கஷ்டங்களைத் தீர்க்கும் கால பைரவர்


கஷ்டங்களைத் தீர்க்கும் கால பைரவர்
x
தினத்தந்தி 8 Nov 2017 8:40 AM GMT (Updated: 8 Nov 2017 8:39 AM GMT)

சிவாலயங்களின் காவலர் பைரவ மூர்த்தி. இவர் நாயை வாகனமாகக் கொண்டவர். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்’ என்ற திருநாமம்.

11-11-2017 கால பைரவாஷ்டமி

சிவாலயங்களின் காவலர் பைரவ மூர்த்தி. இவர் நாயை வாகனமாகக் கொண்டவர். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்’ என்ற திருநாமம். ‘பீரு’ என்றால் ‘பயம்’ என்று பொருள். பயம் தரக்கூடியவர்; எதிரிகளை அஞ்ச வைப்பவர் பைரவர்.

காசியில் கால பைரவர், காரைக்குடி அருகில் உள்ள இலுப்பைக்குடியில் சொர்ணா கர்ஷண பைரவர், சீர்காழியில் சட்டைநாதர், வாஞ்சியத்தில் யோக பைரவர் என்று பல பெயர்களைக் கொண்டு விளங்குகிறார் இவர்.

இவருக்கு தனிச்சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது பைரவபுரம்! இதை ‘அழிவிடைதாங்கி பைரவபுரம்’ என்றும் சொல்வர். இங்கு சொர்ணகால பைரவர் கோவில் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர்; ரிஷப வாகன மகேஸ்வரியுடன் ருரு பைரவர்; மயில் வாகன கவுமாரியுடன் சண்ட பைரவர்; கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதன பைரவர்; குதிரை வாகன வாராஹியுடன் உன்மத்த பைரவர்; யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர்; சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர்; நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களை இங்கு காணலாம்.

ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து, நான் முகனாக ஆக்கினார் பைரவர். அந்த பிரம்மா வழிபட்ட தலம் இந்த ‘பைரவ புரம்’ என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கபாலம் ஆகியவற்றை தரித்தவராக மூன்று கண்ணினராக தரிசனம் அளிக்கிறார் சொர்ணகால பைரவர்!

ஆலய வரலாறு

பழங்காலத்தில் தொண்டை மண்டலம், தொண்டகாருண்யம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பவுத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். கி.பி. 3-ம் நூற்றாண்டில் இங்கு கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது. வட இந்திய மாணவர்கள் இங்கு பயின்றனர். ஹிமசீதன மன்னர் காலத்தில் அசுலங்கர் என்ற சமண அறிஞர், பவுத்தர்களுடன் வாதிட்டு வென்று அவர்களை நாடு கடத்தினார். பின்னர் இங்கு சமண கல்விக் கூடத்தை அமைத்தார். அப்போது இந்த ஊர் ‘அறவழித்தாங்கி’ என அழைக்கப்பட்டது.

பிற்காலத்தில் இந்தப் பகுதியை பல்லவர்களும், சோழர்களும் ஆட்சி செய்த போது சிவனை போற்றும் சைவ நெறியானது வளம் பெற்றது.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி.14-ம் நூற்றாண்டில்) வீர வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு ஒரு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே போர் மூண்டது. முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன், தன் படைகள் நாசமடைவதைக் கண்டு வருந்தினார். அன்று இரவு கால பைரவர் அவரது கனவில் தோன்றி ‘நீ வருத்தப்பட வேண்டாம். நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துணையிருப்பேன்’ என்றார். அடுத்தநாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றான். அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூருக்கு ‘அழிபடைத்தாங்கி’ எனப் பெயரிட்டான். வெற்றியை அருளிய கால பைரவருக்கு பெரியதொரு கோவிலையும் எழுப்பினான்.

இக்கோவிலின் மகிமையானது திருவண்ணாமலை மாவட்டம் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய ஸ்தல புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல விதமான வெற்றிக்கும் வழியமைத்து தருகிறார்.

இத்தல இறைவனை வெள்ளிக்கிழமைகளில் வில்வ மாலை சூட்டி, அர்ச்சனை செய்து வழிபட்டால் தரித்திரங்கள் விலகும். தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து, செவ்வரளிப் பூ கொண்டு, 11 அஷ்டமிகளில் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றியும், வியாபாரத்தில் லாபமும் உண்டாகும். 7 மிளகுகளை துணியில் கட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்தப் பொருட்கள் திரும்ப கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராகுகால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். நவக்கிரக தோஷம் அகலும்.

இந்த ஆலயம் வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம், மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம். வெம்பாக்கத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

-ராஜசேகர், செய்யாறு.


பைரவரில் முடியும் வழிபாடு

பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். ஏனெனில் அந்த நேரத்தில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக கூறப்படுகிறது. பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாக அறியப் படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதி யில் பைரவருக்கு தனி சன்னிதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.

செவ்வாய் அஷ்டமி


பொதுவாக அஷ்டமி பைரவரை வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும். அன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும். மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடந்தேறும்.

மேலும் செவ்வாடை சாத்தி, சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி, வெல்லம் கலந்த பாயசம், உளுந்து வடை, பால், தேன், பழம் நிவேதனம் செய்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல யோகங்களும் வந்து சேரும்.

இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.


