பிளவை நோய் தீர்த்த முருகப்பெருமான்


பிளவை நோய் தீர்த்த முருகப்பெருமான்
x
தினத்தந்தி 15 Nov 2017 5:44 AM GMT (Updated: 15 Nov 2017 5:44 AM GMT)

இது புராணக் கதையல்ல.. வரலாற்று நிகழ்வு. ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்ற குன்றக்குடி பாமாலையில் வரும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

கி.பி. 1780-களில் சிவகங்கைச் சீமையை அரசாண்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் பல்வேறு கட்டங்களில் சுதந்திரப் போர் புரிந்து, இறுதியில் 1801-ல் துக்கிலிடப்பட்டவர்கள் பெரிய மருதுவும், அவர் தம்பி சின்ன மருதுவும்.

பிளவை நோய் தீர்த்த விபூதி

ஒருமுறை பெரிய மருதபாண்டியருக்கு பிளவை என்னும் நோய் ஏற்பட்டு, எவ்வளவு ராஜ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. வலி அதிகமாக இருந்ததால் துடித்துப் போனார்.

இந்த நிலையில் பெரிய மருதுவைப் பார்க்க வந்த ஒருவர், ‘ஒரு முருக பக்தர் வந்து, பிரார்த்தித்துக் கொண்டு திருநீறு பூசினால் குணமாகும்’ என்று தெரிவித்தார்.

உப்பு வாணிகம் செய்து கொண்டிருந்த காடன் செட்டியார் என்பவரை அழைத்து வந்தார்கள். அவர் தனது குலதெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு விபூதி பூசிவிட்டு கூட இருந்து உதவினார். ஓரிரு தினங்களில் பிளவைக் கட்டி உடைந்து வலி நீங்கியது.

இது புராணக் கதையல்ல.. வரலாற்று நிகழ்வு. ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்ற குன்றக்குடி பாமாலையில் வரும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

நோய் குணமான நெகிழ்ச்சியில் இருந்த பெரிய மருது, காடன் செட்டியாரின் குலதெய்வமான குன்றக்குடி ஆறுமுகனைப் பார்க்க விரும்பினார். சுற்றிலும் புதர் மண்டி, கவனிப்பின்றி இருந்த குன்றக்குடி மலைக் கோவிலைப் பார்வையிட்டு, திருப்பணிகளை செய்யத் தொடங்கினார். தாம் வந்து தங்கி பணிகளைப் பார்வையிட வசதியாக குன்றக்குடியில் ஒரு சிறிய அரண்மனையையும் நிறுவினார்.

திருப்பணிகள் செய்த மருதுசகோதரர்

திரு வீதிக்குத் தென்திசையில் உள்ள தீர்த்தக் குளத்தை செப்பனிட்டு, படித்துறைகள் கட்டி, சுற்றிலும் தென்னை மரங்களை நட்டு வைத்தார். அதற்கு ‘மருதாவூரணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

மூலவரின் பீடத்தின் கீழ் மாறியிருந்த எந்திரத் தகட்டை செப்பனிட்டு சாத்தினார். மூலவர் சன்னிதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னிதியில் அலங்கார மண்டபம் மற்றும் சுற்றுச் சுவர்களை கட்டினார். அங்குள்ள ராஜ கோபுரமும் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே ஆகும். அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்று பொறித்து, ஒரு தங்க கவசம் செய்து உற்சவ மூர்த்திக்கு சாத்தினார். தேர் செய்து, தைபூச விழாவினைப் பெரிய அளவில் நடத்தினார். காடன் செட்டியார் பெயரில் மண்டகப்படி ஏற்படுத்தி, அன்னதானச் சத்திரமும் கட்டினார் என்று தல வரலாறு கூறுகிறது.

