நேசிப்பின் உயர்வு


நேசிப்பின் உயர்வு
x
தினத்தந்தி 13 Dec 2017 6:46 AM GMT (Updated: 13 Dec 2017 6:46 AM GMT)

தன்னைத் தவிர மற்றவர்களைப் பாவியாகவும், குற்றவாளிகளாகவும் பார்ப்பதுதான், மனித குணம். திருத்திக் கொள்வதற்கு எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு என்பதை, நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

“என்னுடைய உடைமைகளில் பாதியை ஏழை மக்களுக்குக் கொடுத்து விடுகிறேன். யார் மீதாவது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, எதையாவது கவர்ந்து இருப்பேனேயானால், அதை நான்கு மடங்காகத் திருப்பி அளித்து விடுகிறேன்”

புனித லூக்கா என்ற நற்செய்தியாளரின் நற்செய்தியை இவ்வாரம் படித்து இன்புறுவோம்.

அக்காலத்தில், இயேசு பெருமான் ‘எரிகோ’ என்ற நகருக்குச் சென்று, அந்த நகரின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அங்கு ‘சக்கேயு’ என்ற பெயரைக் கொண்ட செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர், வரி தண்டுவோருக்குத் தலைவராகவும் இருந்தார்.

இயேசு பெருமானை, ‘யார் அவர்?’ என்று பார்க்க அதிக ஆவல் கொண்டார். மக்கள் கூட்டம் மிகுதியாக இருந்ததால், அவரைப் பார்ப்பதற்கு இயலவில்லை. சக்கேயு, குள்ளமாக இருந்ததுதான் இதற்குக் காரணம். அவர் முண்டியடித்துக் கொண்டு ஓடிப் போய், இயேசு பிரானைப் பார்ப்பதற்காக, அத்தி மரத்தில் ஏறி நின்றார்.

இயேசு பெருமான் அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்தார். அங்கே, சக்கேயு நின்று கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவர், சக்கேயுவைப் பார்த்து, “சக்கேயுவே, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்று கூறினார். அவர் வேகமாக இறங்கி வந்து, மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.

இதைக் கண்ட அனைவரும் “பாவியிடம் தங்கப் போகிறாரே இவர்” என்று தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டனர்.

சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே! என்னுடைய உடைமைகளில் பாதியை ஏழை மக்களுக்குக் கொடுத்து விடுகிறேன். யார் மீதாவது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, எதையாவது கவர்ந்து இருப்பேனேயானால், அதை நான்கு மடங்காகத் திருப்பி அளித்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்.

இயேசு பெருமான், சக்கேயுவை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கத்தான் மானிட மகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

இந்த நற்செய்தியை நாம் மிகவும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும். தன்னைத் தவிர மற்றவர்களைப் பாவியாகவும், குற்றவாளிகளாகவும் பார்ப்பதுதான், மனித குணம். திருத்திக் கொள்வதற்கு எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு என்பதை, நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சக்கேயுவின் செயலைக் கவனியுங்கள். இயேசு பெருமகனாரைப் பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார். அதற்காக அவர், கூட்டத்திற்கு முன்னே சென்று, தன் உருவம் குள்ளம் என்ற காரணத்தால், அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி நிற்கிறார்.

‘இவருக்காக இவ்வளவு கூட்டம் கூடுகிறதே! யார் இவர்?’ இந்த விருப்பமும், ஆசையுமே அவரை மாற்றியிருக்க வேண்டும். ஏதோ ஒரு முடிவில்தான் அப்படிச் செயல்படுகிறார். அவரின் உள்ளத்தை இயேசு பெருமகனார் அறிந்த காரணத்தால், “சக்கேயுவே, வேகமாக இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் தங்க வேண்டும்” என்கிறார். மிக வேகமாக இறங்கி, அவரை சக்கேயு வரவேற்கிறார்.

இவ்வார்த்தைகளை, சக்கேயு எதிர்பார்த்திருக்க முடியாது. ஏனென்றால், ‘தான் பெரிய பாவி’ என்பதைச் சக்கேயு உணர்ந்திருக்கக் கூடும்.

