், ஜீவனையும் கொடுக்கிறது என வாசிக்கிறோம். உண்மையாகவே வேத வசனங்களை நாம் வாசிக்கும் போது ஒரு விஷேசித்த பெலன் நம்மை நிரப்பும். பெலவீனமாயிருக்கும் போது நாம் அதிகமாக வேதத்தை சத்தமாக வாசிக்க, வாசிக்க அந்த வசனத்திலிருக்கிற வல்லமை நமக்குள் இறங்கி வந்து நம்மைப் பெலப்படுத்துகிறது.

பிரியமானவர்களே! வேதத்தை வாசிக்க அதிக நேரத்தை ஒதுக்குங்கள். அதை தியானியுங்கள். அதன்படி வாழுங்கள். நிச்சயம் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் தேவ பெலனால் நிரப்பப்படும்.

‘அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்’. சங்.107:20

பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

‘பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்’. அப்.1:8

பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் பெற்றுக்கொள்ளும்போது நாம் பெற்றுக் கொள்கிற முக்கியமான ஆசீர்வாதங்களுள் ஒன்று பெலன். பரிசுத்த ஆவியில் நிறைந்து நாம் ஜெபிக்க இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு தேவ வல்லமை நம்மை நிரப்புகிறது. அந்த வல்லமையில் நிரம்ப, நிரம்ப ஒரு விஷேசித்த பெலன் நம்மை நிரப்பும். அநேக வேளைகளில் பெலவீனம் என்னைத் தாக்கும் போதெல்லாம் ஆவியில் நிரம்பி ஜெபிக்கிற அந்த வேளையில் தானே தேவ வல்லமை என்னை நிரப்புகிறதை நான் உணர்ந்திருக்கிறேன்.

பிரியமானவர்களே! பெலவீனத்தினால் வேதனையோடு காணப்படுகிறீர்களோ? மனம் கலங்காதிருங்கள். நீங்கள் அபிஷேகம் பெற்றவர்களானால் இப்பொழுதே ஆவியில் நிரம்பி ஜெபிக்கத் துவங்குங்கள். ஒருவேளை நீங்கள் அந்த அபிஷேகத்தைப் பெறாதவர்களானால் இப்பொழுதே என்னை நிரப்பும் ஆண்டவரே என்று கேட்கத் துவங்குங்கள்.

‘கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்’ என்ற வேத வசனத்தின்படி தேவன் உங்களை தம் ஆவியினால் நிரப்புவார். அந்த ஆவியானவர் தாமே உங்களைப் பெலப்படுத்தி ஆசீர்வதிப்பார்.

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை–54


Next Story