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரரையே தனது வழிபடு தெய்வமாகக் கருதி, அங்கே ஒன்பது நிலை ராஜகோபுரம் அமைத்திருந்த மருது சகோதரர்கள், குன்றக்குடி சண்முகநாதரிடம் தீராத அன்பு கொண்டு திருப்பணிகள் செய்து உற்சவமூர்த்திக்கு எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தின் இரு தூண்களிலும் கூப்பிய கரங்களுடன் சிலை வடிவமாக இன்றும் காட்சி தருவது காலத்தால் அழியாத கலைச் சின்னமாகும். சிலைக்கு கீழே பிளவை நோய் தீர்த்த பெருமை கல்வெட்டில் காணப்படுகிறது.

ஆலய அமைப்பு

இன்று குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் இத் திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது. இதற்குக் காரணம், தொலைவில் நின்று பார்க்கும் போது, குன்றானது நிமிர்ந்து நிற்கும் மயில் போலத் தோற்றமளிப்பதே ஆகும்.

முருகப்பெருமானின் வாகனமாகிய மயில், தனது ஆணவத்தால் சாபம் பெற்றிருந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் வேலவன் இவ்வூருக்கு வந்து மயிலுக்கு சாப விமோசனம் கொடுத்து மலைமேல் குடி கொண்டதாகப் புராணக்கதை சொல்கிறது.

குன்றக்குடியில், மலைக் கோவில், கீழ் கோவில் என்றும் இருபகுதிகள் உள்ளன. கீழே குடைவரைக் கோவிலில் தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறார்கள். அவர்களுக்கு அருகில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் சிலை வடிவங்கள் உள்ளன.

மலையின் நுழைவு வாசல், மயிலின் தோகை போல் தோன்றுவதால், அங்கே உள்ள பிள்ளையார் ‘தோகையடி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். அவரை வழிபட்டுவிட்டு மலை ஏறத் தொடங்கினால், மேலே முருகனுக்கு காவடி எடுத்த இடும்பன் சன்னிதி உள்ளது. சற்று தள்ளி இடப்புறம் தேவியோடு தோன்றும் வல்லப கணபதி காட்சித்தருகிறார். மலைக் கோவில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு நம்மை வரவேற்கிறார்.

தலைவாசலில் தெற்குநோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. மலை மீது கோவிலில் ஒளி பிரகாரம்தான் உள்ளது. அதில் நால்வர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் ஆகியோர் சன்னிதிகளும், சோமாஸ்கந்தர், விசாலாட்சி சன்னிதிகளும் வடகிழக்கில் நவக்கிரக சன்னிதியும் விளங்குகிறது.

கருவறையில் கிழக்கு நோக்கியபடி மூலவர் ‘சண்முகநாதர்’ என்ற பெயர் பெற்று, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, சுகாசன நிலையில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்டும், நிற்கும் மயில் மீது வீற்றிருப்பது போல் இருக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்களில் முருகனுக்கு இருபுறமும் தேவியர் இருவரும் நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே வலதுபுறம் வள்ளியும், இடதுபுறம் தெய்வானையும் தனித்தனியாக மயில்களின் மீது இருப்பது வேறெங்கும் காணமுடியாத தோற்றமாகும்.

இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது பிரசித்தி பெற்றது.

பல குடும்பங்களுக்குக் குல தெய்வமாக விளங்கும் சண்முகநாதப் பெருமானிடம், மக்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து ‘நீயே காப்பு’ என்று தத்து கொடுத்துச் செல்வது அவர்களின் நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது.

ஆதீனகர்த்தரின் கட்டுப்பாட்டில் இயங்கும், குன்றக்குடி சண்முகநாத சுவாமி திருக்கோவில், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

மருது பாண்டியரின் பிளவை நோய் மட்டுமல்ல, மக்களின் பிணிகளையும், கவலை களையும் போக்க வல்ல அருணகிரிநாதர் பாடிய குன்றக்குடி குமரனை, நாமும் மலை ஏறிச் சென்று மனமாற தரிசிக்கலாமே.

அமைவிடம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் காரைக்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது, குன்றக்குடி. திருமயம் - திருப்பத்தூர் சாலையில் இருந்தும் செல்லலாம். கற்பகவிநாயகர் அருள்பாலிக்கும் பிள்ளையார் பட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்தான், குன்றக்குடி குமரன் இருக்கிறார்.

-டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர். 

Next Story