ஆன்மிகம்

துன்பங்கள் தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர் + "||" + Kuchanur Saneeswarar who solves misery

துன்பங்கள் தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர்

துன்பங்கள் தீர்க்கும் குச்சனூர்  சனீஸ்வரர்
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கிறார் குச்சனூர் சனீஸ்வர பகவான். இங்கு ஆடிமாதத் திருவிழாவும், இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சி விழாவும் சிறப்பானதாகும்.
‘தினகரன் மான்மியம்’ என்கிற பழமையான நூல் வாயிலாகவே, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் பற்றிய தல வரலாற்றை அறிய முடி கிறது.

அதன்படி முன்பொரு காலத்தில் தினகரன் என்ற மன்னன், திரு

மணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாது இருந்திருக் கிறான். கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்ட மன்னனின் கனவில் ஒரு முறை அசரீரி ஒலித்தது.

‘உன் வீட்டுக்கு ஒரு அந்தணச் சிறுவன் வருவான். அவனை வளர்த்து வந்தால் குழந்தை பிறக்கும்’ என்றது அந்தக் குரல்.

அதன்படி ஒரு சிறுவன், மன்னரிடம் வந்து சேருகிறான்.  அவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வரும் வேளையில், அரசிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவனுக்கு   ‘சதாகன்’ என்று பெயர் சூட்டினர். காலங்கள் உருண்டோட சந்திரவதனன் ஒரு மன்னனுக்கு உரிய வீரம், திறமை, விவேகத்துடன் இருந்ததால், அவனுக்கே முடிசூட்டினான் மன்னன். இந்தநிலையில் தினகரனுக்கு சனி தோ‌ஷம் பிடித்தது. இதனால் பல சோதனைகளையும், துன்பங்களையும் அவன் சந்தித்தான்.  

தனது வளர்ப்பு தந்தை அடையும் துன்பத்தை கண்டு மனமுடைந்த சந்திரவதனன், தந்தையின் துன்பம் நீங்க, சுரபி நதிக்கரைக்குச் சென்று சனியின் உருவத்தை நிறுவி வழிபடத் தொடங்கினான். அந்த வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான், அவன் முன்தோன்றி, ‘முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் சனி தோ‌ஷம் பிடிக் கிறது. இதன் காலம் ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள். உன் தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளின் விளைவே இது’ என்றார்.

ஆனால் சந்திரவதனன், ‘‘என் தந்தைக்கு வரும் துன்பங்களை எனக்கு கொடுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சனி பகவானிடம் கோரிக்கை வைத்தான். ஒப்புக்கொண்ட சனீஸ்வர பகவான், சந்திரவதனனுக்கு கடுமையான பல துன்பங்களையும், சோதனைகளையும் கொடுத்தார்.

அப்போதும் சந்திரவதனன், சனீஸ்வர வழிபாட்டை நிறுத்தவில்லை. சுரபி நதிக்கரையில் தீவிர வழிபாட்டில் இறங்கினான். ஒரு கட்டத்தில் மனம் இரங்கிய சனீஸ்வரபகவான் சந்திரவதனன் முன் தோன்றி, அவனது துன்பங்களை களைந்ததுடன் ‘பக்தர்கள் தங்களது குறைகளை உணர்ந்து இவ் விடத்துக்கு வந்து என்னை வணங்கினால், அவர் களுக்கு சனிதோ‌ஷத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்’ என்று சொல்லி மறைந்தார். மேலும் அவ்விடத்தில் சுயம்புவாகவும் எழுந்தருளினார்.

சுயம்பு சனீஸ்வரருக்கு, குச்சுப்புல்லினால், ஒரு கூரை வேய்ந்தான் சந்திரவதனன். குச்சுப்புல் கூரை என்பதே நாளடைவில் குச்சனூர் என்றானது.

தேனியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் குச்சனூர் உள்ளது. இதற்கு வீரபாண்டி வழியாகவும், சின்னமனூர் வழியாகவும் செல்லலாம். சின்னமனூரில் இருந்து உப்புக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை அடையலாம்.

காகத்துக்கு எள் சாதம்

குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அதனை ஆடிப்பெருந்திருவிழா என்பர். சிறப்பாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுயம்பு சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வர். ஆடி மாதம் முழுவதும் வருகிற சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கோவிலில் ‘விடத்தை மரம்’ தல மரமாகவும், ‘கருங்குவளை மலர்’ தல மலராகவும், ‘வன்னி இலை’ தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், ‘எள்’ தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள்   எள் விளக்கு போடுவதும், கருப்பு வஸ்திரம் சாத்தி, காகங்களுக்கு எள்ளு சாதம் பிரசாதமாக படைத்து சனீஸ்வரரை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.