சக்கேயுவின் துடிதுடிப்பும், ஆர்வமும், இயேசு பெருமகனாரைப் பார்க்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், அவரை மேல் நிலைக்கு உயர்த்தி விட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சக்கேயுவைப் பற்றி அறிந்தவர்கள் எப்படி இச்செயலை ஏற்றுக் கொள்வார்கள்? அதைவிட ஒரு படி மேலே சிந்தித்தால், இயேசு பெருமான் கூறிய வார்த்தையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும் வெளியில் சொல்லவும் முடியவில்லை. தங்களுக்குள்ளே இவ்விதமாக ‘பாவியிடம் தங்கப் போகிறாரே!’ என்று முணுமுணுக்கிறார்கள்.

அவர்களின் முணுமுணுப்பு, இயேசு பிரான் அறியாததல்ல. அவர் முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா? ஏன் முழுவதையும் அறிந்தவரல்லவா?

இவர்களின் முணுமுணுப்பு சக்கேயுவின் மனதையும் தொட்டிருக்கக் கூடும்.

எது எப்படியிருந்தாலும், சக்கேயுவின் மனம் மாறுகிறது. ‘பாவியையும் இவரால் நேசிக்க முடிகிறதே’ என்றும் எண்ணியிருப்பார். உடனே அவரைப் பார்த்து, தான் செய்யப் போகும் செயல்களைப் பட்டியலிடுகிறார். தன் உடைமைகளில் பாதியை, ஏழைகளுக்குத் தானமாக அளிக்கச் சம்மதிக் கிறார். யார் மீதாவது பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, சம்பாதித்திருந்தால், அவற்றை நான்கு மடங்காகத் திருப்பி அளிக்கிறேன் என்கிறார்.

இந்த மனம் சக்கேயுவுக்கு எப்படி வந்தது? என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம். எப்பொழுது வந்தது? என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம். தான் பெரும் பாவியாயிற்றே! என்பதை உணர்ந்த அவர், எல்லோரையும் போல, தூயவரைப் பார்க்கத் துடிக்கிறார். அந்தத் துடிப்பால், ஏதோ நடக்கப்போகிறது என்றெல்லாம் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட அன்றே, அவரின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு தூண்டுதல் அவரை, தன் முனைப்போடு செயல்பட வைக்கிறது. செயலில் இறங்கு கிறார். தூயவரின் வார்த்தைகளால், மனம் திருந்துகிறார்.

ஆம்! இயேசு பெருமான் இவ்வுலகிற்கு வந்த நோக்கமே, மனித குலத்துக்கு மீட்பு அளிக்கத்தான் என்பதை உணர்வோம். அதிலும் குறிப்பாக பாவிகளை அதிகம் நேசித்தார். நற்செய்திகளை முழுதும் புரட்டிப் பார்த்தால், ஏழைகள், கை விடப்பட்டவர்கள், நோயாளிகள், சிறார்கள் இவர்களை நேசித்தார் என்பது ஒருபுறம் இருக்க, பாவிகளை நேசிக் கிறார் என்பதுதான் நற்செய்தியில் பரவிக் கிடக்கிறது.

இந்த மந்தையைச் சேராத ஆடுகள் நிறைய உண்டு. வழி தவறிக் கிடக்கின்றன. அவைகளையும், இந்த மந்தைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான், அவருடைய உள்ளக்கிடக்கை. மன்னிப்பும், நேசிப்பும் இயேசு பெருமகனாரின் இரு கண்கள் என்பதை, நற்செய்தியைப் படிப்போர் உணர்ந்தாலே போதுமானது. அவை நம்மை வழி நடத்தும்.

தன்னைப் போல பிறரையும் நேசி என்ற அடிப் படைக் கருத்தை எடுத்துரைத்த இயேசு பெருமகனாரை எண்ணிப் பார்ப்போம்.

‘ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு’

பிறர் குற்றம் போல, தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலை பெற்ற மக்கள் உயிர்க்கு வரக்கூடிய துன்பம் உண்டோ?

இத்திருக்குறளையும், நற்செய்தியோடு இணைத்துப் பார்த்து, நல்லவராக வாழ முற்படுவோம். நன்னெறி தொடர, இதுபோன்ற நற்சிந்தனைகள் தொடர்ந்து வலிமையூட்டட்டும்.

-செம்பை சேவியர் 

Next Story