‘நீ கர்த்தரிடத்தில் கேட்டால் பெற்றுக்கொள்வாய்’


‘நீ கர்த்தரிடத்தில் கேட்டால் பெற்றுக்கொள்வாய்’
x
தினத்தந்தி 17 Nov 2017 12:15 AM GMT (Updated: 16 Nov 2017 7:53 AM GMT)

‘கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்’. (மத்.7:7).

மது பரம பிதா நன்மையானதை கொடுப்பது அதிக நிச்சயம். நாம் வேண்டிக்கொள்ளும் சில காரியங்கள் நமது பார்வைக்கு நன்மையாக தோன்றும். ஆனால் இறுதியில் அவை தீமை விளைவிக்கும் என்று தேவன் அறிந்தால் அவைகளைத் தரமாட்டார். தவறானவற்றைக் கேட்டால் கிடைக்காது. நன்மையானவற்றையே தருவார். நிச்சயம் தருவார். தேவனை விசுவாசித்து கேட்கவேண்டும்.

‘அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி...’ (1 சாமு. 1:10).

எல்க்கானா என்ற மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கு பிள்ளைகள் இல்லை. 

பெனின்னாள் அன்னாளை துக்கப்படுத்தி மிகவும் விசனப்படுத்தினாள். அன்னாள் ஆலயத்தில் சென்று மனங் கசிந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, ‘சேனைகளின் கர்த்தாவே, தேவரீர், அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உமது அடியாளை மறவாமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைத் தரவேண்டும்’ என்று கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றி விண்ணப்பம் செய்து கேட்டாள். 

சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அன்னாள் கேட்டதை தேவனிடத்தில் பெற்றுக்கொண்டாள்.

‘ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருளும் (1 இரா.3:9). 

சாலொமோன் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து கிபியோனில் மேடை கட்டி ஆயிரம் ஆடுகளை சர்வாங்க தகன பலிகளாகச் செலுத்தினான். கர்த்தர் சாலொமோனுக்கு ராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி ‘நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்’ என்று சொன்னார்.

சாலொமோன், ‘தேவரீர், உமது அடியானை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர். நானோ சிறு பிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்து கொண்ட, எண்ணி முடியாததும், எண்ணில் அடங்காததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் மத்தியில் ராஜாவாக அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியானுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்’ என்று கேட்டான். 

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.

தேவன் மீண்டும் சொப்பனத்தில் தரிசனமாகி, ‘உன் வார்த்தைகளின்படி செய்தேன், ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்கு தந்தேன். மேலும், நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்’ என்றார். 

சாலொமோன் உலகத்தில் தலைசிறந்த ஞானியாக இருந்தான். இறைவனிடத்தில் கேட்டதை பெற்றுக் கொண்டான்.

‘‘அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருந்த கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து, ‘ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்’ என்று சொல்லிக் கூப்பிட்டாள்’’ (மத்.15:22). 

தீரு, சீதோன் பட்டணங்களுக்கு இயேசு சென்ற போது, ஒரு ஸ்திரீ இயேசுவிடத்தில் வந்து, தனது மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள், அவளை சுகமாக்கும்படி கேட்டாள். ஆனால் அவளை சோதிக்கும் படியாக இயேசு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. 

சீடர்கள், ‘இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடு        கிறாள்’ என்றார்கள். 

இயேசு, ‘காணாமல் போன இஸ்ரவேல் ஜனங்களுக்காக அனுப்பப்பட்டேன், மற்றவர்களுக்கு அல்ல’ என்றார். 

அவள் வந்து, ‘ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும்’ என்று அவரை பணிந்து கொண்டாள். 

இயேசு அவளிடம், ‘பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல’ என்றார். 

அதற்கு அவள், ‘மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளை தின்னுமே’ என்றாள்.

அதற்கு இயேசு, ‘ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது’ என்றார். 

அந்நேரமே அவள் மகள் பிசாசின் பிடியிலிருந்து விடுதலையானாள். தன் மகளுக்குச் சுகம் உண்டாகும் என்று உறுதியாக நம்பினாள். இயேசு அந்தப் பெண்ணின் விசுவாசத்தைப் பாராட்டினார். கானானிய ஸ்திரீ கர்த்தரிடத்தில் கேட்டதைப் பெற்றுக் கொண்டாள்.

விசுவாச உறுதியுடன் கேட்டால் நாம் விரும்புவது நிச்சயம் கிடைக்கும். உங்கள் விண்ணப்ப ஜெபம் உறுதியுடன் இருக்கவேண்டும். 

கேட்கிறவர்கள் பாவத்தில் இருந்தால் அவர்கள் ஜெபம் கேட்காதபடி பாவம் தடைசெய்யும். ‘இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோ‌ஷம் நிறைவாய் இருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்’. 

ஆமென். 

சி. பூமணி, 
ஆசீர்வாத சுவிசே‌ஷ ஊழியம், சென்னை–50.

Next Story