அஷ்டவித அர்ச்சனை


ஈசனுக்குப் பஞ்சமுக அர்ச்சனை, கந்தனுக்கு ஷண்முக அர்ச்சனை செய்வது போல், பைரவருக்கு அஷ்டவித அர்ச்சனை செய்யப்படுகிறது. எட்டுப் பண்டிதர்கள் சுற்றி நின்று, தும்பை, செம்பருத்தி, ஆத்தி, கொன்றை, ஊமத்தை, செண்பகம், கள்ளி, நெருஞ்சி ஆகிய மலர், இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வதையே ‘அஷ்டவித அர்ச்சனை’ என்கிறார்கள். அதைத் தொடர்ந்து, பைரவரை மகிழ்விக்க எட்டுவிதமான அன்ன வகைகள், முக்கியமாக நெய்யில் ஊறிய வடை, தேனில் ஊற வைத்த வடை, தேனில் ஊறவைத்த இஞ்சி முதலியவை இடம் பெறும்.


பைரவர் காயத்ரி


‘ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்’

இந்த காயத்ரி மந்திரத்தை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாட்டின் போது 108 முறை பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும்.


இரண்டு நாய் வாகனம்


பொதுவாக பைரவர், தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். சில இடங்களில் வாகனம் இடப்பக்கம் தலை உள்ளவாறு காணப்படும். மிகவும் அதிசயமாக சில ஆலயங்களில் மட்டும் இரண்டு பக்கமும் நாய் வாகனத்துடன் வீற்றிருப்பதையும் நாம் பார்க்க முடியும். இப்படி இரண்டு நாய்களுடன் இருக்கும் பைரவரை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிடைக்கும். அந்திசாயும் நேரத்தில் வழிபாடு செய்தால், பாவங்கள் விலகும். அர்த்த சாமத்தில் வழிபட்டால் மனசாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், வளமான வாழ்வும் அமையும்.


உடலில் நவக்கிரகங்கள்


ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்திருப்பவர் பைரவர். மேலும் சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தியும் காட்சி தருவார். காலத்திற்கு அதிபதியான, காலத்தின் வடிவமான பைரவரின் திருஉருவத்தில் 12 ராசிகளும், அவற்றிற்குரிய நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தச் சிறப்புமிக்க வடிவத்தை, அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன், தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை மல்லிகார்ஜூனர் கோவில் வளாகத்தில் நிர்மாணித்துள்ளான்.

தலை-மேஷ ராசி, வாய்-ரிஷப ராசி, கை-மிதுன ராசி, மார்பு- கடகம், வயிறு-சிம்மம், இடை-கன்னி, புட்டம்-துலா ராசி, லிங்கம்- விருச்சிகம், தொடை-தனுசு ராசி, முழந்தாள்- மகரம், காலின்கீழ் பகுதி- கும்பம், பாதம்- மீன ராசி என்று சாஸ்திர, ஜோதிட நூல்கள் சொல்கின்றன.


காலத்தின் கடவுள் பைரவர்


விதை முளைத்து, வேர் ஊன்றி, செடியாகி, மொட்டு விட்டு, பூவாக மலர்ந்து, பிஞ்சாகி, காயகி மீண்டும் கனியாகி, நாம் பயன்பெற இறைவன் படைப்பில் பெரிதும் பங்கு பெறுவது காலமே. காலம்தான் அனைத்தையும் பக்குவம் அடையச் செய்கிறது. பக்குவப்பட்ட பண்டம் தான், நமக்கு முற்றிலும் பயனாகிறது. எனவே காலம் தான் கடவுள் அல்லது கடவுள் தான் காலமாகிறது. அந்தக் ‘காலக்கடவுள்’ தான் பைரவர் ஆவார். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில், மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. தொல்லைகள் அகன்றிட, மற்றவர் நமக்கு செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற தோஷங்கள் விலகிட, கர்ம வியாதிகளில் இருந்து விடுபட, அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திட, தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்க, வம்பு வழக்குகளில் வெற்றி பெற்றிட, பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிட, தொட்டது துலங்கிட, எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வென்றிட பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும். மனிதன் காலத்தின் பிடியில் சிக்கி முதுமை அடைகிறான். அந்த முதுமை நிலையை அடையும் வரை அவன் காலத்தின் பிடியில் சிக்கி பெறுகின்ற அனுபவங்கள் பலப்பல. அவ்வாறு பெறும் அனுபவங்கள் யாவும், பைரவரை ஆழ்ந்த பக்தியால் துதிப்போர்க்கு இன்ப அனுபவங்களாகவே அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

விதை முளைத்து, வேர் ஊன்றி, செடியாகி, மொட்டு விட்டு, பூவாக மலர்ந்து, பிஞ்சாகி, காயகி மீண்டும் கனியாகி, நாம் பயன்பெற இறைவன் படைப்பில் பெரிதும் பங்கு பெறுவது காலமே.

காலம்தான் அனைத்தையும் பக்குவம் அடையச் செய்கிறது. பக்குவப்பட்ட பண்டம் தான், நமக்கு முற்றிலும் பயனாகிறது. எனவே காலம் தான் கடவுள் அல்லது கடவுள் தான் காலமாகிறது.

அந்தக் ‘காலக்கடவுள்’ தான் பைரவர் ஆவார். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில், மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே.

தொல்லைகள் அகன்றிட, மற்றவர் நமக்கு செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற தோஷங்கள் விலகிட, கர்ம வியாதிகளில் இருந்து விடுபட, அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திட, தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்க, வம்பு வழக்குகளில் வெற்றி பெற்றிட, பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிட, தொட்டது துலங்கிட, எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வென்றிட பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

மனிதன் காலத்தின் பிடியில் சிக்கி முதுமை அடைகிறான். அந்த முதுமை நிலையை அடையும் வரை அவன் காலத்தின் பிடியில் சிக்கி பெறுகின்ற அனுபவங்கள் பலப்பல. அவ்வாறு பெறும் அனுபவங்கள் யாவும், பைரவரை ஆழ்ந்த பக்தியால் துதிப்போர்க்கு இன்ப அனுபவங்களாகவே அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


Next Story